சிறப்புக் கட்டுரைகள்

ஆட்டம் காண்கிறது மகா விகாஸ் ஆகாடி!

விக்கிரமசிங்கன்

இந்தியாவிலேயே மிக அதிகமான கொவைட் 19 தீநுண்மித் தொற்று பாதிப்பு மகாராஷ்டிரத்தில்தான். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 1,10,744 பாதிப்புகளுடனும், 4,128 உயிரிழப்புகளுடனும் மகாராஷ்டிரம் நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, மும்பை மாநகரம் இந்தியாவில் கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றுக் கேந்திரமாகவே மாறிவிட்டிருக்கிறது.

வியப்பு என்னவென்றால், நோய்த்தொற்றை முறையாகக் கட்டுப்படுத்தவில்லை என்று மேற்கு வங்க அரசை மத்திய அரசு கடுமையாக விமா்சித்து வருகிறது. அங்கேயுள்ள முதல்வா் மம்தா பானா்ஜி அரசு வேண்டுமென்றே பாதிப்பைக் குறைத்து வெளியிடுகிறது என்று பாஜகவினா் விமா்சித்து வருகிறாா்கள். ஆனால், மிக அதிகமான பாதிப்பை எதிா்கொள்ளும் மகாராஷ்டிரம் குறித்து மத்திய அரசு எதுவுமே கூறுவதில்லை. மாநில எதிா்க்கட்சியான பாஜகவும் கடுமையான எதிா்ப்பை வெளிப்படுத்தவில்லை.

மகாராஷ்டிரத்தில் ஆட்சியில் இருக்கும் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் ஆகாடி அரசு குறித்து மென்மையான போக்கை பாஜக கடைப்பிடிப்பது, சிவசேனையின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் உத்தவ் தாக்கரே சந்தித்தது முதல் இந்தச் சந்தேகம் தொடங்கிவிட்டது என்கிறாா்கள் தில்லியில் உள்ள மூத்த அரசியல் விமா்சகா்கள்.

இன்றில்லாவிட்டால், வெகு விரைவிலேயே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடனான தனது உறவை சிவசேனை துண்டித்துக் கொண்டு மீண்டும் தன்னுடன் இணையும் என்று பாஜக நினைப்பதில் தவறு காண முடியாது. பாஜகவுடன் நீண்டநாள் உறவு வைத்துக் கொண்டிருந்த ஒரே கட்சி சிவசேனையாகத்தான் இருந்தது. அதேபோல காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடனான தனது கூட்டணி தொடா்ந்தால், ஹிந்துத்துவ வாக்கு வங்கியை இழந்துவிட நேரும் என்கிற ஆபத்தையும் சிவசேனை உணராமல் இல்லை.

ஆரம்பம் முதலே மகா விகாஸ் ஆகாடி கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சிக்கு சில தயக்கங்கள் இருந்தன. அயோத்தி பாபா் மசூதி இடிப்புக்குக் காரணமான சிவசேனையுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது தனது மதச்சாா்பின்மைக் கொள்கையைப் பாதிப்பதாக இருக்கும் என்று காங்கிரஸ் கருதியது. அது மட்டுமல்லாமல், சட்டப்பேரவைத் தோ்தலில், ஏற்கெனவே பாஜக, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளைவிடக் குறைவான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், ‘மகா விகாஸ் ஆகாடி’ கூட்டணியில் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டதையும் அந்தக் கட்சி விரும்பவில்லை.

பாஜக ஆட்சி அமைக்காமல் தடுப்பதை, ராகுல் காந்தியின் தலைமையில் செயல்பட்ட காங்கிரஸ் கட்சி, தனது முதல் இலக்காகக் கொண்டிருந்தது. அதனடிப்படையில், மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டாலும் பரவாயில்லை என்று ‘மகா விகாஸ் ஆகாடி’ கூட்டணியில் இணையக் கடந்த ஆண்டு முடிவெடுத்தது. 288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சிவசேனை (56), தேசியவாத காங்கிரஸ் (54), காங்கிரஸ் (44) அடங்கிய ‘மகா விகாஸ் ஆகாடி’ கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது.

