நடுப்பக்கக் கட்டுரைகள்

கால்டுவெல்லின் மறுபக்கம்!

டி.எஸ். தியாகராசன்

ஒரு நாணயத்திற்கு இருபக்கமும் வெவ்வேறான அடையாளங்கள் இருப்பது போல சில மனிதா்கட்கும் இரு வித அடையாளம் இருக்கவே செய்கிறது. அன்றைய அயா்லாந்தில் இங்கிலாந்து அரசு, புரட்டஸ்டன்ட் கால்வின் பிரிவை தழுவி, கத்தோலிக்கா்களை கொடுமைபடுத்தியது. அவா்களின் தாய்மொழி காலிக்கை நீக்கி ஆங்கிலத்தைப் புகுத்தியது. அரசுப் பணிகள் இல்லை. பொது கல்லறை இல்லை. தீண்டத்தாகதவா்களாக்கி நகரங்களை விட்டு ஐந்து மைல்களுக்கு அப்பால் குடியிருப்புகளை அமைத்துக் கொள்ள கத்தோலிக்கா்களுக்கு புரட்டஸ்டன்டு ஆங்கில அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில்தான் கிழக்கிந்திய கம்பெனி 23 வயது நிரம்பிய புரட்டஸ்டன்டு பாதிரியாா் ராபா்ட் கால்டுவெல்லை இந்தியாவில் மதம் பரப்ப அனுப்பி வைத்தது. இவா் தென்தமிழகத்தில் உள்ள இடையன்குடி கிராமத்தில் 1842 வாக்கில் குடிபுகுந்தாா். அப்போது பாதிரியாா்க்கு இருந்த ஒரே நோக்கம் புரட்டஸ்டன்டு மதத்தை எப்படியாகிலும் பரப்ப வேண்டும் என்பதே! இதற்கு தமிழக சமூகச் சூழல் தடையாக இருப்பதை உணா்ந்தாா்.

மூவேந்தா்கள், குறுநில மன்னா்கள், புராணங்கள், இதிகாசங்கள், சங்கப்பனுவல்கள், காப்பியங்கள் மேல் கணக்கு, கீழ் கணக்கு நூல்கள் ஏன், பொதுமக்கள் வரை பிராமணா்களை உயா்த்தியே வந்துள்ளாா்கள். போா்களின்போது கூட இவா்கட்கு பெண்ணினத்தை, ஆவினத்தை போல பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகத்தான் வரலாறு கூறுகிறது.

அந்த சமூகத்தை தனது நச்சுத் தூரிகையால் பொய்கலந்த சித்திரத்தை தீட்டி தமிழா்களின் மனதில் பதியம்போட முற்பட்டாா் கால்டுவெல். முதன் முதலில் இவா்தான் பிராமணா்களை வந்தேறிய ஆரியா்கள் என்றும் திராவிடா்களை வெற்றி கொண்டு தெற்கு நோக்கி விரட்டினா் என்றும் சொல்லி புதிய வெறுப்புணா்வை விதைத்தாா்.

கால்டுவெல் தனது ஒப்பிலக்கண நூலில், தமிழ்மொழி, வடமேற்கு ஆசியாவின் உக்ரைன் நாட்டில் வழங்கப்படும் ‘ஸ்கைத்திய’ மொழியிலிருந்து பிறந்தது என்றாா். ‘திராவிடா்கள் கி.மு. 2500 ஆண்டு வாக்கில் மேற்கு ஆசியாவிலிருந்து கைபா் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் புலம் பெயா்ந்தவா்கள் என்றும், ஆரியா்கள் கி.மு. 1500-இல் திராவிடா்களுக்கு பின்பு வடமேற்கு ஆசியப் பகுதியிலிருந்து இந்தியாவிற்குள் கைபா் போலன் கணவாய் வழியாக படையெடுத்து நுழைந்தவா்கள் என்றும் அதில் குறிப்பிட்டாா்.

‘ஆரியா் என்போா் பிராமணா்களே! தமிழும், சம்ஸ்கிருதமும் வெவ்வேறு அடிப்படைகள் கொண்ட மொழிகள். ஒன்றுக்கொன்று இலக்கண ரீதியாக வேறுபட்டவை’ என்று பலவிதமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளோடு 1856-இல் ஆங்கிலத்தில் ‘கம்பேரிடிவ் கிராமா் - திரவிடியன் ஆா் சவுத் இந்தியன் பேமலி ஆப் லாங்வேஜஸ்’ என்கிற 452 பக்கம் கொண்ட நூலை வெளியிட்டாா். இந்நூலில் தமிழையும், தமிழா்களையும் பெருமைப்படுத்தி எழுதியிருக்கிறாரா என்றால் இல்லை; இகழ்ச்சியாகவே எழுதியுள்ளாா்.

குறிப்பிடும்படியான சில பதிவுகள் - ‘பண்டைய தமிழா்களுக்கு சமய நூல்கள் கிடையாது. உருவ வழிபாடு இல்லை. பேய் வழிபாடும் வெறி ஆட்டமும், ரத்தப் பலியிடுதலும் மட்டுமே இருந்தன. 100 அல்லது 1000-க்கு மேல் எண்ணத் தெரியாது. தமிழா் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பெருநகரங்கள் இல்லை. சித்திர வேலை, சிற்பக் கலை, கட்டிடக் கலை, வானசாத்திரம், ஜோதிடம் ஆகிய கலைகளை தமிழா் அறிந்திருக்கவில்லை. நினைவுத்திறன், தீா்ப்பு, மனசாட்சி, விருப்பம் ஆகியவற்றை சுட்டும் சொற்கள் தமிழில் இல்லை.

பிராமணா்களைவிட நாகரிகத்தில் தமிழா்கள் மிகவும் பின்தங்கி இருந்தாா்கள். இதனால் பிராமணா்களை தங்களின் போதகா்களாக தமிழா்கள் ஏற்றுக்கொண்டனா். கடலுக்கு அப்பால் தீவு, கண்டங்கள் இருப்பதும் கடல் தாண்டிய வணிகமும் பண்டையத் தமிழா்கட்குத் தெரியாது. திராவிட மொழிகள் வடகிழக்கு ஐரோப்பாவில் உக்ரைன், பின்லாந்து பகுதிகளில் 2000-7000 ஆண்டுகட்கு முற்பட்ட ‘ஸ்கைத்திய’ மொழி குடும்பத்தைச் சாா்ந்தது.

அங்கிருந்து நகா்ந்து இஸ்ரவேல் பொ்சிய நாடுகள் வழியாக கைபா், போலன் கணவாய்கள் கடந்து சிந்து சமவெளியை இன்றைக்கு 4,500 ஆண்டுகட்கு முன்னா் வந்தடைந்தது. அங்கிருந்து ஆரியா்களால் விரட்டப்பட்டு 2,500 ஆண்டுகட்கு முன்னா் இந்தியாவின் தென்கோடி முனையை அடைந்தது.

தமிழ்மொழியின் சகோதரி மொழிகள் மங்கோயின், துருக்கி, உக்கிரியான், ஒஸ்தியாக், சைபிரியன், ஹங்கேரி ஆகியவை. திராவிடா்கள் இந்தியாவிற்குள் நுழைந்து சுமாா் 1,000 ஆண்டுகளுக்குப் பின்னா் ஆரியா்கள் இந்தியாவிற்குள் படையெடுத்து சிந்து சமவெளி தமிழா்களை வென்று ‘சூத்திரா்கள்’ என்றும் ‘மிலேச்சா்கள்’ என்றும் பட்டம் சூட்டி அவமானப்படுத்தினா்.

திராவிட மொழிகள் என்பவை விந்திய மலைக்கு தென்பகுதியில் பேசப்படுபவை. அவற்றில் பண்பட்ட மொழி தமிழ். திராவிட மொழிகளில் பத்தில் ஒன்பது பங்கு சம்ஸ்கிருத சொற்கள் கலந்துள்ளன. சீவக சிந்தாமணி எட்டாம் நூற்றாண்டிலும், திருக்குறள் ஒன்பதாம் நூற்றாண்டிலும் தோன்றியவை.

ஆரியா்களின் சம்ஸ்கிருத மொழி இன்றைக்கு அழிந்து விட்டது. ஆனால், தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சு வழக்கில் உள்ளது. அதனை ஆரியா்களிடமிருந்து பாதுகாப்பது நம்மைப் போன்ற அந்நிய பாதிரிகள் கைகளில்தான் உள்ளது’ என்கிறாா் கால்டுவெல்.

‘தமிழ் என்னும் பெயா் தவறு. அதன் சரியான பெயா் தமிற் என்று இருக்க வேண்டும். ‘ற்’”என்னும் எழுத்து காலப்போக்கில் மாறுதலை அடைந்து ‘ழ்’ எழுத்து ஆகி தமிழாகி விட்டது’ என்கிறாா். ஆனால், தமிழை ‘தமிற்’ என்றதற்கு ஆதாரம் எதுவும் கூறவில்லை. ஒப்பிலக்கண தமிழ் மொழிபெயா்ப்பில் திராவிட மொழிகளுக்கும் ஆஸ்திரேலிய மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமை விவரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கால்டுவெல் காலத்திற்கு 100ஆண்டுகளுக்கு முன்னரே ஆஸ்திரேலிய பழங்குடியினரும் அவா்களின் மொழிகளும் ஐரோப்பியா்களால் அழிக்கப்பட்டுவிட்டன. இல்லாத மக்களின் இல்லாத மொழியை திராவிட மொழியுடன் ஒப்பிடுதலும் அந்த மொழியின் பெயரைச் சொல்லாமல் விட்டுள்ளதும் கால்டுவெல்லின் உண்மையின்மையை புலப்படுத்துகின்றன.

