இந்தியா

ஒரே நாளில் 3 ரயில்கள் தடம் புரண்டு விபத்து: போக்குவரத்து பாதிப்பு

தில்லி, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மூன்று ரயில்கள் வியாழக்கிழமை தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. இதில் பயணி ஒருவர் பலத்த காயமடைந்தனர்.

DIN

தில்லி, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மூன்று ரயில்கள் வியாழக்கிழமை தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. இதில் பயணி ஒருவர் பலத்த காயமடைந்தனர். இதனால் அப்பகுதிகளில் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஒரே நாளில் அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நேர்ந்திருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. இதுகுறித்த விவரம்:
ஹவுராவில் இருந்து ஜெய்ப்பூர் வரை செல்லும் சக்திபஞ்ச் விரைவு ரயிலானது உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ஓப்ரா டேம் அருகே வியாழக்கிழமை காலை 6.25 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் 7 பெட்டிகள் அடுத்தடுத்து தடம் புரண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து ரயிலின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், இந்த திடீர் விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, தடம் புரண்ட பெட்டிகள் ரயிலில் இருந்து கழற்றி விடப்பட்டன. அதிலிருந்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு மாற்றிவிடப்பட்டனர். இதன் காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த வழித் தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பல ரயில்கள் தாமதமாகச் சென்றன. இதனிடையே, தில்லியின் மின்ட்டோ பாலம் அருகே காலை 11.45 மணிக்கு சென்று கொண்டிருந்த ராஜதானி விரைவு ரயிலும் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் அந்த ரயிலில் இருந்த பயணி ஒருவர் காயமடைந்தார். 
இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சூழலில், மகராஷ்டிர மாநிலம் கன்டாலா பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்றும் மாலை 3.55 மணிக்கு தடம் புரண்டதாக செய்திகள் வெளியாகின. இந்த தொடர் விபத்துகள் ரயில்வே நிர்வாகத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.
தவிர்க்கப்பட்ட விபத்து: இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம் ஃபர்ரூக்காபாத் - ஃபதேகர் இடையே தண்டவாளத்தில் விரிசல் இருந்தது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. அந்த வழியே காலிந்தி விரைவு ரயில் செல்வதற்கு சற்று நேரத்துக்கு முன்பு விரிசல் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 3 முறை ரயில் விபத்துகள் நேர்ந்துள்ளன. முசாஃபர்நகரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நேர்ந்த ரயில் விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக அந்த ரயில் தடம் புரண்டதாகக் கூறப்பட்டது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அச்சம்பவத்தின் வடுக்கள் மறையும் முன்னரே அதற்கு அடுத்த சில நாள்களில் அந்த மாநிலத்தின் ஹெளரையா மாவட்டத்தில் மேலும் ஒரு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜிநாமா செய்ய அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரவு முன்வந்தார்.
அதன் பிறகு அவரிடமிருந்து ரயில்வே துறை மாற்றப்பட்டு பியூஷ் கோயல் வசம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சரவை மாற்றங்கள் நடந்து ஓரிரு நாள்களே ஆன நிலையில், மீண்டும் அடுத்தடுத்து விபத்துகள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

SCROLL FOR NEXT