லக்னெளவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் வாழைப்பழ விற்பனைக்கு ரயில்வே அதிகாரிகள் தடை விதித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. மலிவான விலையில் கிடைப்பதால் 'ஏழைகளின் பழம்' என்று கூறப்படுகிறது. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் பழமாகும். அதேபோன்று குறிப்பிட்ட சீசன் அல்லாமல் அனைத்துக் காலங்களிலும் கிடைக்கும்.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னெளவில், சர்பாக்( Charbagh) ரயில் நிலையத்தில் பெரும்பாலான இடங்களில் வாழைப்பழத் தோல்கள் அசுத்தத்தை ஏற்படுவதால், அங்கு வாழைப்பழ விற்பனைக்கு தடை விதித்து ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தடையை மீறிய எவரும் விற்பனை செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ரயில் நிலையத்தில் கடைக்காரர் ஒருவர் பேசும் போது, 'நான் கடந்த 5 முதல் 6 நாட்களாக வாழைப்பழங்களை விற்கவில்லை. ரயில்வே நிர்வாகம் வாழைப்பழ விற்பனையை தடை செய்துள்ளது. இதில் வரும் வருமானத்தை வைத்து தான் எனது குடும்பத்தை கவனித்து வந்தேன். மற்ற பழங்கள் விற்பனை செய்தாலும், அதன் விலை அதிகம் என்பதால், அந்த அளவுக்கு விற்பனை ஆகாது. பெரும்பாலாக அனைத்து மக்களும் வாழைப்பழம் வாங்குவதால் எங்களுக்கும் அதில் ஒரு திருப்தி இருக்கிறது. எனவே, வாழைப்பழ விற்பனைக்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும்' என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
ரயில் பயணி ஒருவர் பேசுகையில், 'வாழைப்பழம் அனைத்து மக்களுக்கும் உட்கொள்ளக்கூடிய, மலிவான, ஆரோக்கியமான பழமாகும். வாழைப்பழத் தோல்கள் அசுத்தத்தை உருவாக்குகின்றன என்று சொல்வது முட்டாள்தனமானது. அசுத்தம் என்றால் கழிப்பறைகளினால் கூட அசுத்தம் ஏற்படுகிறது. அதனால் மக்கள் கழிப்பறைகளை உபயோகிக்கக் கூடாது என்று அதிகாரிகள் கூறுவார்களா?' என்று கேள்வி எழுப்பினார்.
ரயில் நிலையத்தில் வாழைப்பழ விற்பனைக்கு ரயில்வே அதிகாரிகள் தடை விதித்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.