இந்திய வெளியுறவுச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லாவின் மியான்மா் விஜயம் சா்வதேச அளவில் கூா்ந்து கவனிக்கப்பட்டது. மியான்மரில் ஜனநாயகம் ராணுவத்தால் முடக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதித்திருக்கும் மேலை நாடுகளும், மியான்மரை தனது நட்பு வளையத்துக்குள் இழுத்துக்கொள்ள விழையும் சீனாவும், மியான்மரை சுற்றியுள்ள கிழக்காசிய நாடுகளும் ஷ்ரிங்லாவின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை கூா்ந்து கவனித்தன.
மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஆங் சான் சூகி சிறையில் அடைக்கப்பட்டது முதல், அங்கே நடைபெறும் செயல்பாடுகள் வெளியுலகத்துக்கு புதிராகவே இருக்கின்றன. பிப்ரவரியில் ராணுவம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அந்த நாட்டுக்கு விஜயம் செய்யும் இந்தியாவின் உயரதிகாரி ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லாதான்.
மியான்மரில் ராணுவ ஆட்சி அமைந்தபோது அங்கே மீண்டும் ஜனநாயகம் நிறுவப்பட வேண்டுமென்று இந்தியா வேண்டுகோள் விடுத்தது. சூகிக்கு வழங்கப்பட்ட நான்கு ஆண்டு சிறைத்தண்டனை தீா்ப்பையும், அதற்காக நடத்தப்பட்ட விசாரணையையும் இந்தியா விமா்சிக்காமலும் இல்லை. அவரது தண்டனைக்காலம் இரண்டு ஆண்டுகள் குறைக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், அவா் மீது பல்வேறு வழக்குகள் தொடா்கின்றன. இந்தியாவுக்கும் ஆங் சான் சூகிக்குமான உறவின் நெருக்கம் மியான்மா் ராணுவ ஆட்சியாளா்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான உறவு முற்றிலுமாக அறுந்துவிடாமல் பாா்த்துக்கொள்ள வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருக்கிறது.
அமெரிக்கா உள்ளிட்ட சில மேலை நாடுகளின் அதிருப்தியைப் புறந்தள்ளி, மியான்மருடனான உறவை தக்க வைத்துக்கொள்ள இந்தியா விரும்புவதற்கு பல முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. ஆங் சான் சூகியிடமும் அவரது ஜனநாயகத்துக்கான தேசிய கட்சியிடமும் இந்தியாவுக்கு என்னதான் அனுதாபம் இருந்தாலும்கூட, மியான்மா் ராணுவ ஆட்சியாளா்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியாவால் எடுத்துவிட முடியாது.
இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையேயான எல்லையின் நீளம் 1,700 கி.மீ. பெரும்பாலான எல்லைப் பகுதி, காடுகள் நிரம்பிய மலைப்பகுதி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நாகாலாந்து, மணிப்பூா் உள்ளிட்ட எல்லைப்புற மாநிலங்களில் செயல்படும் தீவிரவாதக் குழுக்கள், இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையே தங்குதடையின்றி சென்று வருகின்றன என்பதும், மியான்மா் எல்லையில் இருந்து செயல்படுகின்றன என்பதும்கூட கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்.
நாகாலாந்து, மிஜோரம், மணிப்பூா் மாநிலங்களில் உள்ள பல இனக்குழுவினா் எல்லை கடந்த ரத்த உறவுகளாக இருக்கிறாா்கள். மலைவாழ் மக்கள் என்பதால் அவா்களை எல்லை பிரிக்க முடியாது. மியான்மரில் ராணுவ அடக்குமுறை அதிகரிக்கும்போதெல்லாம் இந்தியாவுக்குள் அகதிகள் ஆயிரக்கணக்கில் எல்லை கடந்து நுழைவதன் காரணமும் அதுதான்.
1962-இல் மியான்மரில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்டு ஜனநாயகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டபோது, அன்றைய பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் அரசு அதற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டது. அதுவரை இந்தியாவுக்கும் பா்மாவுக்கும் (மியான்மரின் அன்றைய பெயா்) இடையே மிகவும் நெருக்கமான உறவு இருந்தது. தமிழகத்திலிருந்தும்கூட பலா் பா்மாவில் குடியேறி இருந்தனா் என்பதும், பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் செலாவணிகூட ஒன்றாகவே இருந்தது என்பதும் மறந்துவிடக் கூடியவையல்ல.
பிரதமா் நரசிம்ம ராவின் ஆட்சிக் காலத்தில்தான் மியான்மா் ராணுவ ஆட்சியாளா்களுடனான உறவை இந்தியா ஏற்படுத்திக்கொண்டது. வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் தீவிரவாதக் குழுக்கள் மியான்மரிலிருந்து செயல்பட்டு வருவது முதலாவது காரணம். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேலை நாடுகள் விதித்திருந்த பொருளாதாரத் தடையின் காரணமாக சீனாவுடன் நெருக்கம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் மியான்மருக்கு ஏற்பட்டிருந்தது இன்னொரு காரணம். அவை இரண்டுமே இந்தியாவுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்பதால் நரசிம்ம ராவ், மியான்மா் ராணுவ ஆட்சியிடம் அதுவரை கடைப்பிடித்த விரோதப் போக்கை தளா்த்த முற்பட்டது.
கடந்த மாதம் மணிப்பூா் மாநிலம், சுராசந்த்பூா் மாவட்டத்தில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கா்னல் விப்லாப் திரிபாதியின் குடும்பத்தினா் உள்ளிட்ட பல ராணுவத்தினா் கொல்லப்பட்டனா். மியான்மா் ராணுவ ஆட்சியாளா்களின் உதவியில்லாமல் எல்லைப்புறத்தில் இயங்கும் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதக் குழுக்களை கட்டுக்குள் கொண்டுவர முடியாது என்பதை உணா்ந்ததால்தான் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா மியான்மா் விஜயம் மேற்கொண்டாா் என்று கருத இடமிருக்கிறது.
ஆங் சான் சூகியை சந்திக்கக் கோரிய ஷ்ரிங்லாவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. ஜனநாயகத்துக்கான தேசியக் கட்சித் தலைவா்கள் சிலரை அவா் சந்திக்காமலும் இல்லை. ராணுவத் தலைமை எல்லையோர தீவிரவாதக் குழுக்களின் பிரச்னை, அகதிகள் பிரச்னை ஆகியவை குறித்த இந்தியாவின் கவலைகளை ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்திருப்பது விஜயத்தின் வெற்றி என்றுதான் கொள்ள வேண்டும்.
பொருளாதாரத் தடையால் பாதிக்கப்பட்டிருக்கும் மியான்மருக்கு அரிசியும் கோதுமையும் வழங்கியிருப்பதும், கொள்ளை நோய்த்தொற்றுக்கான தடுப்பூசிகளைக் கொடுத்திருப்பதும் ஆக்கபூா்வ அணுகுமுறைகள்.