நடுப்பக்கக் கட்டுரைகள்

மானுடவியல் ஆய்வு தேவை!

நெல்லை சு. முத்து


தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தை புத்தாண்டுத் தொடக்கம் என்கிறோம். தமிழர் மரபுப்படி, ஒவ்வொரு தமிழ் மாதமும் பெளர்ணமியை ஒட்டித்தான் தொடங்கும். சித்திரை மாத சூரியன், தன் சுழற்சி அச்சுத் தள்ளாட்டத்தினால், அன்று மேட ராசியில் இயங்கியது; இன்றோ அதற்கு முந்தைய ராசியான மீன ராசியில் இயங்குகிறது. இந்த ஆண்டு, தமிழ்நாட்டில் இரவும் பகலும் சம அளவில் அமையும் இந்த "சமநோக்கு நாள்' பங்குனி பிறந்து, பெளர்ணமிக்குப் பின்னர் நான்காம் நாள் (மார்ச் 20) நிகழ்ந்தாயிற்று. அதன்படி, பங்குனி உத்திரம் ஆகிய பெளர்ணமி நாள், ஆண்டுத் தொடக்கமுமாகத் திருத்தப்பட்டுக் குறிப்பிடப்பட வேண்டும். 

2000 ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் மாத மத்தியில் இரவு வானில் முழு நிலவு, கன்னி உடுக்கணத்தில் 'ஸ்பைகா' விண்மீனில் அமைந்தது. அதனையே நம் முன்னோர் வானுறையும் தெய்வம் என்பதால் "சித்தர்' என்றனர். பின்னாளில் அது, சித்திரை ("சித்ரா') என மாதத்தின் பெயரும் ஆயிற்று.  திருநெல்வேலி மேல ரதவீதியில் உள்ள ஓர் இடம் "சித்தர் முடுக்கு',  என்று இன்றும் வழங்கப்படுகிறது.  
சங்க இலக்கியமான "நெடுநல்வாடை'யில் (வரி: 160) ஆடு போன்ற தோற்றம் கொண்ட "மேஷ' உடுக்கணத்தில் சூரியன் ஊர்ந்து திரிவதாகத் தோன்றும் காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. கோபெருந்தேவியின் கட்டிலுக்கு நேர் மேல் தீட்டப்பெற்ற விதான ஓவியம், "ஆடு தலை'யாகக் கொண்ட பன்னிரண்டு ராசித் தோற்றம் ஆகும். 

மேஷம், கிரேக்கத்தில் "ஏரிஸ்' ('ஏறு'), ஆங்கிலத்தின் "இயர்' (ஆண்டு) ஆகி ஆண்டுத் தொடக்கம் ஆயிற்று. அது எட்டாம் போப் கிரகொரி என்பவரால்  ஜனவரிக்கு மாற்றப்பட்டது பிந்தைய  வரலாறு. 

"விஷு' (கேரளம்), "பைஷாகி' (பஞ்சாப்), "போயில போஷாக்' (வங்காளம்), "பாண சங்கராந்தி' (ஒடிஸா), "ரோங்காளி பிஹு' (அஸ்ஸாம்) என்று பிற மாநிலங்களிலும் வேறு வேறு பெயர்களில் புத்தாண்டு வழங்கப்படுகிறது. இந்த மாநிலங்கள் அனைத்தும் முன்னொரு காலத்தில் பெளத்தம் செழித்த பிரதேசங்கள். 

விசு, "பிஹு', "பைஷாகி, "போஷாக்' போன்ற சொற்கள் இன்றைய தமிழில் அல்லது பண்டைய பாலி மொழியில் விஷாக்-விசாகம்-வைகாசி போன்றவற்றின் மருவல்கள். "புத்த' ஆண்டு தான் புத்தாண்டு எனவும் சிந்திக்கலாம்.

மன்னர் குடும்பத்திலிருந்து புத்தமதம் பிறந்தது. ஆனாலும் புத்தர், அவர் காலத்தில் புத்த மதத்தினைத் தோற்றுவிக்கவில்லை. சமணம், கிறித்துவம், இஸ்லாம் அனைத்துமே அவர்களின் சித்தாந்தங்களைப் பின்பற்றுபவர்களால் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை.

கெளதம புத்தர் காலத்தைச் சேர்ந்தவர், ஜைன மதத்தின் இறுதி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர். இவரது இயற்பெயர் நிகண்டநாத புத்தர் என்பது. "புத்தர்' என்றால் அறிவு மிக்கவர் என்று பொருள்.

கி.மு.528-ஆம் ஆண்டு தமது 35-ஆவது வயதில், (இன்றைய பிகாரைச் சார்ந்த) "மகத நாட்டிலுள்ள உறுவெலாவிலே (இன்று கயா எனப்படும் புத்த கயா அல்லது போதி கயா என்னும் ஊரில்) வெசாக (வைகாசி) மாத பூரணையன்று (பெளர்ணமி நாளில்) (புதன் கிழமையான 35-ஆம் பிறந்த நாளில்) போதி மரத்தின் கீழ் அமர்ந்திருக்கையில் மாமுனைவர் (புத்தர்) மிக உச்ச ஞானநிலை பெற்றார்....' (மகாவம்சம், பக். 2) என்று ததாகதரின் வருகை குறிக்கப்பெறுகிறது. 

