நாட்டின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கடந்த மூன்றாண்டு கால மத்திய பாஜக ஆட்சிக் காலத்தில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன என்பது தொடர்பான விவரங்களை பகிரங்கமாகத் தெரிவிக்க தயாரா? என்றும் அக்கட்சி சவால் விடுத்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ஆனந்த் சர்மா, தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
பாஜக அரசு மத்தியில் ஆட்சியமைத்து மூன்றாண்டுகள் நிறைவடைகிறது. இந்தச் சூழலில் பல்வேறு சாதனைக் கொண்டாட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டு வருகிறது. அவை அனைத்துமே மூன்று ஆண்டு கால ஆட்சியின் செயல்பாடுகளை விளக்குவதாக இல்லாமல் மோடி உற்சவம் போன்று விளம்பரப்படுத்தப்படுகின்றன.
தனி மனித துதி பாடுவதற்காக அரசு நிதியில் இருந்து இதற்காக ரூ.1,500 கோடி செலவிடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எதுவும் இல்லை. தேசத்தின் பொருளாதார நிலை சுணக்கமடைந்துள்ளது. வளர்ச்சி விகிதம் உயரவில்லை. தொழில் முதலீடுகளைப் பொருத்தவரை, முந்தைய காலத்தைவிட குறைந்து வருகிறது. வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி விகிதமும் மெச்சத்தக்க வகையில் இல்லை.
இந்தச் சூழலில், நாட்டின் பொருளாதார நிலை என்ன என்பதை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தின் அடிப்படையில் அந்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக பிரதமர் மோடி வெளியிட வேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலின்போது ஆண்டுதோறும் 2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டு 1.5 லட்சம் வேலைவாய்ப்புகளை மட்டுமே மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
மூன்று ஆண்டுகளில் எவர் எவருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கினோம் என்பது தொடர்பான விவரங்களை மக்கள் மன்றத்தில் பகிரங்கமாகத் தெரிவிக்க மத்திய அரசு தயாரா? என்று ஆனந்த் சர்மா கேள்வி எழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.