இந்தியா

வயநாடு: மழை நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு ராகுல் ஆறுதல்

DIN


கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள மழை நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பொது மக்களை காங்கிரஸ் முன்னாள்
தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
வயநாடு மக்களவைத் தொகுதிஎம்.பி.யான ராகுல் காந்தி, அங்கு  4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சுங்கம், மக்கியாடு உள்ளிட்ட இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை நேரில் சென்றார். பின்னர் அங்கு தங்கியுள்ள மக்களுக்கு நிவாரண உதவி பொருள்களை ராகுல் அளித்தார். அதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை  கேட்டறிந்தார்.
அப்போது ராகுல் காந்தியிடம், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களில் சிலர், மழை வெள்ளத்தில் எங்களது வீடுகள் அழிந்து விட்டன; மாநில அரசின் நிவாரண நிதியான ரூ.10 ஆயிரம்  இன்னமும் கிடைக்கவில்லை. மழை வெள்ளத்தில் குழந்தைகளின் நோட்டு புத்தகங்கள் பறி போய் விட்டன; இதனால் பள்ளிகளுக்கு குழந்தைகள் செல்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இதைக் கேட்ட ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தரும்படி, கேரள அரசை மீண்டும் வலியுறுத்துவேன் என்று உறுதியளித்தார்.
செருபுழா எனுமிடத்தில் மக்களிடையே ராகுல் பேசுகையில், வெள்ளம் வந்தபோது, மக்கள் தங்களது மதம், சமூகம், அரசியல் கட்சி என்று வேறுபாடு பார்க்கவில்லை. அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டனர். தற்போதைய சூழ்நிலையில், ஒட்டுமொத்த நாட்டுக்கும் வயநாடு மக்கள் எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர். வயநாடு மக்களுக்கு தேவைப்படும் உதவி குறித்து பிரதமருக்கும், கேரள முதல்வருக்கும் கடிதம் மூலமும், தொலைபேசி மூலமும் தெரியப்படுத்துவேன். 
வயநாடு தொகுதியின் வளர்ச்சிக்கு மாநிலத்தை ஆளும் இடதுசாரி கட்சியின் ஆதரவை கோருவேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்வதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகளை தொடர்ந்து நிர்பந்திப்பேன். மக்களுக்கு குறிப்பிட்ட உரிமைகள் உள்ளன. அரசும் குறிப்பிட்ட விதிகளை கடைபிடிக்க வேண்டியுள்ளது. அதில் ஒரு விதியானது, வீடு இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதாகும். நான் இந்த மாநிலத்தின் முதல்வர் கிடையாது. இந்த மாநிலத்தில் இருக்கும் அரசும், காங்கிரஸ் அரசு கிடையாது. அதேநேரத்தில், வயநாடு மக்கள் தங்களது உரிமைகளை கேட்டுப் பெற உதவுவேன். இந்த தருணத்தில் வயநாடு மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது எனது பொறுப்பு என்றார்.
சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், வயநாடு தொகுதியில் அடுத்த சில நாள்களுக்கு தங்கியிருந்து நிவாரண முகாம்களுக்கு செல்லவுள்ளேன். வயநாட்டில் நடைபெறும் மறுவாழ்வு பணிகளை பார்வையிடவுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வயநாடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழையாலும், அதைத் தொடர்ந்து நேரிட்ட நிலச்சரிவாலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பை பார்வையிடுவதற்கு கேரளத்துக்கு ராகுல் காந்தி இம்மாத தொடக்கத்தில் வந்திருந்தார். அதையடுத்து ஒரே மாதத்தில் 2ஆவது முறையாக தற்போதும் அவர் வந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா மீதான வழக்கு: ராகுல் காந்தி மீது டிஜிபியிடம் மஜத புகாா்

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கை கையாளுவதில் மெத்தனம் இல்லை -அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

தெருநாய் கடித்து சிறுவன் உயிரிழப்பு

ஏழாம் கட்டத் தேர்தலில் 904 வேட்பாளர்கள்

முன்னணி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 268 புள்ளிகள் உயா்வு!

SCROLL FOR NEXT