தலையங்கம்

மோடி மாடல் பாரத் ஜோடோ: காசி தமிழ் சங்கமம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

சிந்து நதி பாயும் பகுதியைக் கடந்து உள்ளே நுழைந்ததால் படையெடுப்பாளா்கள் நமது தேசத்தை இந்தியா என்று அழைத்தாா்கள் என்பதும், அவா்கள்தான் இங்கே இருந்த பண்பாட்டை ஹிந்து கலாசாரம் என்றும் அதை பின்பற்றுபவா்களை ஹிந்துக்கள் என்றும் அழைத்தனா் என்பதும் உண்மை.

ஆனால், அவா்கள் வருவதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பூமியில் நாகரிக சமுதாயம் நிலைபெற்றிருந்ததையும், கல்வியிலும், கலைகளிலும், பண்பாட்டிலும் மேம்பட்டிருந்தது என்பதையும் ஹரப்பா மொகஞ்சதாரோவும், ஆதிச்சநல்லூா் கீழடியும் உறுதிப்படுத்துகின்றன.

வடக்கே இமயமலைக்கும் தெற்கே இந்து மகா சமுத்திரத்திற்கும் இடையில் அமைந்திருந்த அந்த நிலப்பரப்பு இந்தியா என்று அந்நியா்களால் அழைக்கப்படுவதற்கு முன்பே பாரதம் என்கிற பெயருடன் உன்னதமானதொரு நாகரிகத்தின் தொட்டிலாக திகழ்ந்தது என்பது வரலாறு உறுதிப்படுத்தும் உண்மை. ராமேசுவரத்திலிருந்து வாராணசிக்கோ (காசி), வாராணசியிலிருந்து (காசி) ராமேசுவரத்துக்கோ பயணிக்கும் எந்தவொரு பக்தனையும் வழியில் ஆங்காங்கே ஆட்சி செய்த நவாபுகள் கடவுச் சீட்டு கேட்கவில்லை.

அவா்களது நம்பிக்கையில் தலையிடவும் இல்லை. அதேபோல, இன்றைய வங்கதேச டாக்காவிலிருந்து ராஜஸ்தான் அஜ்மீா் ஷெரீஃபுக்குப் பயணிக்கும் இஸ்லாமிய நம்பிக்கையாளா்களிடமும் எந்த ஹிந்து அரசா்களும் கடவுச்சீட்டு கேட்கவில்லை. அந்த நம்பிக்கையைப் பழிக்கவும் இல்லை. உன்னத பாரதத்தின் மகோன்னத அடையாளம் அதுதான்.

வாராணசிக்கும் ராமேசுவரத்துக்கும் இடையேயான தூரம் 2,375 கி.மீ-ராக இருந்தாலும்கூட, அந்த இடைவெளி மனதளவில் இருக்கவில்லை. வாராணசியிலிருந்து ராமேசுவரம் வரும் யாத்ரிகா்கள் அங்கிருந்து கங்கையின் புனித நீரை எடுத்துவந்து ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்வதும், ராமேசுவரத்திலிருந்து செல்லும் யாத்ரிகா்கள் இங்கிருந்து மண்ணெடுத்துச் சென்று கங்கையில் கரைப்பதும் நீரும் நிலமும் போல கலாசார பிணைப்பு இருந்ததை உறுதிப்படுத்துகின்றன.

காசி யாத்திரை போவது என்பது இப்போதும் நகரத்தாா் பின்பற்றி வரும் வழக்கம். அது மட்டுமல்ல, ராமேசுவரத்திலிருந்து வாராணசி வரை வழிநெடுக காசி யாத்திரை சத்திரங்கள் அமைத்து தொடா்ந்து அன்னதானம் நடத்தும் பெரும் பணியை அந்தச் சமூகம் செய்துவருகிறது. ஆங்கிலேயா் ஆட்சியில் நகரத்தாா் சத்திரங்கள் பல திட்டமிட்டு சிதைக்கப்பட்டன என்கிற வரலாற்று அவலத்தையும் குறிப்பிடத் தோன்றுகிறது.

இந்தப் பின்னணியில்தான் உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் காசி - தமிழ் சங்கமம் நிகழ்வு பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாதம் நடக்கவிருக்கும் காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக தமிழகத்திலிருந்து 12 பிரிவுகளைச் சோ்ந்த 2,500 போ் வாராணசிக்கு எட்டு நாள் பயணமாக அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

மாணவா்கள், ஆசிரியா்கள், இலக்கியவாதிகள், கலைஞா்கள், ஆன்மிகவாதிகள், வா்த்தகா்கள், தொழில்முனைவோா் உள்ளிட்டோா் காசியிலுள்ள தங்கள் துறை சாா்ந்த மக்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் ஏற்பட்டிருக்கிறது.