"அன்று முதல் சித்தார்த்தன் என்னும் தந்தையிட்ட பெயரும், கெளதமன் என்று மரபினால் வந்த பெயரும் போய், புத்தர், ததாகதர், ஜினர் என்னும் பெயர்களே அவனுக்கு வழங்கப்படலாயின' என்கிறார் அ. மாதவையா (சித்தார்த்தன் - புத்த சரிதை). பு(த்)தன் ("அறிவு மிக்கவர்') பிறந்த கிழமை - புதன் கிழமை. பு(த்)தன் என்பது புத்திமானைக் குறிக்கவும், புதன் ஆகிய அறிவுக் கோளினைச் சுட்டவும் இன்றும் எடுத்தாளப்படுகிறது. 

ஒரு வகையில் "வைகாசி' திங்கள் வளர்பிறையின்போது வானில் "விருச்சிக' விண்மீன் கூட்டம் தோன்றும் "விசாகத் திருநாள்' (ஜூன் 12, 2022) தமிழ்க் கடவுள் முருகனுக்கும் விசேஷ நாள் ஆகிறது. கெளதம புத்தரின் அன்னை மாயாவின் உடன் பிறந்த சகோதரர்களில் ஒருவர் சுப்ர புத்தர். மற்றொருவர் தண்டபாணி. அதே பெயர்களில் தான் பின்னாளில் சுப்ரமணியன், தண்டபாணி என்று எல்லாம் முருகக் கடவுள் அழைக்கப்பட்டாரோ என்னவோ? பெளத்தம் பரவிய மலேசியா, சிங்கப்பூர் போன்ற கீழை நாடுகளிலும், இலங்கையிலும் முருகர் கோயில்கள் பிரசித்தம்.

சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களை வதம் செய்த விசாகப் பண்டிகை போலவே, இன்றைக்கும் ஆந்திர மாநிலத்தின் சில கிராமப்புறங்களில் "அஷுர் கானா' எனப்படும் இஸ்லாமியத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.  ஹுûஸன் மாவீரனுக்குரிய பத்துநாள் விழாவின்போது அந்த தியாகச் செம்மலின் புகழ் பாடும் "மர்சிய' ("மர்ஹிய', "மாரிய':  மரித்த வீர "மற'வனைப் போற்றும்) வாகைப்பாடல் பாடப்பெறுமாம். இவ்வாண்டில், சித்திரை, ஏப்ரல் 14 -இல் தொடங்கினாலும், சித்ரா பெளர்ணமிதான் (ஏப்ரல் 16) , மாதத் தொடக்கமாக இருந்திருக்க வேண்டும். இடையில் புனித வெள்ளி வருகிறது. ஜைனர்களின் மஹா வீர ஜெயந்தியும், கிறித்துவர்தம் புனித வெள்ளியும், ஈஸ்டர் பெருஞாயிறும் எல்லாம் ஒரே கால கட்டத்திலேயே இடம்பெறுவதும் ஆய்வுக்குரியது. 

இஸ்லாமியர்க்கும் ஏப்ரல் "ரமலான்' மாதம், நோன்புக்காலம். அதே மாதம் ஸ்ரீராம நவமி விசேஷம் இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இஸ்லாமிய ஆண்டின் பன்னிரண்டாவதான "து-அல்-ஹிஜ்ஜா' (ஜூன் 30 - ஜூலை 29, 2022) மாதத்தில் "ஹஜ்' குறிப்பிடத் தகுந்தது. இதன் ஆறு நாள் புனிதப் பயணத்தின்போது, மெக்காவில் காபாவிலுள்ள பெரிய மசூதியை ஒவ்வொரு இஸ்லாமியரும் ஏழு முறை வலம் வர வேண்டும். சாத்தானாக உருவகிக்கப்படும் மூன்று தூண்கள் மீது ஏழு கூழாங்கற்களை எறிய வேண்டும். இச்சடங்கினையும் "ராமி-அல்-ஜமாரத்' என்றே இஸ்லாமியர் வழங்குகின்றனர். 
"மார்' என்றால் வடமொழியில் அடித்தல் ஆகும். தமிழில் "மற'வர் வீரர். "மார்ஸ்' என்றால் கிரேக்க, லத்தீன் மொழிகளில் போர்க் கடவுள்தாம். செவ்வாய் கிரகத்தினையும் குறிக்கும். "மார்' என்ற சொல்லினைப் பண்டைய கரோஷ்டி வாசிப்பின்படி புரட்டி வாசித்தால் "ராம்' என்று வரும். ஆண்  ஆட்டினை ஆங்கிலத்தில் "ராம்' என்கின்றனர். முஸ்லிம் ஆண்டின் முதல் மாதமான "மொஹரம்' பண்டிகை ஆகஸ்ட் (ஆவணி-புரட்டாசி) மாதம் வருகிறது. 

கேரளத்தில் "கொல்ல வருஷம்' என அழைக்கப்படும் மலையாள வருடத்தின் முதல் மாதம் சிங்கம். சிங்கம் போன்ற தோற்றம் கொண்ட சிம்ம உடுக்கணத்தில் சூரியன் இயங்கும் காலம் "ஸ்ராவண' (ஆவணி) மாதம். ஆவணி மாத வாக்கில் கிறித்தவ தேவ மாதா பிறந்த தினமும் கொண்டாடப்படுகிறது. 
மூன்றடி மண் கேட்ட வாமன அவதாரத்தினால், பாதாளத்தில் தள்ளப்பட்ட மகாபலி என்னும் கேரள மன்னரை பூக்களம் அமைத்து வரவேற்கும் நாள் திருவோணப் பண்டிகை. ஒரு பக்கம் "ச்ராவண', திருமாலுக்கு உகந்தது என்பதைப் போலவே, மறுபக்கம் "சரவண' ஆகிய முருகனுக்கும் உகந்தது என்றறிக. சிரவணர் என்போர் சமணர் அல்லது தேராவாத பெளத்தர் என்பர். இன்னிசை முழக்குடன் வேலன் முருகேறி ஆடவும், மகளிரும் மைந்தரும் முருகனைப் பேணித் தழூஉப் பிணைந்து குரவை ஆடவும், ஆட்டும் பாட்டுமாக பேரிசை நன்னன் (முருகன்) பெரும்பெயர் விழாவாகத் தெருவெங்கும் நடந்தது என்று "மதுரைக்காஞ்சி' (611-619) விவரிக்கிறது.

ஒரு வகையில் பங்குனி மாத உத்திர நட்சத்திர தினம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. பக்த பிரஹலாதனைக் கொல்ல முயன்ற அரக்கன் ஹிரண்ய கசிபுவின் சகோதரி அரக்கி "ஹோலி'காவை எரிப்பதைக் குறிப்பால் உணர்த்துவதற்காக, ஹோலி பண்டிகை நாளில் மரபாக பெருந்தீ மூட்டுவது உண்டு. அதுவும் பங்குனி உத்திர நாளினை ஒட்டியே வரும்.

சிந்துவெளியில் வாழ்ந்த பண்டைய "சிந்துக்கள்' ஆகிய இந்துக்களில் பெளத்தர்களும் குறிப்பிடப்பெற்றனர். ஆதி ஈரானிய வழக்கில் ùஸமி-ஹெமி (பாதி), "யெஸ்'-"யெஹ்' (ஆமாம்), சமணம்-அமணம் என்றாவதைப் போல, ஒலிப்பில் ஸிந்து - ஹிந்து ஆனது. மறையோம்புவோர் என்பது பண்டைய தமிழ் வழக்கு. 

மணிமேகலைக் காவியத்தில் வரும் ஆபுத்திரன் கதையில், பண்டைய வாராணசி (காசி) நகரில் சாலி என்ற பெளத்த பார்ப்பனியப் பெண்ணுக்கும், அபஞ்சிகன் என்ற வைதிக அந்தணருக்கும், "காப்புக்கடை கழிந்து' எல்லை மீறி உடற்கலப்பு நிகழ்ந்தது. அதில் கருவுற்றவள், பாவத்தைப்போக்க தெற்கே, தென்குமரி வந்து நீராடினாள். அங்கிருந்து திரும்பும் வழியில் பிறந்த குழந்தையை அங்கேயே விட்டுச் சென்றாள். சாலியின் அந்த சிசுவுக்கு ஒரு பசு, பாலூட்டி வளர்த்ததால் அந்தக் குழந்தைக்கு "ஆ புத்திரன்' (பசுவின் மகன்) என்பது பெயராயிற்று. 

பாருங்கள், இந்த வடநாட்டுக் கதை, சீத்தலைச் சாத்தனாருக்கு தமிழ் மொழியில், எந்த வகையில் தெரிந்திருக்குமோ? 

இந்தப் பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் வெறுமனே ஆடு - மேடம் -  ரம்சான் - ராம் எல்லாம் தற்செயலாகத் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. மானுடவியல் சார்ந்தும், மொழியியல் அடிப்படையிலும் இவை சில ஒற்றுமைகளைக் குறிக்கின்றன. ஆய்வு மேற்கொள்ள மேற்கொள்ள புதுப்புது உண்மைகளை நாம் கண்டறியக்கூடும்.

கட்டுரையாளர்: இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா், சிவகாசி, சாத்தூரில் இறுதிக்கட்ட பிரசாரம்

கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி இறுதிக்கட்ட பிரசாரம்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT