பொதுமக்களின் குறைகளைக் கேட்கும் வகையில் தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று தில்லி அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.
தில்லி ரஜௌரி கார்டன் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலிலும், அண்மையில் நடைபெற்ற தில்லி மாநகராட்சித் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து, மக்களுக்கும், அரசு நிர்வாகத்திற்கும் இடையே இடைவெளியைக் குறைக்கும் நடவடிக்கையில் தில்லி அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தினமும் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்க அதிகாரிகளுக்கு தில்லி முதல்வர் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த சில தினங்களாக தலைநகரின் சில இடங்களுக்குச் சென்று பார்வையிட்டோம். அப்போது, அரசுக்கும், மக்களுக்கும் இடையே தொடர்பு இடைவெளி துண்டிக்கப்பட்டு விட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, தினமும் அரசு அதிகாரிகள் தங்களது அலுவலகங்களில் காலை 10 மணி முதல் 11 மணி வரை எந்தவித முன் அனுமதி இன்றியும் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்குமாறு முதல்வர் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு தில்லி அரசின் தலைமைச் செயலர் எம்.எம். குட்டிக்கு அவர் குறிப்பும் அனுப்பியுள்ளார்.
இதன்படி, மருத்துவர்கள், ஆசிரியர்கள் போன்ற களப் பணியாற்றும் ஊழியர்கள் தவிர பிற அதிகாரிகள் வார வேலை நாள்களான திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை பொதுமக்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்க வேண்டும். மேலும், அக்குறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணமும் பராமரிக்கப்பட வேண்டும்.
மருத்துவ விடுப்பு உள்ளிட்ட காரணங்கள் இருந்தால் மட்டுமே பொதுமக்களை அதிகாரிகள் சந்திப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். எனினும், அவசர காரணங்கள் இருக்கும்பட்சத்தில் அது தொடர்பாக தங்களது உயர் அதிகாரிகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தத் தகவல்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் அலுவலகங்களுக்குத் தெரிவிக்கப்படும். மேலும், பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் தொலைபேசி எண்களும் அளிக்கப்படும்.
இந்தப் புதிய நடைமுறை ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து இருந்து நடைமுறைக்கு வரும். தில்லி அமைச்சர்களும் இதேபோன்று தங்களது அலுவலகங்களில் பொதுமக்களை காலை 11 மணி முதல் 12 மணி வரை சந்தித்து குறைகளைக் கேட்க உள்ளனர் என்றார் மணீஷ் சிசோடியா.
ஏற்கெனவே முந்தைய ஆம் ஆத்மி அரசின் போது தினமும் பிற்கல் 12 மணி முதல் 1 மணி வரையிலும் அதிகாரிகளை பொதுமக்கள் சந்திக்கும் நடைமுறை செயல்படுவதற்காக எடுக்கப்பட்ட முடிவு குறித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மணீஷ் சிசோடியா, "தற்போதைய புதிய முடிவை அரசு திறம்பட செயல்படுத்தும். இந்த நடைமுறை காரணமாக அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என அரசு கருதவில்லை' என்றார்.
தில்லி அரசின் மூத்த அதிகாரி கூறுகையில், "தேவைப்படும்பட்சத்தில் இதுபோன்ற சந்திப்புகளுக்கான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தும் முன்மொழிவை தில்லி அமைச்சரவை நிறைவேற்றும்' என்றார்.
மக்கள் குறை கேட்பு நேரம்
ஜூன் 1- முதல் நடைமுறைக்கு வருகிறது.
காலை 10 மணி - 11 மணிவரை அதிகாரிகளை சந்திக்கும் நேரம்.
காலை 11 மணி - 12 மணி வரை அமைச்சர்களை சந்திக்கும் நேரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.