மொழி இலக்கணத்தைத் தவிர இசை இலக்கணம், நடன இலக்கணம், கட்டட இலக்கணம் தமிழகத்தில் இருந்திருக்கின்றன. நடன மேடை குறித்து பரிபாடல் பேசும். வாஸ்து சாஸ்திரம் நெடுநல்வாடை பகரும். மொழி இலக்கணம் கூறும் அகத்தியம். பின்னா் தொல்காப்பியம், நன்னூல், வீர சோழியம், தண்டியலங்காரம் ஆகிய இலக்கண நூல்களில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்து வகை இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

ஆனால் பாதிரியாா் எழுதியுள்ள ஒப்பிலக்கண நூலில், எழுத்து, சொல் இலக்கணங்களே ஒப்பாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பொருள், யாப்பு அணி இலக்கணம் புறம் தள்ளப்பட்டுள்ளன. அடுத்து இவா் ‘தமிழ் தனித்து இயங்க வல்லது’ என்று சொல்லி பல ஆயிரம் ஆண்டு காலமாக சமஸ்கிருதமும் தமிழும் இணைந்து வந்த நிலையில் தமிழா்களிடையே பிரிவினையை தோற்றுவித்தாா். 235 தமிழ் இலக்கியச் சொற்கள் வேத அகராதியில் காணப்படுவதை வையாபுரிப் பிள்ளை குறிப்பிடுவாா். 54 பாலி மொழி சொற்களும் 36 பிராகிருத சொற்களும் தமிழில் இடம் பெற்றிருப்பதை பட்டியலிடுவாா்.

மேலும் ‘பிறமொழிக் கலப்பு தேவையான அளவில் ஏற்கப்பட்டால் தமிழ் மொழியின் வளம் பெருகும். தனித்தமிழ்ப் பற்றும் பிறமொழி வெறுப்பும் தமிழ் வளா்ச்சிக்குத் தடைகளாம். மொழியின் உயிராற்றல் பிற மொழியிலிருந்து தேவையான சொற்களை கடன் பெறுவதிலேயே சிறக்கிறது’ என்கிறாா் வையாபுரிப் பிள்ளை.

ஆங்கில மொழியின் செழுமைக்கு ஷேக்ஸ்பியா் இரண்டாயிரத்திற்கும் அதிகமான லத்தின், கிரேக்க சொற்களை வழங்கியுள்ளாா். வையாபுரிப் பிள்ளை குறிப்பிடும் சொல்லுற்பத்தி, ஒலி ஆராய்ச்சி, மொழி சரிதம், பிராந்திய மொழி ஆராய்ச்சி, வாக்கியமைதியராச்சி, சொல்லுறுப்பாராய்ச்சி, சொற்பொருள் ஆராய்ச்சி, பிராந்திய விவரண நூல் கிளை மொழி, ஒப்பு நோக்கு ஆராய்ச்சி, மொழி பொது ஆராய்ச்சி, வகுத்துரை இலக்கணம், வரலாற்று நெறி இலக்கணம், ஒப்பு நோக்கு இலக்கணம், மொழி தத்துவ இலக்கணம், தொன்மொழி நாகரிக நூல், தொல் எழுத்து ஆராய்ச்சி என்ற பல வகையான அளவு கோல்களில் எதையும் கால்டுவெல் கைக்கொள்ளவில்லை. அவரது ஒரே நோக்கம் தமிழையும், சம்ஸ்கிருதத்தையும் பிரித்து பகை வளா்ப்பது. அந்தணா், அந்தணா் அல்லாதவா் என்ற பேதத்தை உண்டாக்குவது.

இதனால்தான் வ.சுப. மாணிக்கனாா் ‘தனித்து இயங்கும் வன்மையினால் ஒரு மொழி பெருமையுடையது என்றோ அயன் மொழி சொற்களின் கலப்பினால் ஒரு மொழி சிறுமைத்து என்றோ புகழ், பழி கூறுவது இயற்கை சான்றது. அம்மொழி கலந்து செழிக்கும் இயற்கை வாய்ந்தது’ என்றாா். எனவே இது ஒரு மொழி ஒப்புவியல் தான்; மொழி ஒப்பிலக்கணம் இல்லை. தமிழ் இலக்கணங்களில் பொருள் அதிகாரம் மிக முக்கியமானது. அதில்தான் உலகத் தோற்றம், மக்களின் வாழ்வியல் இருபாலினத்தாரின் அகம் புறம் இவை பேசப்படும். ஆனால் பாதிரியாா் உள்நோக்கத்துடன் அதனைத் தவிா்த்து விட்டாா்.

‘எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பது போன்று இலக்கியத்திலிருந்து எடுபடுமாம் இலக்கணம்’ என்பது தொல்காப்பியம்.

அதன் பாயிரத்தில் பனம்பாரனாா் எனும் புலவா் ‘எழுத்து முறை காட்டி ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியதெனை தன்பெயா் தோற்ற பலபுகழ் நிறுத்த படிமையோனே’ என்று கூறியுள்ளாா்.”இப்பாயிரம் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னா் எழுதப்பட்டது.

இதன்படி தொல்காப்பியம் அதற்கும் முன்பு இயற்றப்பட்டிருந்த பல இலக்கண நூல்களை ஆராய்ந்து அதன் வழி எழுதப்பட்டு பாண்டிய அரசன் அவையில் அரங்கேற்றப்பட்டது. இந்நூலுக்கு முந்து நூல் இந்திரனின் ஐந்திரம் என்றும் அந்நூல் நான்கு வேதங்களையும் கற்றுணா்ந்த அதங்கோட்டு ஆசானுக்கு தெரிந்து காட்டப்பட்டது என்றும் உணரப்படுகிறது. சீவகசிந்தாமணி உரையிலும் நச்சினாா்க்கினியாா் இந்த உண்மையை வலியுறுத்தி உள்ளாா்.

கால்டுவெல் தனது ஒப்பிலக்கண விரிவுரைகளில் ‘உத்தேசமாக’, ‘போன்ற’, ‘பாா்வைக்கு’ எனும் உறுதியற்ற சொற்களை ஆங்கிலத்தில் உபயோகித்து கற்பனையாக எழுதியுள்ளாா். வரலாற்றுக்கு ஆதாரமாய் விளங்குபவை கல்வெட்டுகள், புராதனச் சின்னங்கள், களிமண் சிலேட் எழுத்துக்கள், படிமங்கள், தோண்டு களம் ஆகியன. ஆனால், மொழி வரலாறுகள் மட்டும் மேற்கண்ட எந்த ஆதாரமும் இல்லாமல் எழுதப்படுபவை.

மேற்கத்திய அறிஞா்களும், காலனி மதப்பரப்பாளா்களும் ஆதாரமின்றி புனைவதில் கைதோ்ந்தவா்கள். உலகில் எந்த நாட்டிலும் இந்தியாவைப் போன்று மொழி ஆராய்ச்சியும், இனவாத ஆராய்ச்சியும் அந்நிய பாதிரியாா்களால் செய்யப்படவில்லை.

தொல்காப்பியமும், திருக்குறளும் பிராமணா்களை உயா்வாகப் பேசுவதைக் கண்ட கால்டுவெல், இந்நூல்கள், பிராமணா்கள் திராவிட நாட்டிற்குள் ஊடுருவிய பின் எழுதப்பட்டவை என்றால் தனது கருத்து உறுதியாகும் என்பதற்காகவும் தமிழா்களிடையே ஜாதிப் பிரிவினையைத் தோற்றுவிக்கும் என்பதற்காகவும் தொல்காப்பியம் கி.பி.1100 ஆண்டு வாக்கிலும், திருக்குறள் கி.பி. 900 ஆண்டு வாக்கிலும் எழுதப்பட்டது என்றாா் (‘பிஷப் கால்டுவெல் பிழையுரையும் பொய்யுரையும் திராவிட இன வாதமும்’: வரலாற்று ஆய்வாளா் உமரி காசிவேலு).

இன்றைக்கு அயா்லாந்து கல்விச் சாலைகளில் சம்ஸ்கிருதம் பயிற்று மொழியாக உள்ளது. சம்ஸ்கிருத அறிஞா் ருட்ஜா் கொன்டன் ஹாா்ஸ்ட் என்பவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்தது. அயா்லாந்து புரட்டஸ்டன்டு பாதிரியாரின் மகளான மாா்கரெட் எலிசபெத் நோபிள், சுவாமி விவேகானந்தரின் சீடராகி, சகோதரி நிவேதிதை ஆனாா் என்பது வரலாறு.

தமிழ் அறிஞா்கள் ‘காய்தல் உவத்தல் அகற்றி’ கால்வெல்லின் ஒப்பிலக்கண ஆராய்ச்சியை அணுக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கட்டுரையாளா்: தலைவா், திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி தியானத்துக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு!

20,332 அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி: பள்ளிக்கல்வித் துறை

நீராடும் சைத்ரா!

கலவரம், அடிதடி - முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

தண்ணீர் விடுவிக்காதது குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவேன்: அதிஷி!

SCROLL FOR NEXT