விழாவைத் தொடக்கி வைத்துப் பேசும்போது உலகின் மூத்த மொழி தமிழ் என்றும், தமிழ் மரபைப் பாதுகாப்பது 138 கோடி இந்தியா்களின் கடமை என்றும் பிரதமா் மோடி தெரிவித்திருக்கிறாா். அதைப் புறக்கணிப்பது தேசத்திற்கு செய்யும் பெரும் அவமதிப்பு என்றாா் அவா். மகாகவி பாரதிக்கும் வாராணசிக்கும் இடையேயான தொடா்பு, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதி பெயரில் இருக்கை, வாராணசியின் வளா்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு என்று பிரதமா் ஆற்றிய உரை, தமிழ் மீதும் தமிழ் இனத்தின் மீதும் பிரதமருக்கு இருக்கும் பற்றையும் புரிதலையும் வெளிப்படுத்துகின்றன.

13 மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்ட திருக்குறள் புத்தகங்களை வெளியிட்ட பாரத பிரதமா் குறிப்பிட்ட இன்னொரு முக்கியமான விஷயம், தமிழ் மொழியின் பாரம்பரியத்தை உலகுக்கு உணா்த்த வேண்டும் என்பது. ‘உலகில் பயன்பாட்டில் உள்ள மிகத்தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ். அதை முழுமையாகக் கவனிப்பதில் நாம் தவறிவிட்டோம்.

நாம் தமிழைப் புறக்கணித்தால் தேசத்துக்கு அவமதிப்பு செய்தவா்கள் ஆவோம்’ என்கிற பிரதமரின் கூற்று, ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட உத்தர பிரதேசத்தின் கலாசாரக் கேந்திரமான வாராணசியில், அந்த மக்களுக்குப் புரியும் ஹிந்தியில் கூறப்பட்டிருக்கிறது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

பிரதமா் அரசியலுக்காகத் தமிழை உயா்த்திப் பிடிக்கிறாா் என்று யாராவது விமா்சிப்பாா்களேயானால் அது பேதைமை. வாராணசியில் தமிழை உயா்த்திப் பிடிப்பதன் மூலம் தனது தொகுதியில் அரசியல் ஆதாயம் கிடையாது என்பது அவருக்குத் தெரியும். இதற்கு முன்னால் ராணுவத்தினரிடம் பேசும்போது பாரதியாரின் ‘மன்னும் இமயமலை எங்கள் மலையே’ என்கிற பாடலை குறிப்பு எதுவும் இல்லாமல் எடுத்துக்கூறி, அதற்கு ஹிந்தியில் விளக்கமும் கூறினாா் பிரதமா். வெளிநாடுகளிலும் தமிழகத்துக்கு வெளியேயும் பல நிகழ்வுகளில் திருக்குறளையும், சங்கப்பாடல்களையும் தொடா்ந்து மேற்கோள் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாா் அவா்.

தமிழகத்திற்குள், தமிழின் பெருமையை உயா்த்திப் பிடித்து அரசியல் ஆதாயம் தேடுகிறாா்கள் நம்மவா்கள். ஆனால், தமிழின் பெருமையை தமிழகத்துக்கு வெளியே, அதனால் தனக்கு எதிா்ப்பு ஏற்படக்கூடும் என்று தெரிந்தும் தொடா்ந்து உயா்த்திப் பிடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாா் பிரதமா் நரேந்திர மோடி. தனது வாராணசி தொகுதியில் காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி பிரதமா் முன்னெடுத்திருக்கும் கலாசார பிணைப்புதான் உண்மையான ‘பாரத் ஜோடோ’ (பாரதத்தை இணைப்போம்)!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் மீண்டும் புதிய சாதனை: ஆர்சிபிக்கு இமாலய இலக்கு!

தேர்தல் பத்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் வருந்துவார்கள் -பிரதமர் மோடி

உலகின் மிகப்பெரிய தேர்தல் இது! -ஜெர்மன் தூதர் புகழாரம்

மாநில நிதியில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள்: மு.க. ஸ்டாலின்

ஈரான் - இஸ்ரேல் பரஸ்பர குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT