நாடு முழுவதும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எல்இடி விளக்குகள், குழல் விளக்குகள் (டியூப் லைட்டுகள்), மின் விசிறிகள் ஆகியவை விரைவில் விற்பனை செய்யப்பட உள்ளன.
இதுதொடர்பாக, மத்திய அரசு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறியதாவது:
பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இனி எல்இடி விளக்குகள், டியூப் லைட்டுகள், மின் விசிறிகள் ஆகியவை விற்பனைக்கு கிடைக்கும்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மேற்கண்ட பொருள்களை மத்திய அரசின் எரிசக்தி திறன் சேவை நிறுவனம் மூலம் கொள்முதல் செய்து தங்களது பெட்ரோல் நிலையங்களில் விற்பனை செய்ய உள்ளன.
மேற்கண்ட பொருள்கள் வெளிச்சந்தையில் கிடைப்பதை விட, குறைந்த விலையில் இங்கு கிடைக்கும். இதன்படி எல்இடி விளக்கு ஒன்று ரூ. 65-க்கும், டியூப் லைட்டு செட் ரூ. 230-க்கும், மின் விசிறி (சீலிங் ஃபேன்) ரூ. 1,150-க்கும் கிடைக்கும்.
இந்த 3 எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் நாடு முழுவதும் 53,000 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன.
எனினும், அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் மேற்கண்ட பொருள்களை விற்பனை செய்வதா? அல்லது குறிப்பிட்ட நிலையங்களில் மட்டும் விற்பனை செய்வதா? என்பது குறித்து இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை.
இந்த விற்பனை தொடர்பாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும், எரிசக்தி திறன் சேவை நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தாக இருந்தது.
எனினும், மத்திய அமைச்சர் அனில் தவேயின் திடீர் மறைவை அடுத்து மேற்படி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் புதிய தேதி விரைவில் முடிவு செய்யப்படும். அதையடுத்து ஒரு மாத காலத்துக்குள் எல்இடி விளக்குகள், குழல் விளக்குகள், மின் விசிறிகள் ஆகியவை பெட்ரோல் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் என்றார் அந்த அதிகாரி.
நாட்டில் எரிசக்திப் பயன்பாட்டை குறைக்கும் வகையில் எல்இடி விளக்குகளின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.