பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவைப் பாதுகாப்பாக விடுதலை செய்வதற்கு இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கடற்படைத் தளபதி சுனில் லான்பா தெரிவித்தார்.
பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ஜாதவ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தங்கள் நாட்டில் உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டதாகவும், நாச காரியங்களை நிகழ்த்த சதித்திட்டம் தீட்டியதாகவும் அவர் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் கடந்த 10-ஆம் தேதி மரண தண்டனை விதித்தது.
எனினும், ஜாதவ் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்த இந்தியா, அவர் ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டதாக குற்றம்சாட்டியது. அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மேல் முறையீடு செய்துள்ளது. அதை ஏற்ற சர்வதேச நீதிமன்றம், ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கடற்படைத் தளபதி சுனில் லான்பா, "ஜாதவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அனைத்துவித ஆதரவையும் வழங்குவோம். அவரை பத்திரமாக விடுவிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து வருகிறது' என்றார்.
பாகிஸ்தான் வலியுறுத்தல்: இதனிடையே, குல்பூஷண் ஜாதவ் சார்பாக இந்தியா தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை விரைவாக நடத்தி முடிக்குமாறு சர்வதேச நீதிமன்றத்தை பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.