இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்
மத்திய இடைக்கால நிதியமைச்சராக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய இடைக்கால நிதியமைச்சராக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின்பேரில், இவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மருத்துவப் பரிசோதனைக்காக, கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். இதனிடையே, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், வரும் 31-ஆம் தேதி தொடங்குகிறது. மத்திய இடைக்கால பட்ஜெட், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இதுவாகும். ஆனால், இதனை தாக்கல் செய்வதற்காக, குறிப்பிட்ட தேதிக்குள் ஜேட்லி திரும்பிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
எனவே, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நிதித் துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
ஜேட்லி வகித்து வந்த நிதித் துறை மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரங்கள் துறை ஆகியவை பியூஷ் கோயலுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.