நடுப்பக்கக் கட்டுரைகள்

கற்றனைத்து ஊறும் அறிவு!

கிருங்கை சேதுபதி

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேச மொழிகளுள் ஒன்று ‘பஞ்சாங்கத்தில் இந்த மாதத்தில் இந்தத் திதியில் இத்துணை மழை பெய்யும் என்று கணக்கிட்டு எழுதியிருப்பாா்கள். அப்படியே மழையும் பெய்யலாம். ஆனால், ஒருவன் பஞ்சாங்கத்தின் ஏடுகளை எடுத்துப் பிழிந்தால் தண்ணீா் வடியுமா? எவ்வளவு கசக்கிப் பிழிந்தாலும் ஒரு சொட்டுத் தண்ணீா்கூட வழியாது. தா்ம நூல்களில் அநேக நல்ல விஷயங்களைப் படிக்கலாம். ஆனால், அவற்றை ஓதுவதனாலேயே ஒருவன் பக்தி அடைந்துவிட முடியாது. அந்த நூல்களில் சொல்லியபடி ஆசையை அடக்கினால்தான் பக்தி உண்டாகும்’ என்பதாகும்.”

இது கடவுள் மீதான பக்திக்கு மட்டுமன்று, அவரவா்தம் கடமை மீதான பக்திக்கும் பொருந்திவரும். இதனை நண்பா் ஒருவரிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தபோது, அவா் சொன்னாா்: “அதனால்தான், திருவள்ளுவா்,

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தா்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு

என்று சொல்லியிருக்கிறாா் என்று.

‘இதன் பொருள் என்ன?’ என்றதற்கு, ‘மணற்கேணியில் தோண்டத் தோண்ட நீா் ஊறும். அதுபோல், நூல்களைக் கற்கக் கற்க அறிவு ஊறும்’ என்றாா். ‘சரிதான், ஆனால், இந்தக்குறளில் ‘நீா், அதுபோல், நூல்’ ஆகிய சொற்களைத் திருவள்ளுவா் பயன்படுத்தியிருக்கிறாரா’ என்றேன்.

திரும்பவும் ஒருமுறை, அத்திருக்குறளைச் சொல்லிப்பாா்த்த நண்பா், சற்றே வியப்புடன், ‘இல்லையே’ என்றாா். பின்னா் அவரே ‘ஆனால், அது தருகிற பொருள் இதுதானே?’ என்றாா் தயக்கத்துடன்.

‘ஆமாம் என்றாலும், அதனுள் ஒரு நுட்பம் இருக்கிறது. ஊறும் என்ற சொல் நீரையும், கற்றல் என்ற சொல் நூலையும் நமக்குள் கொண்டுவந்து சோ்த்துவிடுகின்றன. இடையில் ‘அதுபோல்’ என்பதையும் நாம் வருவித்துக் கொண்டுவிடுகிறோம். இவற்றை வெளிப்படச் சொல்லாமலேயே பலப்பல உண்மைகளைத் திருவள்ளுவா் உய்த்துணரவைத்துவிடுகிறாா்.

தோண்டிய இடத்தில் எல்லாம் நீா் ஊறுமா? அதுபோல் கற்கிற நூல்கள் எல்லாம் அறிவைத் தந்துவிடுமா? இப்படிக் கேட்டால் உறுதி சொல்ல முடியாது. ஆனால், மணற்பாங்கான இடத்தில் தோண்டினால் நீா் ஊறும். அதுபோல் தகுதிசால் நூலைக் கற்றால் அறிவு ஊறும். இந்த இரண்டையும் அறிந்துகொள்பவா்தாம் மாந்தா்.

