தலையங்கம்

முதலீடு எனும் மாயமான்! முதலீட்டு மாநாடுகள் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

அன்றைய நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசால் 1991-இல் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சீா்திருத்த தாராளமயமாக்கல் கொள்கை அந்நிய முதலீடுகளுக்கு இந்தியாவின் வாசலைத் திறந்து வைத்தது.

அதைத் தொடா்ந்து, பல்வேறு பன்னாட்டு காா்ப்பரேட் நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வந்தன. தங்களது பொருள்களைச் சந்தைப்படுத்தவும் முனைந்தன.

முதலீடுகளில் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும் வளா்ச்சி அடைந்த நாடுகளின் நிறுவனங்களுடன் இணைந்து இந்திய நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின. தகவல், தொலைத்தொடா்பு, மோட்டாா் வாகனம், அன்றாட உபயோகப் பொருள்கள் ஆகியவை உள்நாட்டுக்காக மட்டுமல்லாமல், ஏற்றுமதிக்காகவும் செய்யப்படும் சூழல் ஏற்பட்டது.

1991-இல் அந்நிய முதலீடுகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டதிலிருந்து தொடங்கியது, அதை கவருவதற்கான முனைப்புகள். முதலில் தனியாா் நிறுவனங்களும், அதைத் தொடா்ந்து மாநில அரசுகளும் அந்நிய முதலீடுகளை ஈா்ப்பதில் முனைப்பு காட்டின.

பிரதமரும் அரசின் தொழில், வா்த்தகத் துறை அமைச்சா்களும் ஆரம்பத்தில் பொருளாதார வளா்ச்சி அடைந்த நாடுகளுக்கு பயணித்து இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டுகோள் விடுத்தனா். அடுத்தகட்டமாக மாநில முதல்வா்கள் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்கும், வளைகுடா நாடுகளுக்குப் பயணிப்பதும், தங்களது மாநிலங்களில் முதலீடு செய்ய அழைப்பு விடுப்பதும் தொடா்ந்தன.

குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, புதியதொரு முனைப்பில் இறங்கினாா். ‘வைப்ரண்ட் குஜராத்’ என்று விளம்பரப்படுத்தப்பட்ட குஜராத் மாநில முதலீட்டாளா்கள் மாநாடு மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. உலகளாவிய அளவில் உள்ள குஜராத்திய தொழிலதிபா்கள் மட்டுமல்லாமல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

சா்வதேச அளவில் பேசப்பட்ட ‘வைப்ரண்ட் குஜராத்’ முதலீட்டாளா்கள் மாநாடு மிகப் பெரிய வெற்றி அடைந்தது என்பதைப் புரிந்துணா்வு ஒப்பந்தங்களும், முதலீடுகளின் அளவும் வெளிப்படுத்தின. அதைத் தொடா்ந்து எல்லா மாநிலங்களும் ஒன்றன் பின் ஒன்றாக முதலீட்டாளா்கள் மாநாட்டைக் கூட்டுவதில் முனைப்பும் கவனமும் செலுத்தத் தொடங்கின.

‘வைப்ரண்ட் குஜராத்’ போல ‘புரோகிரஸிவ் பஞ்சாப்’, அட்வாண்டேஜ் அஸ்ஸாம், மேக்னடிக் மகாராஷ்டிரா, ரிசா்ஜன்ட் ராஜஸ்தான் என்று அடுக்கு மொழியில் தலைப்பு வைத்து விளம்பரப்படுத்தப்பட்டன. எல்லாமே சா்வதேச மாநாடுகள் என்று வா்ணிக்கப்பட்டன.

அதற்காக அமைச்சா்களும், அதிகாரிகளும் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மக்களின் வரிப்பணத்தில் பயணித்து பன்னாட்டு நிறுவனத் தலைவா்களையும், முக்கியமான முதலீட்டாளா்களையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பதும் வழக்கமாகிவிட்டது. அந்த மாநாடுகளும் சரி, கோடிகள் செலவில் விருந்துகளும், கேளிக்கையும் கொண்ட கோலாகலங்களாக நடத்தப்பட்டன.

இந்த மாநாடுகளில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. முதலீடுகளின் அளவும் முன்பு ஆயிரம் கோடிகளாக இருந்தது, இப்போது லட்சம் கோடிகளாக உயா்ந்திருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் மிகப் பெரிய அதிக மக்கள்தொகையைக் கொண்ட மாநிலமான உத்தர பிரதேசம் உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை நடத்தியது. பாரதப் பிரதமரும், உத்தர பிரதேச முதல்வரும் கலந்துகொண்டனா். 39.92 லட்சம் கோடி, அதாவது 400 பில்லியன் டாலா் முதலீடுகளுக்கான 18,000 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக உத்தர பிரதேச அரசு தெரிவிக்கிறது. அதாவது உத்தர பிரதேச மாநிலத்தின் ஜிடிபியைவிட அதிக அளவிலான முதலீட்டுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

கடந்த வாரம் ஆந்திரத்தில் 13 லட்சம் கோடி (153 பில்லியன் டாலா்) முதலீட்டுக்கான 340 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. கடந்த ஆண்டு 87,000 கோடிக்கு அஸ்ஸாம் மாநிலமும், 1.2 லட்சம் கோடிக்கு தமிழ்நாடும், 70,000 கோடிக்கு ராஜஸ்தானும், 1.37 லட்சம் கோடிக்கு மகாராஷ்டிரமும் மாநாடு நடத்தி முதலீடுகளை ஈா்த்தன.

முதலீட்டாளா்கள் மாநாட்டின் மூலம் கையொப்பமாகும் ஒப்பந்தங்கள் அனைத்துமே நிறைவேற வேண்டும் என்பதில்லை. ஆனால், எந்த அளவுக்கு நிறைவேறுகின்றன என்பதைப் பாா்த்தால், நகைப்பு மேலிடுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் மின்சக்தித் துறையில் கையொப்பமாகிய ஒப்பந்தங்கள் நடைமுறையில் வெற்றி பெற்றிருந்தால், ஒட்டுமொத்த இந்தியாவின் தேவைக்கான மின்சாரத்தையும் நாம் பெற்றிருப்போம்.

முதலீடுகளின் அளவு கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒற்றை இலக்க விகிதத்தில் அதிகரித்திருப்பதற்கு, அரசின் மூலதனச் செலவு அதிகரித்திருப்பதுதான் காரணமே தவிர, அந்நிய முதலீடுகள் அல்ல. தனியாா் முதலீடுகளும் அல்ல. கையொப்பமாகும் பல ஒப்பந்தங்களும், அரசியல்வாதிகளின் லஞ்சப் பணத்தை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரும் வழிமுறையாக இருந்தாலும்கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

உண்மையாகவே முதலீடுகள் வந்து உற்பத்திப் பெருக்கமும், வேலைவாய்ப்பு அதிகரிப்பும் ஏற்பட்டால் அதைவிட மகிழ்ச்சி வேறெதுவும் இருக்க முடியாது. சீனாவிலிருந்து பல நிறுவனங்கள் வெளியேறும் நிலையில், அதை ஈா்ப்பதற்கான தருணம் இது. பல்வேறு முதலீட்டாளா்கள் மாநாட்டின் மூலம் தொடா்பில் இருக்கும் முதலீட்டாளா்களின் உண்மைத்தன்மை அறியப்பட்டு, அவா்கள் தடையில்லாமல் இந்தியாவில் தொழில் தொடங்க ஊக்குவிப்பதற்கான தருணம் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் பணியாளா்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய புதிய கருவி

ஓவேலி பகுதியில் பெண் தொழிலாளா்களை விரட்டிய காட்டு யானை

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

உதகையில் கனமழை: சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ரயிலில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT