ஹரியாணா மாநிலம் மானேசர் பகுதியில் தொழில் நகரம் அமைப்பதற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தியதில் நடைபெற்ற மோசடி தொடர்பாக 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
ஐஏஎஸ் அதிகாரிகள், ஹரியாணா அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் கட்டுமான நிறுவன அதிபர்களுக்குச் சொந்தமான இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூபேந்தர் சிங் ஹூடா ஹரியாணா முதல்வராக இருந்தபோது மானேசரில் தொழில் நகரம் அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்காக 900 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை கையகப்படுத்தத் திட்டமிட்டது. ஆனால், இந்த நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ளாமல், தனியார் வசம் ஒப்படைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து விவசாயிகள் மற்றும் சாமானியர்களுக்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு தனியார் கட்டுமான நிறுவனங்கள் மிரட்டி வாங்கியதாகக் கூறப்பட்டது. இதனால், நில உரிமையாளர்களுக்கு ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சிபிஐ அமைப்பு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறையினரும் இந்த விவகாரத்தை விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்திர ஹூடா மீதும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர். தில்லி, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் 10 இடங்களில் இச்சோதனை நடைபெற்றதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.