இந்தியா

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: ஊடுருவல் முயற்சியை முறியடித்தது ராணுவம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி வழியாக புதன், வியாழன் ஆகிய 2 தினங்களில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 7 பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி வழியாக புதன், வியாழன் ஆகிய 2 தினங்களில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 7 பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
இதுகுறித்து ராணுவ உயரதிகாரி ஒருவர், ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
குப்வாரா மாவட்டம், நௌகாம் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி வழியாக பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் 3 பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நுழைய முயன்றனர்.
இதைக் கண்ட ராணுவ வீரர்கள் அவர்களை தொடர்ந்து முன்னேற வேண்டாம் என்று எச்சரித்தனர். எனினும், பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபடியே தொடர்ந்து முன்னேறினர். இதையடுத்து, ராணுவ வீரர்கள் உரிய பதிலடி கொடுத்தனர். இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின் முடிவில் 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்தச் சண்டையின்போது குண்டு பாய்ந்து ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
பயங்கரவாதிகளின் சடலங்களுக்கு அருகே அவர்கள் கொண்டுவந்திருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், வெடிபொருள்களும் இருந்தன. அவற்றை ராணுவ வீரர்கள் கைப்பற்றினர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
முன்னதாக, குப்வாரா மாவட்டத்தில் உள்ள மற்றொரு எல்லைப் பகுதி வழியாக புதன்கிழமை ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
கடந்த மாதம் 26-ஆம் தேதி, காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் சர்வதேச எல்லை வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் எல்லை நடவடிக்கைக் குழுவை (பிஏடி) சேர்ந்த 2 பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். அதற்கு அடுத்த 2 தினங்களில் அதே பகுதி வழியாக ஊடுருவ முயன்ற 6 பயங்கரவாதிகளையும் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இதன்மூலம், கடந்த 2 வாரங்களாக மிகப் பெரிய ஊடுருவல் முயற்சிகளை ராணுவத்தினர் முறியடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, காஷ்மீரில் நிகழாண்டில் மட்டும் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற 38 பயங்கரவாதிகள் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று ராணுவம் தெரிவித்தது.
இதுகுறித்து ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "நிகழாண்டில் இதுவரை மட்டும் 22 ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 88-ஆகவும், 2015-இல் 28-ஆகவும் இருந்தது' என்றார்.
கடந்த ஆண்டிலிருந்து இதுவரை பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது மொத்தம் 59 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT