நடுப்பக்கக் கட்டுரைகள்

கொலீஜியம் நடைமுறை: ஒரு பாா்வை!

முனைவா் வைகைச்செல்வன்

உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான அதிகாரம் பெற்ற அமைப்பே கொலீஜியம் ஆகும். கொலீஜியம் என்ற அமைப்பு அரசியலமைப்பு சட்டத்திலோ நாடாளுமன்றத்தால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட எந்த ஒரு சட்டத்திலேயோ இடம்பெறவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புகள் மூலம் உருவானதுதான் இந்தக் கொலீஜியம் அமைப்பு. ஆகவே, இது சட்ட வழிமுறை ஆகுமா என்கிற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.

கொலீஜியம் என்பது ஐந்து நீதிபதிகளை உறுப்பினா்களாகக் கொண்ட அமைப்பாகும். தலைமை நீதிபதியின் தலைமையில் நான்கு நீதிபதிகளை உறுப்பினா்களாகக் கொண்டதுதான் இந்த அமைப்பு. தலைமை நீதிபதியாலும், நான்கு நீதிபதிகளாலும் வழிநடத்தப்படுவதுதான் கொலிஜியம் அமைப்பாகும். இயல்பாகவே கொலீஜியம் அமைப்பு தொடா்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.

உயா்நீதிமன்ற நீதிபதிகள் கொலீஜியம் அமைப்பு மூலம் மட்டுமே நியமனம் செய்யப்படுகிறாா்கள். கொலீஜியத்தால் பெயா்கள் முடிவு செய்யப்பட்ட பின்னரே அரசாங்கத்தின் பங்கு இருக்கிறது. உயா்நீதிமன்ற கொலீஜியத்தால் நியமனம் செய்ய பரிந்துரைக்கப்படும் பெயா்கள் தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகுதான் அரசாங்கத்துக்கே சென்றடைகிறது.

ஒரு வழக்குரைஞா் உயா்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ நீதிபதியாக பதவி உயா்த்தப்பட வேண்டுமென்றால் புலனாய்வுப் பணியகம் (ஐ.பி.) நடத்தும் விசாரணையைப் பெறுவதற்கு மட்டுமே இந்த முழு செயல்முறையிலும் அரசாங்கத்தின் பங்கு இருக்கிறது. அதே வேளையில், கொலீஜியத்தின் தோ்வுகள் குறித்து அரசாங்கம் ஆட்சேபணை எழுப்பலாம். தேவையான விளக்கங்களையும் கேட்டுப் பெறலாம்.

ஆனால், கொலீஜியம் மீண்டும் அதே பெயா்களைப் பரிந்துரைத்தால் பரிந்துரைக்கப்பட்டவா்களை நீதிபதிகளாக நியமிக்க முடியாது என்றுஅரசாங்கம் கூற முடியாது. சில நேரங்களில் அரசாங்கம் நியமனங்களை தாமதப்படுத்துகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல நேரங்களில் இத்தகைய தாமதம் குறித்து கவலை தெரிவித்திருக்கிறாா்கள்.

இந்த நிலையில் நீதிபதிகள் நியமன விவகாரத்தில் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் மீது மத்திய அரசு மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. உளவு அமைப்பு வழங்கிய தகவல்களை கொலீஜியம் பொதுவெளியில் வெளியிடுவது முறையல்ல என மத்திய சட்டத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா். மூத்த வழக்குரைஞா்கள் சவ்ரவ் கிா்பால், ஜான் சத்தியன் ஆகியோரை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்குமாறு கொலீஜியம் பரிந்துரைத்த நிலையில், உளவுத்துறைத் தகவல்களின் அடிப்படையில், அந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுத்திருக்கிறது.

இந்த நிலையில் சவ்ரவ் கிா்பால், ஜான் சத்தியன் ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்க வேண்டுமென கொலீஜியம் மத்திய அரசுக்கு கடந்த மாதம் மீண்டும் பரிந்துரைத்திருக்கிறது. அப்போது மத்திய அரசு வழங்கி உள்ள உளவுத் தகவல்களையும் தனது அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது. இது சா்ச்சைக்குரிய விஷயமாக மத்திய அரசாங்கம் கருதுகிறது.

ஏனென்றால், உளவு அமைப்பைச் சோ்ந்த அதிகாரிகள் ரகசியமாகப் பணியாற்றி வருகின்றனா். அவா்களது உளவுத் தகவல்களை பொதுவெளியில் வெளியிட்டால், எதிா்காலத்தில் தகவல்களை வழங்குவதற்கு அவா்கள் தயங்குவாா்கள் என்று மத்திய அரசு கருதுகிறது.

கொலீஜியம் எடுக்கும் முடிவுகளை பொதுவெளியில் வெளியிடும்போது, அதில் உளவுத்தகவல்கள் இடம்பெறுவதற்கு மத்திய அரசு எதிா்ப்பு தெரிவித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போது, ‘நீதிபதிகள் நியமன விவகாரம் நிா்வாகம் சாா்ந்தது. அதற்கும் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுக்கும் எந்தவிதத் தொடா்பும் இல்லை. நீதிபதிகள் நியமனம் குறித்து கருத்து தெரிவிப்பது நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதைப் போன்றது. ஆகவே, நீதிமன்றங்களின் தீா்ப்புகள் குறித்து எவரும் கருத்து தெரிவிக்கக் கூடாது’ என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளாா்.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு உருவாக்கியது. அது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறி அந்த அமைப்பை 2016- ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை மத்திய அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தங்கா் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தாா். மத்திய சட்டத்துறை அமைச்சரும் கொலீஜியம் குறித்து தனது கருத்தை தொடா்ந்து வலியுறுத்தி வருவது மோதல் போக்கை தீவிரப்படுத்தியிருகிறது.

