சிறப்புக் கட்டுரைகள்

14 ஏக்கராக சுருங்கிவிட்ட 44 ஏக்கர் ஈரோடு கனிராவுத்தர்குளம்

கே.விஜயபாஸ்கா்

ஈரோட்டில் 44 ஏக்கர் அளவுக்குப் பரந்து விரிந்திருந்த கனிராவுத்தர் குளம் கடந்த 25 ஆண்டுகளில் வெறும் 14 ஏக்கர் அளவுக்குச் சுருங்கிப்போய்விட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றமே உத்தரவிட்டும், அதிகாரிகள்  நடவடிக்கையெடுக்கத் தயங்குகின்றனர். 

ஈரோட்டில் பி.பெ. அக்ரஹாரம் மற்றும் பெரிய சேமூர், வீரப்பன்சத்திரம் போன்ற பகுதிகளின் நீர்த்தேவைகளுக்குப் பேருதவி புரிந்துகொண்டிருந்தது கனிராவுத்தர்குளம்.

25 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இதைச் சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீராதாரத்திற்கும், நேரடி குடிநீர்ப் பயன்பாட்டிற்கும், மீன் பிடிப்பதற்கும் என்று பல வகைகளில் மக்களின் வாழ்வாதாரத்தில் இந்தக் குளம் பெரும் பங்கு வகித்தது. 2007 ஆம் ஆண்டு வரையிலும்கூட இங்கு மீன் பிடிப்பதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஏலம் விடப்பட்டுக் கொண்டுதான் இருந்தது.

ஆங்கிலேயர் ஆட்சியில் எடுக்கப்பட்ட நில அளவைப் பதிவுகளின்படி 44 ஏக்கர் பரப்பளவு இருந்த இந்தக் குளத்தின் தற்போதைய பரப்பு வெறும் 14 ஏக்கர்தான். இதன் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்பாளர்களால் சூழப்பட்டுவிட்டது. தமிழ்நாடு மாநகராட்சிக் கட்டுமான சட்ட விதிகளின்படி மயானத்தில் இருந்து  90 மீட்டர் வரையிலும், நீர்நிலைகளில் இருந்து 15 மீட்டர் வரையிலும் கட்டடங்கள் அமைக்கக் கூடாது. ஆனால், கனிராவுத்தர்குளத்தை ஒட்டியே கட்டடங்களும்  குடியிருப்புகளும் கட்டப்பட்டிருக்கின்றன. கரையே இல்லாத ஒரு குளமாகத் தற்போது அது இருப்பதற்குக் காரணம், குளத்திற்குள்ளேயே கட்டப்பட்டிருக்கும் கட்டடங்கள்தான்.

நசியனூர் சிந்தன்குட்டை, கமலம் குளம், புதுவலசு குளம், கருவில்பாறைவலசு குளம் போன்ற சிறிய நீர்நிலைகளிலிருந்து சிற்றோடைகள் வழியாக வரும் நீர்  கனிராவுத்தர் குளத்தில் கலக்கிறது. இந்த நீர்வழித்தடங்கள் அடைக்கப்பட்டுக் குளத்தில் நீர் தேங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த மதகுகள் உடைக்கப்பட்டதால் குளத்தில் நீர் தேங்காமல் போனது. தற்போது குளத்தின் பெரும்பாலான இடங்கள் மனைகளாக உருவெடுத்து இருக்கின்றன. 

குளப் பகுதிகளில் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்ததாக  இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கில் குளத்துப் பகுதிக்குள் இருக்கும் கட்டடங்களை 90 நாள்களில் மூடவும், அவற்றை அப்புறப்படுத்தவும் 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  

5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் இன்னும் அந்தக் கட்டடங்கள்  அப்புறப்படுத்தப்படவோ, குளத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்கப்படவோ இல்லை. அத்துடன் குளத்தை ஒட்டியே இருக்கும் வணிக வளாகமும் தங்கு தடையின்றிச் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அதுமட்டுமின்றி தற்போது இந்தப் பகுதிகளின் சாக்கடைக் கால்வாய்களின் தடங்களும்  கனிராவுத்தர் குளத்தை நோக்கியே திருப்பப்பட்டிருப்பதால் அனைத்து கழிவுகளும் குளத்தில்தான் சேருகின்றன. குளத்தைச் சுற்றியுள்ள கட்டடங்களின் கழிவுநீர்த் தொட்டிகளிலிருந்தும் கழிவுகள் இந்தக் குளத்தில் சேருகின்றன.

இதுகுறித்து கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நிலவன் கூறுகையில், 'கடந்த 7 ஆண்டுகளாகக் கனிராவுத்தர் குளத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து மக்களை ஒன்றிணைத்துப் போராடி வருகிறோம். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுப்பதில் தொடங்கி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது வரை பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டோம். 2015 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, 44 ஏக்கர் முழுமையாக மீட்கப்பட வேண்டும். அதற்காகத்  தொடர்ந்து போராடுவோம்' என்றார். 

இதுதொடர்பாக ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'ஒரு கட்டடம் ஆக்கிரமிப்புக் கட்டடம் என்பதைச் சொல்ல வேண்டியது வருவாய்த் துறைதான். அப்படி யாரும் சொல்லவில்லை. அந்தக் கட்டடம் குளத்தை ஒட்டியே கட்டும் விதத்தில் அவர்களுக்கு லேஅவுட் போட்டுக் கொடுத்தது, 2005 இல் அதைப் போட்டுக் கொடுத்த அதிகாரி. தவறு செய்தவர்களேதான் சரி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றிக் குளத்தை ஒட்டியுள்ள கட்டடத்தை இடிக்குமாறு நீதிமன்றம் எந்தவிதமான தீர்ப்பையும் அளிக்கவில்லை' என்றனர். 

மக்களால் தூர்வாரப்பட்ட இந்தக் குளம் கடந்த 2015 ஆம் ஆண்டு பருவ மழையின்போது குளத்தில் நீர் தேங்கியது. 14 ஏக்கர் இருக்கிறது, மீதி 30 ஏக்கர் எங்கே எனக் கேட்டு குளம் மீட்பு இயக்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்லை என்ற முடிவில் உள்ளதாகத் தோன்றுகிறது. 

ஆமை வேகத்தில் தூர்வாரும் பணி

கனிராவுத்தர்குளத்தில், சாக்கடை நீர் கலக்காதவாறு புனரமைப்பு நடக்கிறது. ஈரோடு நிலத்தடி நீராதாரங்களில்  ஒன்றான கனிராவுத்தர் குளம்,  சின்னசேமூர்,  பெரியசேமூர், கொங்கம்பாளையம், மாமரத்துப்பாளையம், சித்தோடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் பொழியும் மழை நீரின் ஆதார நீர்த்தேக்கமாக உள்ளது. 

குளத்தைச் சுற்றியும், மழை நீர் வரும் வழித்தடங்களில் சாக்கடை நீர் கலந்து வருவதால், குளத்தில் நிறைய தண்ணீர் இருந்தாலும், எவ்வித பயனுமில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குளத்தைப் பராமரிக்க வேண்டும் என்றும் குளத்தில் கலக்கும் சாக்கடைத் தண்ணீரைத் தடுத்துத் திசை திருப்பவும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கனிராவுத்தர் குளத்தில், சாக்கடை நீர் கலக்காதவாறு புனரமைப்பு பணி ஓராண்டுக்கும் மேல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கனிராவுத்தர் குளத்தில் கலக்கும் சாக்கடைக் கழிவு நீரைத் திசை திருப்பி,  சின்னசேமூர்  சாலையில் இருந்து, சக்தி சாலை  பிச்சைக்காரன் பள்ளம் ஓடை வரை, கான்கிரீட்  சாக்கடை  அமைக்ப்படுகிறது. மழை பெய்யும்போது, குளத்துக்கு மழை நீர் செல்லும் வகையிலும், மழையில்லாத காலத்தில் அவ்வழியாக வரும் சாக்கடை நீர்,  புதிதாகக் கட்டப்படும் சாக்கடை வழியாகச் செல்லும் வகையிலும்,  ஷட்டர் அமைக்கப்படவுள்ளது. இனி குளத்தில் சாக்கடை நீர் கலக்காது,  குளத்தைச் சுற்றிலும் நடைப்பயிற்சி பாதை, படகு சவாரி, நீர்த்திட்டு பூங்கா அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் ரூ.6 கோடி செலவில் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

எவ்வளவோ தொலைநோக்குடன் நம்முடைய முன்னோர்களால்  ஈரோட்டில் உருவாக்கப்பட்ட கனிராவுத்தர் குளம், மீண்டும் அதன் உண்மையான தோற்றத்தையும் பரப்பையும் பெறுமா? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகு குறித்த தவறான அளவுகோலை திரைப்படங்கள் முன்வைக்கின்றன..! பூமி பெட்னகர்!

ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

சென்னை: ரயில் சேவைகளில் மாற்றம்!

கோவை செல்லும் ரயில்கள் ஆவடியிலிருந்து புறப்படும்!

ஒரு கவிதையைப் போல... நிம்ரித் கௌர் அலுவாலியா!

SCROLL FOR NEXT