மத்திய அரசு அறிவித்த பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வுத் திட்டத்தின் (பிஎம்ஜிகேஒய்) கீழ், ரூ.4,900 கோடி கருப்புப் பணம் கணக்கில் கொண்டுவரப்பட்டதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தத் துறை உயரதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறியதாவது:
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்புக்குப் பிறகு, கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து அதனை அறிவிப்பதற்கான பிஎம்ஜிகேஒய் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்தத் திட்டத்தின் கடைசி நாளான மார்ச் மாதம் 31-ஆம் தேதிவரை ரூ.4,900 கோடி கருப்புப் பணம் கணக்கில் கொண்டுவரப்பட்டது. இதுவே இறுதித் தொகையாகும் என்றார் அவர்.
புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், 50 நாள்களுக்குள் அவற்றை வங்கிகளில் திருப்பிச் செலுத்தி செல்லுபடியாகக் கூடிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, அதிக அளவு கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதை தாமாக முன்வந்து அறிவித்தால் 50 சதவீதம் வரி மற்றும் 25 சதவீதம் கட்டாய வைப்பு போன்ற நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொள்ளும் பிஎம்ஜிகேஒய் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
எனினும், இந்தத் திட்டத்துக்குப் போதிய வரவேற்பு இல்லை என மத்திய வருவாய்த் துறைச் செயலர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பிஎம்ஜிகேஒய் திட்டத்தைத் தொடர்ந்து, வருவாய் அறிவிப்புத் திட்டம் (ஐடிஎஸ்) அறிவிக்கப்பட்டதும், வரியை எதிர்நோக்கி மக்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணத்தைச் செலுத்தியதாலும் அந்தத் திட்டத்தை தோல்வித் திட்டமாகக் கருத முடியாது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.