முஸ்லிம் மதத்தினரின் 'முத்தலாக்' விவாகரத்து முறைக்கு எதிரான பல்வேறு மனுக்களை 6 நாள்களாக விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம், அந்த வழக்கின் விசாரணையை வியாழக்கிழமை முடித்துக் கொண்டு தீர்ப்பை ஒத்திவைத்தது.
முத்தலாக், நிக்கா ஹலாலா, பலதார மணம் ஆகியவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் 7 மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இதில் முஸ்லிம் மத பெண் ஒருவர் தொடுத்துள்ள 5 ரிட் மனுக்களும் அடங்கும்.
இந்த மனுக்களை கடந்த மார்ச் மாதம் 30-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், முத்தலாக், நிக்கா ஹலாலா, பலதார மணம் ஆகிய வழக்கங்களை மிகவும் முக்கியமான பிரச்னைகள் என்றும், இதுகுறித்த மனுக்களை அரசியல் சாசன அமர்வு இந்த மாதம் விசாரிக்கும் என்றும் அறிவித்திருந்தது.
அதன்படி, முத்தலாக் முறை அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டதா என்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப். நாரிமன், யு.யு. லலித், அப்துல் நஸீர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த 11-ஆம் தேதி முதல் விசாரணை நடத்தி வந்தது.
இந்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருக்கும் 5 நீதிபதிகளும், சீக்கிய, கிறிஸ்தவ, பார்ஸி, ஹிந்து, முஸ்லிம் மதங்களைச் சேர்ந்தவர்கள்.
அந்த விசாரணையின்போது, முஸ்லிம்களின் பலதார மணம், ஒரு முறை விவாகரத்து செய்யப்பட்ட பெண், மற்றொருவருக்கு மனைவியாகி, குடும்பம் நடத்தி விவாகரத்து செய்த பிறகே அவரை மீண்டும் மணக்க முடியும் என்ற 'நிக்கா ஹலாலா' முறை ஆகியவை குறித்து விசாரிக்கப்படாது என்று நீதிபதிகள் கூறினர்.
முத்தலாக் முறை இஸ்லாம் மதத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றா என்பது குறித்து ஆராயப்படும் எனவும், முத்தலாக் விவாகரத்து முறையில் பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசு, அகில இந்திய முஸ்லிம்கள் தனிநபர் வாரியம், அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டன.
அப்போது அகில இந்திய முஸ்லிம் தனிநபர் வாரியம் சார்பில் ஆஜராகிய முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான சல்மான் குர்ஷித், முத்தலாக் முறை குறித்து குரானில் கூறப்படவில்லை எனவும், இருந்த போதிலும் அது பாவச் செயல் எனவும் தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில், அது மத நம்பிக்கை தொடர்பான விவகாரம் என்பதால் இதில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது எனவும் குர்ஷித் கூறியிருந்தார்.
இதுகுறித்து நீதிபதிகள் அமர்வு வியாழக்கிழமை கூறுகையில், ''ஒரு செயல் பாவம் நிறைந்ததாக இருக்கும்போது அது எப்படி உச்ச நீதிமன்றம் தலையிட முடியாத ஒரு மத நம்பிக்கையாக இருக்க முடியும்'' என்று கேள்வியெழுப்பினர்.
மேலும், தலாக் நடைமுறை ஆணாதிக்கச் செயல் எனவும் அவர்கள் கூறினர்.
அதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை முடிவடைந்ததாகவும், வழக்கின் தீர்ப்பை காலவரையின்றி ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.