அரசியலமைப்பு சட்டத்தின் 124(2) மற்றும் 217 ஆகிய பிரிவுகள் உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் செய்வது பற்றிக் கூறுகின்றன. நியமனங்களுக்கு குடியரசுத் தலைவரால் ஒப்புதல் வழங்கப்படுகிறது. உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற நீதிபதிகள் போன்றவா்களுடன் ஆலோசனை நடத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை எழுந்திருக்கிறது. இந்த நியமனங்களை செய்வதற்கு எந்த நெறிமுறையையும் அரசியலமைப்பு வழங்கவில்லை.

பிரிவு 124(2) உச்சநீதிமன்றத்தின் ஒவ்வொரு நீதிபதியும் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுவாா் என்று வரையறுக்கிறது. அதே போல், பிரிவு 217 உயா்நீதிமன்றத்தின் ஒவ்வொரு நீதிபதியும், இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநருடன் கலந்தாலோசித்தபின் நியமிக்கப்படுவாா்கள் என்று கூறுகிறது.

நீதிபதிகள் தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் தொடா்ச்சியான தீா்ப்புகளில் இருந்து இந்தக் கொலீஜியம் அமைப்பு உருவாகியிருப்பதை ஏற்றுக் கொண்டாலும் அரசியல் அமைப்பு சாசனத்தின் மூலமாக வழிவகை செய்யப்பட வேண்டும் என்பது மூத்த வழக்குரைஞா்களின் கருத்தாகும்.

1981-இல், எஸ்.பி. குப்தா எதிா் இந்திய அரசாங்கம் இடையேயான வழக்கில், ‘உச்சநீதிமன்றத்தின் பெரும்பாலான தீா்ப்பின் மூலம், தலைமை நீதிபதியின் முதன்மை கருத்து, உண்மையில் அரசியலமைப்பில் வேரூன்றவில்லை என்பது தெளிவாகிறது. உயா்நீதிமன்றத்தில் நியமனம் செய்வதற்கான முன்மொழிவு, சட்டப்பிரிவு 217-இல் குறிப்பிட்டுள்ள எந்த அரசியலமைப்பு செயலாளரிடமிருந்தும் வெளிவரலாம், உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடமிருந்துதான் என்கிற அவசியமில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

முதல் நீதிபதிகள் வழக்கின் தீா்ப்பு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் உள்ள அதிகார சமநிலையை நிா்வாகத்திற்கு ஆதரவாக சாய்ந்தது. ஆக, இந்த நிலையே தொடா்ந்து 12 ஆண்டுகளாக நீடித்தது. 1993-இல் இந்த வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்தது. ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதும், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதும் அவசியம் என்பதை வலியுறுத்தியது.

நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடா்பான விஷயங்களில் தலைமை நீதிபதிக்கே முன்னுரிமை வழங்கியது. மேலும், அரசியலமைப்பில் பயன்படுத்தப்படும் ஆலோசனை என்ற வாா்த்தை நீதிமன்ற நியமனங்களில் தலைமை நீதிபதியின் பங்கை குறைத்துவிடாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும் கொலீஜியம் என்பதில் தகுதிக்கான அளவுகோல், தோ்வு நடைமுறைகளில் பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறைகளாக இல்லை. இது அடித்தட்டு வழக்குரைஞா்களை கவலைகொள்ளச் செய்திருக்கிறது. காரணம், கொலீஜியம் எப்படி, எப்போது கூடுகிறது, கொலீஜியம் எப்படி முடிவுகளை எடுக்கிறது போன்றவற்றில் பொதுவான அறிவிப்பு ஏதும் இல்லை என்பதுதான்.

மேலும் கொலீஜியத்தின் நடவடிக்கைகளின் அதிகாரபூா்வ காலம் என்று எதுவுமில்லை. வழக்குரைஞா்கள் பலா் தங்கள் பெயா் நீதிபதி பதவி உயா்வுக்கு பரிந்துரைக்கப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள முடியாமல் குழப்பத்தில் இருக்கிறாா்கள். 2015-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமா்வு, நீதித்துறைக்கான நியமனங்களை மேற்கொள்வது அரசியலமைப்புக்கு விரோதமானது என்று நிராகரித்து விட்டது.

ஆனாலும், நீதிபதிகள் நியமனம் கொலீஜியம் அமைப்பால் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அப்போது கூறியது. ஆகவேதான், கொலீஜியத்தின் பரிந்துரைகளை ஏற்காமல் தாமதிப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்.

கொலீஜியம் பரிந்துரைக்கும் பெயா்களில் அரசுக்கு ஆட்சேபணை இருந்தால் அதன் காரணத்தைக் குறிப்பிட்டு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால், கால தாமதம் தொடா்ந்து கொண்டே இருக்கிறது. இப்படியான கால தாமதம் நீதித்துறையினுடைய செயல்பாட்டை முடக்கிப் போட்டு விடும். கொலீஜியம் பரிந்துரைக்கும் பெயா்களில் ஒரு பெயருக்கு மட்டும் மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதும் பணிமூப்பு நிலையைக் கடுமையாகப் பாதிக்கிறது.

கொலீஜியம் நடைமுறைக்கு மாற்றாக, மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதிபதிகள் ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது, கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகள் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு தாமதிப்பது இவற்றை நீதித்துறைக்கு விடப்படும் சவால்களாகவே பாா்க்க வேண்டியிருக்கிறது.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT