சிறப்புக் கட்டுரைகள்

சிவகுமாரின் திருக்குறள் கதைகள்!

தினமணி

திருக்குறள் பல்வேறு உரைகளை கண்டுள்ளது. பல்வேறு மொழிகளில் கொண்டு செல்லப்பட்டு உலகப் பொதுமறையாக பரிணமித்துள்ளது. 

திருக்குறள் தோன்றிய காலத்திலிருந்து சமூகச் சிக்கல்கள், அறம் சார்ந்த தேவைகள், ஏற்றத் தாழ்வுகள், தனி மனித உணர்வுகள், கோபங்கள், இன்பத் துன்பங்கள் இன்று வரை நீடிப்பதால் அதன் தேவையும் நீடித்து எந்த காலத்திற்கும் பொருந்துவதாக திகழ்கிறது.

திருக்குறளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக திரைப்பட - ஓவியக் கலைஞர் சிவகுமார்,  "திருக்குறள் 100" நூலினை பல்வேறு வாழ்க்கைச் சித்திரக் கதைகளாக படைத்துள்ளார். யாதொரு முன்னொட்டும் பின்னொட்டும் இன்றி ' சிவகுமார் ' என்றே தன்னை  பதிவு செய்கிறார்.

அவரது தொழில் சார்ந்தும் சமூக-கலை-இலக்கிய-அரசியல் வட்டம் சார்ந்தும் பல ஆளுமைகளை மட்டுமின்றி எளிய மனிதர்களின் பேராளுமைகளை குறள்களோடு பொருத்தி கதையாகப் பேச்சு மொழியில் தந்துள்ளார்.

சங்கப் புலவர்கள் தம் படைப்புகளை அவை ஏற்றம் செய்வது போல் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை வழி புத்தகக் கண்காட்சியில் பல நூறு மக்கள் முன்பு இவற்றை உரையாகவும் வடித்துள்ளார்.

தனது முன்னுரையில், 'நான் எழுதியுள்ள திருக்குறள் கதைகள் ஒவ்வொன்றுக்கும்...எனக்குப் பிடித்த குறளைப் பொருத்தியுள்ளேன் ...நீங்கள் உங்கள் விருப்பப்படி பொருத்திக்கொள்ளுங்கள்' என தெளிவாகச் சொல்கிறார்.

காந்தியடிகள், மார்க்ஸ் -ஜென்னி, நெல்சன் மண்டேலா, வேலு நாச்சியார், பாரதியார், பெரியார் - ராஜாஜி, லால்பகதூர் சாஸ்திரி, குல்சாரிலால் நந்தா, அப்துல்கலாம், அன்னை தெரஸா, ஜீவா, ஓமந்தூரார், காமராசர்- சி.சுப்ரமணியன், தியாகராஜ பாகவதர், கலைவாணர், கே.பி.எஸ்., அண்ணா, கலைஞர் - எம்ஜிஆர், சிவாஜி கணேசன், நீதியரசர் சந்துரு என அவரவர்கள் சார்ந்த நிகழ்வுகளைச் சொல்லி திருக்குறளோடு அடையாளப்படுத்துகிறார்.

விபத்தில் செயலற்றுப்போன மனைவி மகிமாவை 36 ஆண்டுகள் சிறு படுக்கைப்புண் கூட வராமல் காத்த ஓவியர் மனோகர் தேவதாஸ், குடியரசுத் தலைவர் பதவி ஏற்க நேரம் பார்க்கவா என கேட்ட அலுவலர்களிடம், 'சூரியனைப் பூமி சுற்றுகிற எல்லா நேரமும் நல்ல நேரமே ' என்ற அப்துல்கலாம், தந்தை வ.உ.சி.யைப் போன்றே நேர்மையாகவும் எளிமையாகவும் வாழ்ந்து மறைந்த வாலேஸ்வரன், 50 ஏக்கர் நிலத்தை பணி செய்த உழவர்களுக்கே பிரித்துக்கொடுத்த பாலம் கல்யாணசுந்தரம், ஈதல் இசைபட வாழும் சக்தி மசாலா இணையர், தனக்கு அளிக்கப்பட்ட பரிசுத்தொகையில் கிழிந்த ஆடையுடன் உள்ள சக மாணவர்களுக்கு புதுத்துணி வாங்கித் தருவேன் என்ற நாடோடி இனத்து மாணவன் ரஜினி, கைப்பிள்ளைக்கு கொடுத்த பசும்பாலுக்கு காசு வாங்க மறுத்த டீக்கடைத் தாத்தா, தவமிருந்து பெற்ற பிள்ளை காணாமல் போய் கிடைத்தபோது பணக்கட்டை தந்தபோது ..'இன்னா மனுசன்யா நீ ..உன் குயந்த வேற என் குயந்த வேறயா?' என்ற கலைக்கூத்தாடி, இப்படி எண்ணற்ற மனிதத்தை கதை மாந்தராக உலவ விட்டுள்ளார்.

தனது உறவினர்கள், ஊர்க்காரர்கள் என மிளகாய்கார பெரியம்மா, பொங்கியாத்தாள், பேச்சியம்மாள், சின்னத்தம்பி மாமா என பலரின் வாழ்க்கை எதிர்கொள்ளல்களை சொல்லி உருக்குகிறார். இவர்களில் சுப்பையா மாமா எல்லோரிலும் உயர்ந்து நிற்கிறார்.சிவகுமாரை விட 12 வயது மூத்த 17 வயது அண்ணன் சண்முகம் பிளேக் நோயால் இறக்க ஊரை விட்டு எல்லோரும் போய்விட சுப்பையா மாமா ஒண்டி ஆளாக சுடுகாட்டில் குழிவெட்டி, விறைத்த உடலை தனி ஆளாக தூக்கிச் சென்று புதைத்தக் காட்சி நெஞ்சை பிழிகிறது ..பயன்தூக்கார் செய்த உதவி.

பல்வேறு நிகழ்வுகள், கதைகள், புதைச்சாக்கடை மரணங்கள், தூய்மைப் பணியாளர்களின் துயரங்கள் என எளியவருக்கும் திருக்குறளை கொண்டு சென்றுள்ளார். பொதுவாக மனிதர்களின் பெருமை சார்ந்த பல செய்திகளை சொன்னவர் ஒரு சிறுமைத்தனத்தையும் சொல்கிறார்.

விளையாட்டு ஈடுபாட்டினால் மாடு மேய்க்கும் சிறுவன் சோளக்கொல்லையில் மாடுகள் மேய்ந்ததை கவனிக்கவில்லை. அந்த முதலாளி / பண்ணையார் சாட்டையால் ரத்தம் வரும்வரை அடிக்கிறார், இதனை தட்டிக்கேட்டவர்களின் பத்து குடிசைகள் தீக்கிரையாகின்றன.  அந்தப் பண்ணையார் பின்னாளில் எதிர்பாராத கார் விபத்து ஒன்றில் இறக்கிறார். நம் சமூக பொதுப்பார்வை அடிப்படையில் ..அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு என்கிறார்.

ஆனால் நீதி, நெறி தவறியவர்களை ..சாணிப்பால் கொடுத்து சாட்டையால் அடித்தவர்களை மக்கள் இயக்கங்களின் எழுச்சியே பாடம் சொல்லிக் கொடுத்தது.

சிவகுமார் வசதி பெற்ற பின்னரும் தனது பிள்ளைகளை நல்லது கெட்டதுகளை அறியும் வகையில் வளர்த்து இன்று பல்வேறு ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக அகரம் அறக்கட்டளை வழி கல்விக்கண் திறப்பது திருக்குறளின் அறத்துக்கான அடையாளமாகும்.

'தூரிகை..நடிப்பு..பொழிவு..எழுத்து.. என தன்னையே தான் வென்று காட்டும் செயற்பேறு' என்று பாவலர் அறிவுமதி சொல்வது பொருத்தமான ஒன்றாகும்.

திருக்குறள் '100' - சிவகுமார் | அல்லயன்ஸ் வெளியீடு | முதற்பதிப்பு 2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டி அணிந்து வந்தால் அனுமதி இல்லை!

கேஜரிவால் வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

சிலையே படம் பிடித்தால்.. எமி ஜாக்சன்

700 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலுக்கு அறநிலையத் துறையின் தக்கார் நியமனம் செல்லும்!

இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT