இந்தியா

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: ம.பி. முதல்வர் சௌஹான்

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், எனவே, அமைதி திரும்ப அவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.

DIN

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், எனவே, அமைதி திரும்ப அவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.
விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து வழங்கவும், விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யக் கோரியும் மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் கடந்த 1-ஆம் தேதி முதல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மந்த்சௌரில் கடந்த செவ்வாய்க்கிழமை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது நேரிட்ட வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக சௌஹான் தெரிவித்துள்ளார்.
அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே வேறுபாடுகளைக் களைய முடியும். விவசாயிகள் அமைதி காக்க வேண்டும். உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. விவசாயிகளின் நலனுக்காக எனது தலைமையிலான அரசு தொடர்ந்து பாடுபடும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் பலி-அமைச்சர் ஒப்புதல்: இதற்கிடையே, மந்த்சௌரில் கடந்த செவ்வாய்க்கிழமை நேரிட்ட வன்முறையில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்தான் 5 விவசாயிகளும் உயிரிழந்தனர் என்று மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங் தெரிவித்தார். இந்தத் தகவலை பிடிஐ செய்தியாளரிடம் அவர் தொலைபேசி வழியாக வியாழக்கிழமை தெரிவித்தார். போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று அரசு அதிகாரிகள் கூறிவந்த நிலையில், இவரது கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம்: மந்த்சௌர் மாவட்ட ஆட்சியர் எஸ்.கே.சிங், அந்த மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் ஓ.பி.திரிபாதி ஆகியோரை மத்தியப் பிரதேச அரசு வியாழக்கிழமை பணியிடமாற்றம் செய்தது. எஸ்.கே.சிங்குக்குப் பதிலாக அந்த மாவட்டத்துக்கு ஓ.பி.ஸ்ரீவஸ்தவா என்பவர் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், ஓ.பி.திரிபாதிக்குப் பதிலாக அந்தப் பதவிக்கு மனோஜ் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிரடிப் படை வீரர்கள் குவிப்பு: இந்நிலையில், மந்த்சௌர் மாவட்டத்துக்கு மத்திய அரசு அனுப்பிவைத்த அதிரடிப் படை வீரர்கள் 1,100 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், காவல் துறை உயரதிகாரிகளும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தடுப்புக் காவலில் 62 பேர்: இந்நிலையில், மந்த்சௌர் மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக 62 பேரை போலீஸார் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். இதுதொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆட்சியர் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், "சவாலான சூழ்நிலையில் பொறுப்பேற்றிருக்கிறேன். இந்தச் சூழலை புரிந்துகொண்டு தேவையான நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.
"இயல்புநிலை திரும்புகிறது': மந்த்சௌர் நகரில் இயல்பு நிலை திரும்புவதாக அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மாண்ட்ஸரில் துண்டிக்கப்பட்டிருந்த இணையச் சேவை மீண்டும் அளிக்கப்பட உள்ளது. வன்முறைகள் எதுவும் நடைபெறவில்லை. இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது' என்றார்.
ஊரடங்கு உத்தரவு தளர்வு: இதற்கிடையே, மந்த்சௌரில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு வியாழக்கிழமை மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை தளர்த்திக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எய்ம்ஸ் வராது; மெட்ரோ தராது - இது பாஜக அரசியல் - மு.க. ஸ்டாலின் விமர்சனம்

ரோஹித், கோலியின் அனுபவம் மிகவும் முக்கியம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT