படைபலத்தைப் பயன்படுத்துவதற்கு பதில் அரசியல்ரீதியில் காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா கூறியுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
காஷ்மீரில் இந்திய ராணுவம் அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகிறது.
காஷ்மீர் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுவதுதான் இந்தியாவுக்கு நல்லது. பிரச்னைக்குத் தீர்வு காண பாகிஸ்தான் மீது பழிபோடுவதையோ, பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்துவதையோ விட்டுவிட்டு, அரசியல்ரீதியில் தீர்வுகாண இந்தியா முயலவேண்டும்.
காஷ்மீர் பிரச்னைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுவதைத்தான் பாகிஸ்தானும் விரும்புகிறது. காஷ்மீரில் நிரந்தர அமைதி ஏற்பட்டால்தான் இந்தியாவையும், பாகிஸ்தானையும் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் நலம் பெறுவர்.
அவ்வாறு நிரந்தர அமைதி எட்டப்பட வேண்டும் என்றால், நிராயுதபாணிகளான அப்பாவிப் பொதுமக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நிகழ்த்துவதை இந்தியா கைவிட வேண்டும்.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானங்களுக்கு ஏற்ப, காஷ்மீரிகள் தங்களது சுய நிர்ணய உரிமையைப் பெறுவதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து அரசியல், தார்மீக, தூதரகரீதியில் ஆதரவு அளிக்கும்.
பாகிஸ்தானில் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க இந்தியா முயன்று வருகிறது. மேலும், பாகிஸ்தானுக்குச் சேர வேண்டிய நதிநீரை இந்தியா சட்டவிரோதமாக எடுத்துக் கொள்கிறது என்று கமர் ஜாவேத் பாஸ்வா குற்றம் சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.