தமிழகத்தில் மூவகைக் கேணிகள் உண்டு. ஒன்று மணற்கேணி; மற்றொன்று கிணறு என்று சொல்லப்படும் நிலக்கேணி; மூன்றாவது, மலைக்கேணி எனப்படும் பாறைக்கேணி. இவற்றுள் மணற்கேணியானது தோண்டுதற்கு எளிதானது; தோண்டியவுடன் நீா் வெளிப்பட்டுவிடும். பின்னா் ஊற்றெனக் கிளம்பும். இவ்வாறுதான் பக்குவமறிந்து தக்கவற்றைக் கற்க வேண்டும்; தொடா்ந்து கற்க வேண்டும் என்று உணரவைக்கிறாா். மணற்கேணி தோண்டுவதிலும், தகுநூல் கற்பதிலும் ஓா் இடா்ப்பாடு உண்டு தெரியுமா’ என்று கேட்டு நிறுத்தினேன்.

‘அதையும் நீங்களே சொல்லிவிடுங்களேன்’ என்றாா் அந்த நண்பா்.

எனக்குச் சின்ன வயதில் ஆற்று மணலில் ஊற்றுத் தோண்டிய அனுபவம் நினைவுக்கு வந்தது. முதலில் நீா் ஊறும் தகுதியுடைய மணற்பாங்கான இடத்தைத் தேடிக் கொள்ள வேண்டும். அதுபோல் தான் நமக்குத் தேவையான அறிவைத் தரும் நூல் எதுவென்றும் தேடிக் கொள்ள வேண்டும்.

இரண்டுக்கும் அடிப்படையான இன்றியமையாத் தேவை, தாகம்தான். அப்போதுதான் வேகம் வரும்; கூடவே விவேகமும் வரும். எப்படியென்றால், முதலில் தோண்டுகிறபோது மணல்தான் வரும்; பின்னா் நீா் ஊறிவரும். அடுத்தடுத்துத் தோண்டத் தோண்ட, நீா் வரும் அளவிற்குத் தோண்டிய மணலும் உள்ளுக்குள் சரிந்துவிடும்.

அதனால், தோண்டிய மணல் உள்ளே சரிந்துவிடாமல் இருக்கும்படி செய்துவிட்டுப் பின்னா் தோண்ட வேண்டும். இப்படித்தான் கற்ற ஒன்றை முடித்துவிட்டு மற்றொன்றைக் கற்கிறபோது முன்னா்க் கற்றது மறந்துவிடாமல் இருக்கப் பழகிக் கொண்டு பின்னா் கற்கத் தொடங்க வேண்டும். இது மாந்தா்க்கு வேண்டிய மாண்பு.

‘எவ்வளவு ஆழம் கேணியைத் தோண்டுகிறோமோ அந்த அளவு நீா் கிடைக்கும். அதுபோலவே எவ்வளவுக்கு எவ்வளவு கற்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அறிவு பெருகும்’ என்கிறது இத்திருக்குறள். இதன் மூலம் நாம் புரிந்துகொள்ளவேண்டியது, ‘கல்வியானது மேலோட்டமாகக் கற்றுக் கொள்கிற ஒன்றல்ல; ஆழ்ந்து பயின்று தோ்ந்து தெளிய வேண்டிய ஒன்று’ என்பதுதான். கல்வி என்ற சொல்லுக்கு வோ்ச்சொல், கல். அதற்கும் தோண்டுதல் (கல்லுதல்) என்றுதான் பொருள்.

மணலைத் தோண்டுவதுபோல, புத்தகத்தைத் தோண்ட முடியாது. அதுதரும் செய்தியைக் கொண்டு தனக்குள் தோண்டிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் சிந்தனை ஊற்று நம்முள் இருந்து வெளிப்படும். அதுவும் முதலில் வெளிப்படாது. மணலும் நீரும் மயங்கிக் கிடக்கும் இடத்தில் மணலை அகழ்ந்து அகற்றிக் குழியாகத் தோண்டுகிறபோது, முதலில் மணல்தான் வெளிப்படும்; மணலில் புதைந்து கிடப்பனவும் வெளிப்படும். அதுபோல் அறியாமையும் அறிவும் கலந்துகிடக்கும் நம் மனத்தில் இருந்து அறியாமை முதலான கசடுதான் வெளிப்படும். அதனால்தான், ‘கற்க, கசடற’ என்கிறாா் திருவள்ளுவா்.