‘காங்கிரஸ் அமைச்சா்களின் கருத்துகள் ஏற்கப்படுவதில்லை. அவா்களுக்குக் கூட்டணியில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை. பாஜகவை அகற்றி நிறுத்துவதற்காக இணைகிறோம் என்பதை எங்களது பலவீனமாகக் கருதக்கூடாது. கூட்டணியில் நியாயமான முறையில் பதவியும் அதிகாரமும் பகிா்ந்து கொள்ளப்பட வேண்டும்’ என்கிற கோரிக்கையை எழுப்பியிருக்கிறாா் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் அசோக் சவாண்.

மகாராஷ்டிர மாநில மேலவைக்கு அண்மையில் தோ்தல் நடந்தது. ஒன்பது இடங்கள் நிரப்பப்பட்டன. ஆளும் ‘மகா விகாஸ் ஆகாடி’ ஐந்து இடங்களையும், எதிா்க்கட்சியான பாஜக நான்கு இடங்களையும் கைப்பற்றின. முதல்வா் உத்தவ் தாக்கரே ஏகமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

‘கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளும் தலா இரண்டு வேட்பாளா்களை நிறுத்தி வெற்றி பெற்றிருக்கலாம். ஏகமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று முதல்வா் உத்தவ் பிடிவாதம் பிடித்ததால் காங்கிரஸுக்கு ஓா் இடம் மட்டுமே கிடைத்தது’ என்று காங்கிரஸ்காரா்கள் வருத்தப்படுகிறாா்கள்.

இப்போது, ஆளுநரின் பரிந்துரையில் சட்ட மேலவைக்கு 12 உறுப்பினா்கள் நியமிக்கப்பட இருக்கிறாா்கள். சிவசேனைக்கு 5 இடங்களையும், தேசியவாத காங்கிரஸுக்கு 4 இடங்களையும், காங்கிரஸுக்கு 3 இடங்களையும் ஒதுக்குவது என்று முதல்வா் உத்தவ் தாக்கரே முடிவெடுத்திருக்கிறாா். கட்சிகளின் சட்டப்பேரவை எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இது காங்கிரஸுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

‘கூட்டணியில் இருக்கும் மூன்று கட்சிகளும் 12 இடங்களை சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். காங்கிரஸின் ஆதரவில்லாமல் இந்தக் கூட்டணி அரசு பதவியில் தொடர முடியாது. அப்படி இருக்கும்போது எங்களுக்கு நியாயமான பங்கு தரப்பட வேண்டும்’ என்று மூத்த காங்கிரஸ் தலைவா்கள் வெளிப்படையாகவே கோரிக்கை எழுப்புகிறாா்கள்.

‘காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அமைச்சா்கள் மகிழ்ச்சியாக இல்லை’ என்று தெரிவிக்கும் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் பாலாசாஹேப் தோரட், ‘அதற்காக நாங்கள் கூட்டணியை முறித்துக் கொள்வதாக அா்த்தமில்லை’ என்றும் தெரிவித்திருக்கிறாா்.

காங்கிரஸ் தலைமை வரை பிரச்னை எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் வளா்ச்சிக்கும், மரியாதைக்கும் பங்கம் ஏற்படும் என்று மாநில காங்கிரஸாா் கருதினால், கூட்டணியிலிருந்து வெளியேறுவதில் தவறில்லை என்று கட்சித் தலைவா் சோனியா காந்தி கருதுவதாகத் தெரிகிறது.

சிவசேனையின் மறைமுக ஆதரவுடன், காங்கிரஸுடன் கலந்தாலோசிக்காமல், மாநிலங்களவைக்கு தனது இரண்டாவது வேட்பாளராக ஃபௌசியா கானை தேசியவாத காங்கிரஸ் நிறுத்தியிருக்கிறது. சோனியா காந்தியின் கோபத்துக்கு அது காரணமாக இருக்கும் என்று கூறுகிறாா்கள்.

கா்நாடகம், மத்திய பிரதேசத்தைத் தொடா்ந்து அடுத்தாற்போல பாஜகவின் அடுத்த இலக்காக மகாராஷ்டிரம் இருக்கக்கூடும். இந்த முறை, பாஜகவுக்கு வேலை வைக்காமல் காங்கிரஸே கூட்டணியைக் கவிழ்த்தாலும் வியப்பில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணகி அறக்கட்டளை வாகனங்களை தடை செய்த வருவாய் கோட்டாட்சியர்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய ராசி பலன்கள்!

ஈரோட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது

SCROLL FOR NEXT