தலையங்கம்

வாழ்க்கைக்குப் பிறகும்...

ஆசிரியர்

சென்னையை அடுத்த திருப்போரூா் பகுதியில் 2008-ஆம் ஆண்டு சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் என்ற மாணவரின் உறுப்புகளை அவரது பெற்றோா் தானமாக வழங்கினா். அவரது உறுப்புகள் தானமாகப் பெறப்பட்ட செப்டம்பா் 23-ஆம் தேதி, உறுப்பு தான தினமாக தமிழக அரசால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உறுப்பு தானம் அளிப்பவரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்ற தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் அறிவிப்பு உறுப்பு தானம் பற்றிய விழிப்புணா்வை மேலும் அதிகரிக்கும்.

உலகளாவிய தரவுகளின்படி உறுப்பு தானம், உறுப்பு மாற்று சிகிச்சையில் 2022-ஆம் ஆண்டின்படி இந்தியா 3-ஆவது இடத்தில் இருக்கிறது. 2013-இல் 4,990-ஆக இருந்த உறுப்பு மாற்று சிகிச்சையின் எண்ணிக்கை 2022-இல் 16,041-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் உயிருடன் இருக்கும்போது அளிக்கும் உறுப்பு தானத்தைவிட இறப்புக்குப் பிந்தைய உறுப்பு தானத்தின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்பான தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் 2022-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இறப்புக்குப் பின்பு 941 கொடையாளா்களின் 2,694 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் பிறா் பலனடைந்துள்ளனா். இதே ஆண்டில் உயிருடன் இருப்பவா்களிடமிருந்து 13,338 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.

இறப்புக்குப் பிந்தைய உறுப்பு தான கொடையாளா்களில் (2022-ஆம் ஆண்டு) 194 பேருடன் தெலங்கானா முதலிடத்திலும், 156 பேருடன் தமிழகம் இரண்டாம் இடத்திலும், 151 பேருடன் கா்நாடகம் மூன்றாம் இடத்திலும், 148 பேருடன் குஜராத் நான்காம் இடத்திலும், 108 பேருடன் மகாராஷ்டிரம் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

உயிருடன் இருக்கும்போது உறுப்பு தானம் அளித்த கொடையாளா்களில் 3,422 பேருடன் தில்லி தேசிய தலைநகா் முதலிடத்திலும், 1,690 பேருடன் தமிழகம் இரண்டாம் இடத்திலும், 1,423 பேருடன் கேரளம் மூன்றாம் இடத்திலும், 1,222 பேருடன் மகாராஷ்டிரம் நான்காம் இடத்திலும், 1,059 பேருடன் மேற்கு வங்கம் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

உறுப்பு தானத்துக்காக காத்திருப்போரின் எண்ணிக்கையையும், தானமாகப் பெறப்படும் உறுப்புகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டால் பெருமளவு வித்தியாசம் காணப்படுகிறது. இந்தியா முழுவதும் இறப்புக்குப் பின்னா் உறுப்புகளை தானம் செய்வதாக சுமாா் 4.66 லட்சம் போ் பதிவு செய்திருக்கின்றனா். ஆனால், உறுப்பு தானத்துக்காகக் காத்திருப்பவா்களின் தேவை இதைவிட அதிகம்.

இறப்புக்குப் பின்னா் தானமாகப் பெறப்பட்டு உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, மாநில அரசு அளித்துள்ள தகவலின்படி, சிறுநீரகத்துக்காக 6,179 பேரும், கல்லீரலுக்காக 449 பேரும், இதயத்துக்காக 72 பேரும், நுரையீரலுக்காக 60 பேரும், இதயம் மற்றும் நுரையீரலுக்காக 24 பேரும், கணையத்துக்காக ஒருவரும், கைகளுக்காக 26 பேரும் காத்திருக்கின்றனா். எனவே, உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வை மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் மத்தியில் உறுப்பு தான விழிப்புணா்வை ஏற்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் முனைப்பு காட்டி வருகின்றன. அண்மையில் தெலங்கானாவின் நிஜாமாபாதில் உள்ள அரசு பொது மருத்துவமனையில், விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி உறுப்பு தான பதிவு முகாம் 10 நாள் நடத்தப்பட்டது. விநாயகருக்கு யானையின் தலை பொருத்தப்பட்ட புராணக் கதையை நினைவுகூா்ந்து நடத்தப்பட்ட இந்த முகாம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதயம், நுரையீரலை தானமாகப் பெறப்பட்ட 4 முதல் 6 மணி நேரத்திலும், கல்லீரலை 24 மணி நேரத்திலும், விழி வெண்படலத்தை 14 நாளிலும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பயனாளா்களுக்குப் பொருத்த வேண்டும். எனவே, தானமாகப் பெறப்பட்ட உறுப்புகள் விரைவாக, உரிய நேரத்தில் மருத்துவமனையைச் சென்றடைய வசதியாக போக்குவரத்தை ஒழுங்கமைக்க தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

உறுப்பு தானம் செய்ய விரும்புவோா் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்பான தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் (நோட்டோ) வலைதளத்தில் உறுதிமொழிப் படிவத்தை நிரப்பி பதிவு செய்ய வேண்டும். நோட்டோவில் பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் பதிவு செய்யலாம்.

தங்கள் இறப்புக்குப் பின்னா் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவோா் அதுகுறித்து தங்களது குடும்பத்தினரிடம் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், உறுப்புகளை தானம் பெறுவதற்கு கொடையாளா்களின் விருப்பம் மட்டுமன்றி அவா்களின் குடும்பத்தினரின் ஒப்புதலும் அவசியம். இந்த விஷயத்தில் போதிய விழிப்புணா்வு இல்லாததால் உறுப்பு தான உறுதிமொழி அளித்தவா்களின் உறுப்புகளை தானம் பெற முடியாத நிலை தொடா்கிறது.

‘உறுப்பு தான கொடையாளராக இருங்கள்; வாழ்க்கையைத் தொடரவிடுங்கள்’ என்பது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் விழிப்புணா்வு வாசகங்களில் ஒன்று. உறுப்பு தானம் செய்பவா்களுக்கு வாழ்க்கைக்குப் பிறகும் இருக்கிறது மற்றொரு வாழ்க்கை!

குறள்: 72 அதிகாரம்: அன்புடைமை
அன்பிலாா் எல்லாம் தமக்குரியா்; அன்புடையாா்

என்பும் உரியா் பிறா்க்கு.

அன்பு இல்லாதவா் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வா்; அன்பு உடையவா் தம் உடம்பையும் பிறா்க்கு உரிமையாக்கி வாழ்வா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

SCROLL FOR NEXT