ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் உத்தரப் பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அந்த மாநில காவல் துறை அமைத்துள்ளது.
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் உணவுப் பொருள் விநியோகத் துறை ஆணையராக இருந்தவர் அனுராக் திவாரி (36). உத்தரகண்ட் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பயிலரங்கில் கலந்துகொண்ட அவர், தனது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்துக்கு கடந்த திங்கள்கிழமை சென்றார். அங்கு லக்னௌவில் உள்ள ஓர் அரசு விடுதியில் தனது நண்பருடன் அவர் தங்கியிருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், அனுராக் திவாரி ஹஜ்ரத்கஞ்ச் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு கடந்த புதன்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற போலீஸார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திவாரியின் உடலில் காயங்கள் இருப்பதால் சாலை விபத்திலோ அல்லது ஏதேனும் தாக்குதலுக்கு ஆளாகியோ அவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த விவகாரம் உத்தரப் பிரதேச சட்டப் பேரவையிலும் எதிரொலித்தது.
இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி மர்ம மரணம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அந்த மாநில காவல் துறை அமைத்துள்ளது. இதுதொடர்பாக விசாரித்து 72 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.