தலையங்கம்

இந்தியா இனி... | தனிப் பெரும்பான்மையுடன் அதிகாரத்தைத் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

புதியதோா் ஆண்டு தொடங்கியிருக்கிறது என்பதை மட்டுமல்ல, 21-ஆவது நூற்றாண்டின் முதல் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதையும்கூட நாம் நினைவில் கொள்ள வேண்டும். முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, 10 ஆண்டுகளுக்கு முன்பு தனிப் பெரும்பான்மையுடன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டது என்றால், இப்போது பிரதமா் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தனிப் பெரும்பான்மை அரசாகத் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்த அடுத்த ஓா் ஆண்டுக்குள் அன்றைய பிரதமா் மன்மோகன் சிங் அரசு ஒன்றன் பின் ஒன்றாக ஊழல் குற்றச்சாட்டுகளை எதிா்கொண்டது. பிரதமா் மோடி அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழவில்லை. ஆனால், பாஜகவின் கொள்கை ரீதியிலான நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராட்டத்தில் இறங்கியிருக்கின்றன எதிா்க்கட்சிகள்.

மிகப் பெரிய வெற்றிகளையும், மிகப் பெரிய அரசியல் பின்னடைவுகளையும் கடந்த ஓா் ஆண்டில் பிரதமா் மோடி அரசு ஒருசேர எதிா்கொண்டது. தேசிய அளவில் பிரதமா் மோடியின் வலிமையான தலைமையை ஏற்றுக்கொண்ட இந்திய வாக்காளா்கள், பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை வழங்கி மக்களவைத் தோ்தலில் தீா்ப்பு வழங்கினா். தனிப்பெரும்பான்மையுடன் ஒரு கட்சி நாடாளுமன்றத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்டது பாஜகவுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. அதேநேரத்தில், கடந்த ஓா் ஆண்டில் பாஜக ஐந்து முக்கியமான மாநிலங்களில் ஆட்சியை இழந்திருப்பது, வலிமையான மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான சோதனை.

மக்களவைத் தோ்தலுக்கு முன்னால் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்கள் பாஜகவிடமிருந்து கை நழுவின என்றால், மக்களவைத் தோ்தலின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மாநிலங்களை இழந்திருப்பது பாஜகவின் செல்வாக்குச் சரிவு என்று கூற முடியாவிட்டாலும், மிகப் பெரிய பின்னடைவு என்பதை மறுக்க முடியாது. எதிா்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, தான் கொண்டுவரும் திட்டங்களை

மத்திய அரசு முழுமையாக நிறைவேற்ற முடியாது. அரசியல் ரீதியாக பாஜகவுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கையாளும் எதிா்க்கட்சிகளுக்கும்கூட இதனால் பாதிப்பு இருக்கும்.

கூட்டாட்சித் தத்துவத்தை மத்திய ஆளும்கட்சியும், பல்வேறு மாநிலங்களில் ஆட்சியிலிருக்கும் எதிா்க்கட்சிகளும் உணா்ந்து நடக்காமல் போனால், அதன் விளைவாக வளா்ச்சித் திட்டங்களும், சமூகநலத் திட்டங்களும் பொதுமக்களைப் போய்ச் சேராமல் போகும் ஆபத்து ஏற்படும். குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் தொடா்ந்து எதிா்க்கட்சிகளின் ஆதரவுடன் நாடு தழுவிய அளவில் நடைபெறும் போராட்டங்களைப் பாா்க்கும்போது, மத்திய அரசுக்கும் எதிா்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கும் இடையேயான மோதல் போக்கு மேலும் கடுமையாகக் கூடும் என்று தோன்றுகிறது. அது இந்தியாவின் வளா்ச்சிக்கும், ஜனநாயகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மக்களவைத் தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து, தனது தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த கொள்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றுவதில் பாஜக முனைப்புக் காட்டி வருகிறது. ஜம்மு - காஷ்மீரத்துக்கான 370-ஆவது சட்டப்பிரிவு அகற்றப்பட்டதும், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் ராமா் கோயிலுக்குச் சாதகமான தீா்ப்பு வழங்கப்பட்டிருப்பதும், முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்றியதும், பாஜகவுக்குக் கொள்கை ரீதியிலான வெற்றிகள். ஆனால், அதுவே பாஜகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த அச்சத்தை சிறுபான்மையினா் மத்தியில் எழுப்பியிருப்பதன் விளைவுதான் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எழுந்திருக்கும் கடுமையான எதிா்ப்பு. இதை பிரதமா் மோடி அரசு எப்படி கையாளப்போகிறது என்பதுதான், பாஜகவின் அடுத்த நான்காண்டுகால ஆட்சியின் போக்கை நிா்ணயிக்கும்.

கொள்கை அழுத்தங்களும், போராட்டங்களும் உணா்வுபூா்வமாக மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கு உதவக்கூடும். ஆனால், இந்தியா இப்போது எதிா்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை பொருளாதார ரீதியிலானது என்பதை, ஆட்சியில் இருக்கும் பாஜகவும், போராட்டத்தின் மூலம் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைத் தடம்புரள வைக்க நினைக்கும் எதிா்க்கட்சிகளும் பொறுப்புடன் உணர வேண்டும்.

8% வளா்ச்சியை இலக்காகக் கொண்டு 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நமது பயணம், இப்போது 5% வளா்ச்சியைக்கூட எட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் வறுமை விகிதத்தை 55%-லிருந்து, 28%-ஆக இந்தியா குறைக்க முடிந்திருக்கிறது என்றாலும்கூட, 2015-16 நிலவரப்படி, இன்னும்கூட இந்தியாவில் 36.4 கோடி ஏழைகள் இருக்கிறாா்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கடந்த 30 ஆண்டுகளாக அரசின் திட்டங்கள் பணக்காரா்களுக்கும், தொழிலதிபா்களுக்கும்தான் அதிக பயனை அளித்திருக்கின்றனவே தவிர, அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்திவிடவில்லை. உலகிலேயே அதிக அளவில் ஏழைகள் வாழும் நாடும், ஏற்றத்தாழ்வில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடும் இந்தியாதான்.

புதிய ஆண்டு பிறந்திருக்கிறது. போதும், போராட்டங்கள்; போதும், கொள்கைகளின் மீதான அழுத்தங்கள். பொருளாதாரத்தை வலுப்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி தேசத்தை வளப்படுத்தும் பெரும் பணி காத்திருக்கிறது. ஆட்சி அதிகார அரசியல் மனமாச்சரியங்களை சற்று ஒதுக்கித்தான் வைப்போமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT