திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் லஞ்சம் பெற்றது போன்ற விடியோக்கள் வெளியான வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அக்கட்சியின் எம்.எல்.ஏ. இக்பால் அகமதுக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தில் பெரு நிறுவன அதிபர்களிடம் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் லஞ்சம் வாங்குவது போன்ற விடியோவை நாரதா தொலைக்காட்சி கடந்த ஆண்டு வெளியிட்டது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த விடியோ வெளியானதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், இந்த விடியோ காட்சிகள் ஜோடிக்கப்பட்டவை என்று திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறியக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை கடந்த மார்ச் மாதம் விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக முதல்கட்ட விசாரணையை நடத்துமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வரும் 10-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்எல்ஏ-வுமான இக்பால் அகமதுக்கு சிபிஐ வியாழக்கிழமை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.