முகப்பு
இந்தியா

பாதுகாப்பு அமைச்சக நிலத்தை கிரிக்கெட் சங்கத்துக்கு அளித்த முறைகேடு அம்பலம்

பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 15.30 ஏக்கர் நிலத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாமல் முறைகேடாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு அளித்துள்ள விவகாரம் அம்பலமாகியிருக்கிறது.

Updated On : 13 மே 2013, 3:19 am IST
பகிர்:

பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 15.30 ஏக்கர் நிலத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாமல் முறைகேடாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு அளித்துள்ள விவகாரம் அம்பலமாகியிருக்கிறது.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்திருப்பது:

ஆந்திர மாநிலம் செகந்தராபாதில் அமைந்துள்ள 5.71 ஏக்கர் பாதுகாப்பு அமைச்சக நிலப்பரப்பை, ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு 60 ஆண்டு கால குத்தகைக்கு விட அமைச்சகம் 1992-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி முடிவு செய்தது.

Advertisement

Advertisement

 பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் சிலரின் ஒத்துழைப்புடன், அமைச்சகத்துக்கு சொந்தமான இந்த நிலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் போன்ற நடைமுறைகளை பின்பற்றாமல் வழங்கப்பட்டது.

 மேலும் 9.59 ஏக்கர் நிலமும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு மாற்றப்பட்டது. ஐந்து ஆண்டு காலத்துக்கு இது குத்தகைக்கு விடப்படுவதாக ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த நில பேரத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படவில்லை.

இந்த நிலத்தில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் விளையாட்டு அரங்கம், பயிற்சிப் பள்ளி மற்றும் கேளிக்கை சங்கம் ஆகியவற்றை அமைக்க திட்டமிட்டது.

ஆனால் பிரதமர் அலுவலகம், 1996 பிப்ரவரி 23-ஆம் தேதி அளித்த உத்தரவின் அடிப்படையில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு நிலத்தை வழங்கும் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

ஆனாலும், பாதுகாப்பு அமைச்சகம் இந்த நிலத்தை திரும்ப தனது கைவசம் எடுத்துக் கொள்ளவில்லை. இடைப்பட்ட காலத்துக்கு செலுத்தப்பட வேண்டிய வாடகையை வசூல் செய்யாமல் அந்த நிலத்தை மீண்டும் எடுத்துக் கொள்ள பாதுகாப்புத் துறைச் செயலர் சம்மதிக்கவில்லை.

இந்த நிலத்தின் இப்போதைய மதிப்பு ரூ. 120 கோடியாகும். ஆனால், ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் இதற்காக ரூ. 1.88 கோடியை குத்தகை தொகையாகவும் ஆண்டு வாடகையாக ரூ. 13 லட்சம் மட்டுமே அளிக்க ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில், ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் ஒரு மாதத்துக்குள் நிலத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை கடிதம் எழுதியிருக்கிறது.

மேலும், பாதுகாப்பு அமைச்சக நில நிர்வாக கூடுதல் தலைமை இயக்குநருக்கு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தனியாருக்கு அரசு நிலத்தை முறைகேடாக அளித்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தோனி அதில் குறிப்பிட்டிருப்பதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.