தலையங்கம்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை...

ஆசிரியர்

இந்தோனேஷியாவிலுள்ள சுரபயா என்கிற துறைமுகத்துக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து எட்டு பெட்டகங்கள் (கண்டெய்னர்கள்') கப்பலில்  வந்தன. ஓஷியானிக் மல்ட்டி டிரேடிங்' என்கிற ஆஸ்திரேலிய நிறுவனம் இந்தோனேஷிய நிறுவனம் ஒன்றிற்கு அந்தப் பெட்டகங்களில் பழைய காகிதங்களை அனுப்பியிருந்தது. அந்தப் பெட்டகங்களை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட இந்தோனேஷிய சுங்க இலாகாவினர் அதிர்ந்து விட்டனர்.
எட்டு பெட்டகங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து 218 டன் குப்பைக் கழிவுகள், பழைய காகிதம் என்கிற பெயரில் இந்தோனேஷியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. நெகிழிக் கழிவுகள், இ-கழிவுகள், குப்பைக் கழிவுகள், வீட்டுக் கழிவுகள் மட்டுமல்லாமல், பெண்களின் மாதவிடாய் அணையாடை (சானிட்டரி நாப்கின்கள்'), குழந்தைகளின் அரையாடை (டயாப்பர்ஸ்) குத்தி அடைக்கப்பட்டிருந்தன. அந்த எட்டு பெட்டகங்களும் ஆஸ்திரேலியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டன. 
இரண்டு வாரங்களுக்கு முன்புதான் இந்தோனேஷியா இதேபோல பிரான்சிலிருந்தும், வேறு சில மேலை நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட 49 பெட்டகங்களைத் திருப்பி அனுப்பியது. கடந்த மே மாதம் பல்வேறு நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட 450 டன் பிளாஸ்டிக் கழிவுகளை, மலேசியா அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பியது.
கடந்த மாதம் கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட நகராட்சி, மாநகராட்சி குப்பைக் கழிவுகளை பிலிப்பின்ஸ் நாடு திருப்பி அனுப்பியது. 69 பெட்டகங்களில் நிரப்பப்பட்டிருந்த அந்தக்  குப்பைக் கழிவுகள் ஏறத்தாழ இரண்டு வாரங்கள் துறைமுகத்தில் அனுமதிக்காகக் காத்துக் கிடந்து, அனுமதி மறுக்கப்பட்டு மீண்டும் கப்பலில் திருப்பி ஏற்றப்பட்டது. 
2018-ஆம் ஆண்டு வரை வெளிநாடுகளிலிருந்து நெகிழிக் கழிவுகளை சீனா துணிந்து இறக்குமதி செய்து வந்தது. அந்த நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து புதிய பொருள்களாக ஏற்றுமதி செய்தது. நெகிழிக் கழிவுகளுடன், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் சுகாதாரக் கேடுகளுக்கு வழிகோலும் நச்சுக் கழிவுகளும் அதிக அளவில் நுழையத் தொடங்கியபோதுதான் சீனா விழித்துக் கொண்டது.
நெகிழிக் கழிவு இறக்குமதிக்குச் சீனா தடை விதித்ததைத் தொடர்ந்து, வளர்ச்சி அடைந்த நாடுகள் பெரும் பிரச்னையில் சிக்கிக் கொண்டன. தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் கழிவுகளைக் கொண்டுபோய்க் கொட்டுவதற்கு இடமில்லாமல், வளர்ச்சி அடையாத நாடுகளுக்குக் காகிதக் கழிவுகள் என்கிற பெயரில் ஏற்றுமதி செய்யத் தொடங்கின.
மேலை நாடுகளில் உருவாகும் குப்பைக் கழிவுகள் ஆப்பிரிக்க நாடுகளைவிட, ஆசிய நாடுகளுக்குத்தான் அதிகமாக ஏற்றுமதி  செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக,  இந்தியா உள்ளிட்ட தெற்காசியாவும், இந்தோனேஷியா, மலேசியா, வியத்நாம், பிலிப்பின்ஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவும்தான் ஆபத்தான, சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் கழிவுகளின் குப்பைத் தொட்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பத்தாண்டுகளுக்கு முன்பே, 12.06.2009-இல் நாம் என்ன குப்பைத் தொட்டியா?' என்கிற தலைப்பில் இந்தப் பிரச்னை குறித்த தினமணி' தலையங்கம், இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் கழிவுகள் குறித்த அச்சத்தை  வெளிப்படுத்தியிருந்தது. செப்டம்பர் 2005-ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு 25,000 டன் பழைய கழிவுகள் வந்து இறங்கின. அதில் 40 பெட்டகங்களில் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகராட்சி குப்பைக் கழிவுகள் நிரப்பப்பட்டிருந்தன. இந்தியாவில் கொட்டுவதற்குக் கொண்டுவரப்பட்ட நெகிழிக் கழிவுகள், பூச்சிக்கொல்லி மருந்துக் குப்பிகள், செயலிழந்த பேட்டரிகள், உபயோகப்படுத்தப்பட்ட மாதவிடாய் அணையாடை உள்ளிட்டவை அவற்றில் அடைக்கப்பட்டிருந்தன.
அதுபோல, எத்தனை எத்தனை கப்பல்களில் எத்தனை எத்தனை பெட்டகங்களில் மேலைநாட்டு குப்பைக் கழிவுகள் இந்தியாவுக்குக் கடந்த பல ஆண்டுகளாகக் கொண்டுவரப்படுகின்றன என்பது வெளியில் தெரியாத ரகசியம். இந்தியா மட்டுமல்ல, உலகிலுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட வளர்ச்சி அடையும் நாடுகள் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றன. உள்நாட்டில் உருவாகும் குப்பைக் கழிவுகளையே வெளியேற்ற முடியாமல் நாம் திணறும் நிலையில், பிற நாட்டுக் கழிவுகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்களை நாம் தேசத் துரோகிகளாகக் கருதாமல் வணிக நிறுவனங்களாக ஏற்றுக்கொள்கிறோம் என்பதுதான் வேதனைக்குரிய எதார்த்தம்.
கடந்த மே மாதம், நார்வேயில் பேசல்' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் 14-ஆவது மாநாடு கூடியது. 1992-இல் கூடிய பேசல்' மாநாடு, வளர்ச்சி அடைந்த நாடுகளிலிருந்து, வளர்ச்சி அடையும் நாடுகளுக்கு அனுப்பப்படும் நச்சுக் கழிவுகளின் இடமாற்றத்தைத் தடுப்பது குறித்து விவாதித்தது. கழிவுகள் உற்பத்தியாகும் இடத்திலேயே அவை அழிக்கப்பட வேண்டும் என்று பேசல்' கூட்டறிக்கை வலியுறுத்தியது.
சமீபத்தில் நார்வேயில் நடந்த கூட்டத்தில் 185 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கழிவுகளைக் கையாளும் நிறுவனங்கள் எந்தவித சர்வதேசக் கட்டுப்பாட்டிலும் இல்லை எனும் நிலையில், அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறுகின்றன வளர்ச்சி அடையும் நாடுகள். அவற்றில் மிக முக்கியமான நாடு நமது இந்தியா.
நதிகள், நீர் நிலைகள், குளம் குட்டைகள், ஏன் இந்தியாவின் கடற்பரப்பு வரை குப்பைக் கூளமாகி வருகின்றன. இதனால் ஏற்பட இருக்கும் சுகாதாரக் கேடுகளும், உருவாக இருக்கும் நோய்த் தொற்றுகளும் பயமுறுத்துகின்றன. ஆனால், நாம் கவலைப்படாமல் இருக்கிறோம்...!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் ஜூன் 21 முதல் வழங்கப்படும்

3,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 போ் கைது

மக்களவைத் தோ்தல் இரு தத்துவங்களுக்கு இடையிலான போராட்டம்: ராகுல் காந்தி

பாலியல் வழக்கு: குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்கலாம்

SCROLL FOR NEXT