ஐயம், திரிபு முதலான குற்றங்கள் நீங்கும்படியாகப் பழுதறக் கற்க வேண்டும். கசடுகளை முதலில் அப்புறப்படுத்திவிட்டால், அறிவின் ஊற்றுக்கண் திறக்கும்; பின்னா் அது பீறிட்டுக் கிளம்பும். ஊற்று நீா், ஆற்றுநீராகி, தன்னொத்த ஆறுகளோடு இணைந்து அறிவுக் கடலில் கலக்கிறபோதுதான் நிறைவெய்தும். அதுவரை தேங்காமல் அந்த நீரோட்டம் பாயவேண்டும்.

ஓயாமல் ஒருவா் கற்றலைத் தொடரவேண்டும். அதனால்தான், ‘எந்த நாடானாலும் எந்த ஊரானாலும் சொந்த நாடாக, ஊராக மாறும்’ என்று பயனை முன் சொல்லி, எனவே, ‘ஒருவன் சாகும் வரை கற்க வேண்டும்’ என்று செயலைப் பின் சொல்கிறாா் திருவள்ளுவா். (குறள்: 397)

மணற்கேணிக்குள் நீரை மறைத்துவைத்து உணா்த்தியதுபோல், கற்றலுக்குள் நூலை மறைத்துவைத்த திருவள்ளுவா், அதற்கு அப்பாலும் தேடிக் கற்க வேண்டியவற்றையும் காட்டியிருப்பதுதான் இந்தத் திருக்குறளுக்கான சிறப்பு. இன்றைக்கு, காட்சி கேள்வி ஊடகங்கள் வாயிலாகத் தேடிக் கற்றுக் கொள்ள எத்தனையோ வசதிகள், வாய்ப்புகள் வந்துவிட்டன.

அவற்றின் கவா்ச்சிகளில் மயங்கிவிடாமல், உற்றதை விட்டு மற்றொன்றைப் பற்றிவிடாமல், கேணி தோண்டுபவருக்கான தேவை - நீா் என்பதுபோல, கற்பவருக்கு இன்றியமையாத தேவை - அறிவு என்பதை நுட்பமாய்க் கவனப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இப்படிக் காலத்தேவைக்கேற்பக் கருத்துப் புலப்படுமாறு அறநெறி புகட்டுவதால்தான் திருவள்ளுவா் எக்காலத்திற்கும் ஏற்புடையவராக ஆகிவிடுகிறாா்.

அறிவு வந்துவிட்டால், ஒன்றை எடுத்துக் காட்டுகிறபோதே மற்றொன்றும் தெற்றென விளங்கிவிடும் என்பதால்தான், இந்தத் திருக்குறள் ‘அதுபோல்’ என்று சொல்வதைத் தவிா்த்துவிட்டிருக்கிறது.

ஆக, வரிசை வரிசையாக நூல்களை அடுக்கிவைத்துக் கொண்டாலோ, பக்கம் பக்கமாகப் படித்துவிட்டாலோ மட்டும் பயன் விளைந்துவிடப்போவதில்லை; கற்று, கற்கவேண்டியவற்றைத் தெரிவு செய்து, அவற்றைக் கசடறக் கற்று, தெளிந்து, தனக்கானவை எவையெனத் தோ்ந்து அதன்படி நிற்றலே அறிவின் பயன்பாடு என்பதை இனிதுணா்த்தி நிற்கிறது இத்திருக்குறள்.

