பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, தில்லியிலும், காஷ்மீரிலும் 10 இடங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பினர்(என்ஐஏ) வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது, 3 நவீன ரகத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக, என்ஐஏ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடவும், போராட்டங்களில் ஈடுபடவும், ஜம்மு-காஷ்மீரிலும், தில்லியிலும் உள்ள சிலர் நிதியுதவி அளிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டு, சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, தில்லி, குர்கான் ஆகிய நகங்களில் 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
பயங்கரவாதச் செயல்களின் மையமாகக் கருதப்படும், தெற்கு காஷ்மீரில் சோதனை நடத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
காஷ்மீரில் பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா கிலானி தலைமையிலான ஹுரியத் மாநாட்டு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு முக்கியத் தலைவர் அகா சையது ஹுசைன் பட்காமி, அண்மையில் கைது செய்யப்பட்ட சபீர் ஷாவுக்கு நெருக்கமான அப்துல் ரஸாக், தொழிலதிபர் ஜகூர் வட்டாலியின் பட்டயக் கணக்காளர் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில், அப்துல் ரஸாக்கிடம் இருந்து 3 அதிநவீன ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.
அந்த மூன்று துப்பாக்கிகளுக்கும் உரிமம் வைத்திருப்பதாக அப்துல் ரஸாக் கூறினார். ஆனால், அதற்கான ஆவணங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.