மருத்துவர்கள் மீதான தாக்குதல்களை ஏற்க முடியாது என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரணாப் முகர்ஜி, கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய கல்லீரல் மற்றும் செரிமான அறிவியல் நிறுவனத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:
இந்தியாவில் ஆண்டுதோறும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கல்லீரல் நோய் பாதிப்புகளால் உயிரிழக்கின்றனர்.
கல்லீரல் மற்றும் செரிமான நோய்களுக்காக கிழக்கு இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள முதல் மருத்துவமனை இதுவாகும்.
கொல்கத்தாவில் அதிக அளவு கட்டணம் வசூலித்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவத் துறையில் தற்போது சேவை மனப்பான்மை என்பது பின்னோக்கிச் செல்கிறது.
புன்னகை ததும்பும் முகம், ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றும் என்பதை மருத்துவர்கள் உணர்ந்து நடக்க வேண்டும்.
நோயாளி உயிரிழக்கும்பட்சத்தில், நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்களைத் தாக்குவது, மருத்துவமனைகளை அடித்து நொறுக்குவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
மருத்துவர்கள் மீதான தாக்குதல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. நோயாளிகளுக்கு மட்டுமல்லாது நோயாளிகளின் உறவினர்களுக்கும் பொறுப்புணர்வு உள்ளது என்றார் பிரணாப் முகர்ஜி.
அண்மையில், மகாராஷ்டிரத்தில் மருத்துவர்கள் மீது நோயாளிகளின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.