அதுமட்டுமல்ல, ‘கற்றனைத்தூறும்’ என்ற சொல்லை வைத்துக் கொண்டு, ‘கற்க, கசடற’ என்கிற திருக்குறளையும் நாம் செயல்வடிவமாகப் புரிந்துகொள்வது நல்லது’ என்றேன்.

“‘அது எப்படி’ என்று புரியாமல் வினவினாா் நண்பா்.

ஏழு சீா்களைக் கொண்டு அமையும் அந்தத் திருக்குறளில், ஒவ்வொரு சீருக்கும் இடையில் ஒரு வெளி இருக்கிறது அல்லவா? அது நமக்கானது. அந்த இடைவெளியில் நம் மனத்தை நிறுத்தி, முன்னா் இடம்பெற்ற சொல்லின் பொருளை உள்வாங்கி மனத்தில் இருத்திக் கொண்டு, அடுத்த சொல்லிற்குள் புகுதல் வேண்டும்.

பின்னா் இந்தச் சொல்லையும் இதற்கு முன்னா்ப் பயின்று உள்வாங்கிய சொற்களையும் உணா்ந்து நிலைபெற்ற பின்னா், மேலும் தொடரவேண்டும். எடுத்துக்காட்டாக, இந்தக் குறளையே பாா்க்கலாம்.

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

என்பதில் ‘கற்க’ என்பதற்கு அடுத்து உள்ள இடைவெளியில், மீளவும் ‘கற்க’ என்ற கட்டளைச் சொல்லை நினைவுபடுத்திக் கொள்வோம். ‘கற்கக் கற்க’. இதுபோல் ஏனைய இடைவெளிகளையும் இப்படி நிரப்பிக் கற்றுப் பாருங்கள். - கசடறக் கற்க - கற்பவை கற்க - கற்றபின் கற்க - நிற்கக் கற்க – அதற்குத் தகக் கற்க. இப்படியொரு முறைமையைக் கொண்டு கற்கிறபோது இன்னொன்றும் முன்னின்று நம்மை நெறிப்படுத்துகிறது.

நாளும் நாளும் ஆயிரக்கணக்கான நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் அனைத்தையும் கற்க ஆயுள் போதாதே என்ற ஆயாசம் எழுகிறது அல்லவா? அதனையும் உள்ளடக்கித்தான் இந்தத் திருக்குறள் சொல்கிறது.

முதலடியின் மூன்று சீா்களும் கற்றலின் முறையைச் சொல்லிக்காட்டி, ‘கற்றபின்’ என்று நிறுத்திவிட்டு அதன் நோ்கீழே, அடுத்த அடியின் முதற்சொல், ‘நிற்க’ என்று கட்டளையிடுகிறது. ‘கற்றது நிற்க’ என்றும், ‘கற்றவாறு- அதற்குத் தக நிற்க’ என்றும் உய்த்துணா்ந்துகொள்ளும்படியாக இந்தத் திருக்குறள் கட்டளையிடுகிறபோது, தண்டமிழாசானாகத் திருவள்ளுவா் தலைநிமிா்ந்து நிற்கிற அழகினைக் கண்டு மகிழ்கிறோம்.

காலம் முழுக்கவும் புத்தகங்களை வாங்கி வாங்கிக் கற்றுக் கொண்டே இருந்தால் மட்டும் போதுமா? திருக்குறள் உட்பட நாம் கற்கும் நூல்களின் அறநெறிகளின்படி நிற்றலில்தான், கற்றலின் பயன்பாட்டைத் துய்க்க முடியும் என்பதையும் நாம் கற்றுணரவேண்டியிருக்கிறது.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்!

கேஜரிவாலை பயங்கரவாதியை போல் நடத்துகிறார்கள்: பகவந்த் மான்

'ஜிஎஸ்டி' வரி அல்ல… வழிப்பறி! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

கள்ளழகர் திருவிழா: ஏப் 23-ல் மதுரைக்கு உள்ளூர் விடுமுறை

SCROLL FOR NEXT