மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் பன்றிக் காய்ச்சலில் 44 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்த மாநில சுகாதாரத் துறை இயக்குநர் கே.எல். சாஹு வியாழக்கிழமை கூறியதாவது:
மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 226 பேருக்கு ஹெ1என்1 எனப்படும் பன்றிக் காய்ச்சல் நோய் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் அந்தக் காய்ச்சல் காரணமாக 44 பேர் இறந்தனர். அதிகபட்சமாக போபால் மற்றும் இந்தூர் மாவட்டங்களில் தலா ஐந்து பேர் பன்றிக் காய்ச்சலில் இறந்தனர். இதுதவிர, ஜபல்பூர், சாகர் ஆகிய மாவட்டங்களில் தலா மூவரும், பிற மாவட்டங்களில் ஏனைய 28 பேரும் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகினர்.
இந்த நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்களிடையே விழப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பன்றிக் காய்ச்சலைக் கண்டறிவதற்கான சோதனைக் கூடங்களை அமைக்கும்படி அதிகாரிகளுக்கு மாநில பொது சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ருஸ்தம் சிங் உத்தரவிட்டுள்ளதாக மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.