தலையங்கம்

நிதானம் விவேகம்! | பெருகிவரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்த தலையங்கம்

ஆசிரியர்

சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. 2022-இல் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2021-ஆம் ஆண்டைவிட 8.50 லட்சம் குறைந்திருப்பதாக அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. 2016-இல் 1.78 கோடி குழந்தைகள் பிறந்த நிலையில், இது ஒவ்வோர் ஆண்டும் படிப்படியாகக் குறைந்து 2022-இல் 95.6 லட்சமாகி இருக்கிறது என்பது அந்த நாட்டின் ஆட்சியாளர்களைக் கவலை கொள்ளச் செய்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக சீன இளைஞர்களும், இளம்பெண்களும் திருமணம் செய்துகொள்வதை தள்ளிப்போடுவது, குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போடுவது அல்லது தவிர்ப்பதும்கூட இந்த நிலைக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த 2013-இல் 1.34 கோடியாக இருந்த திருமணங்களின் எண்ணிக்கை 2020-இல் 81.4 லட்சமாக குறைந்திருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

பெருகிவரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த 1980-களில் 'ஒரு குழந்தை மட்டும்' என்ற கொள்கையை சீனா தீவிரமாக அமல்படுத்தியது. கட்டாயக் கருக்கலைப்பு, அதிகபட்ச அபராதம் போன்றவற்றால் இந்தத் திட்டத்தை சீனா கடுமையாக அமல்படுத்தியது.

குழந்தை பிறப்பு சரிவால் பல்வேறு இடர்களை சீனா எதிர்கொண்டு வருகிறது. வேலை செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதால் பல்வேறு தொழில்களிலும் ஆள்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், பல தொழில் நிறுவனங்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், வங்கதேசத்துக்கும், இன்னும் பிற நாடுகளுக்கும் இடம்பெயர்ந்துவிட்டன.

தற்போதைய சூழலில், சீனாவில் உழைப்பதற்கேற்ற 16 முதல் 59 வயதுடையவர்கள் 87.56 கோடி பேர் உள்ளனர். இது அந்த நாட்டு மக்கள்தொகையில் 62% ஆகும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 28 கோடி பேர். இது மக்கள்தொகையில் 19.8% ஆகும். 2010-ஆம் ஆண்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின்  எண்ணிக்கை 13.3%-ஆக இருந்த நிலையில், இது 2050-ஆம் ஆண்டு 35% ஆகிவிடும் என்று சீன அரசு அஞ்சுகிறது.

முதியவர்களுக்கான மருத்துவச் செலவு கடந்த 2015-இல் அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 7% ஆகும். அதுவே 2050-இல் 26%-ஆக இருக்கும் என சீன அரசு கணித்துள்ளது. இந்த உயர்வு அந்த நாட்டின் பொருளாதாரத்தில் மிகவும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதுபோன்ற இடர்களைக் கடந்த பல ஆண்டுகளாக எதிர்கொண்டதால், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. 'ஒரு குழந்தை மட்டும்' என்ற கொள்கையை கடந்த 2016-இல் கைவிட்டது. இந்த எண்ணிக்கை வரம்பை மூன்றாக உயர்த்தியதுடன், சில பொருளாதார சலுகைகளையும் கடந்த 2021 மே மாதம் அறிவித்தது. அதன் பின்னர், இரு மாதங்கள் கழித்து எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

ஆனாலும், பிறப்பு விகிதம் அதிகரிப்பதாக இல்லை. நகரமயமாக்கல் காரணமாக அதிகரித்துள்ள அன்றாட குடும்பச் செலவுடன், கல்வி, மருத்துவத்துக்கும் அதிகம் செலவழிக்க வேண்டிய சூழல் உள்ளதால் அரசு சலுகைகள் கொடுத்தபோதும் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என சீன அரசு எடுத்த ஆய்வின்போது 70 %-க்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவிலும்கூட ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது 4 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்ததைப் பார்த்திருக்கிறோம். அதன் பின்னர், தனியார் பள்ளிகளும், கார்ப்பரேட் மருத்துவமனைகளும் புற்றீசல்போல உருவானதால், அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வது தவிர்க்கப்பட்டது.

இந்தியாவின் மக்கள்தொகை இந்த ஆண்டே சீனாவை விஞ்சிவிடும் என்று ஐ.நா. சபை கணித்துள்ளது. எனவே, சீனாவின் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள எதிர்விளைவுகளைக் கவனத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் திட்டமிட வேண்டும். 

நமது நாட்டிலும் குழந்தை பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்தியாவின் மக்கள்தொகையில் உழைக்கும் வயதினர் 68% பேர் உள்ளதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், உழைக்கத் தகுதி உள்ளவர்களில் 46 % பேர் மட்டுமே வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதுவே, இந்தோனேசியாவில் 68%-ஆகவும், வியத்நாமில் 74%-ஆகவும் உள்ளது.

சீன அரசு எதிர்கொள்வதைப் போலவே, சிக்கிம், கோவா, ஜம்மு - காஷ்மீர், கேரளம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்கெனவே முதியவர்களின் விகிதாசாரம் அதிகமாக இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. எனவே, குழந்தைப் பிறப்பு விகிதத்தை சமநிலையில் வைப்பதுடன், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதே புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும்.

உலகம் முழுவதுமே 'சிறிய குடும்பம், சிறப்பான குடும்பம்' என்ற ஒரு கருத்தாக்கம் எப்படியோ பொதுமக்கள் மனதில் குடிகொண்டுவிட்டது. அதனால்தான், ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலும் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க  மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

மக்கள்தொகை விகிதத்தைக் கட்டுப்படுத்த ஒருமுறை கடும் நடவடிக்கைகளை எடுத்துவிட்டால் அதை பழைய நிலைக்குத் திருப்புவது என்பது சாத்தியமில்லை என்பதை சீனாவின் சமீபத்திய அறிவிப்புகள் உணர்த்துகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT