இந்தியா

நாட்டு மக்கள் ஜம்மு காஷ்மீருடன் தொடர்பில் இருப்பது அவசியம்: உச்ச நீதிமன்றம்

PTI


புது தில்லி: நாட்டு மக்கள் அனைவரும் ஜம்மு காஷ்மீருடன் தொடர்பில் இருப்பது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் தனது கருத்தினை பதிவு செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டற்கு எதிரான வழக்குகள் அனைத்தும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஜம்மு காஷ்மீர் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளை மட்டுமே யெச்சூரி சந்திக்க வேண்டும். அரசியல் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது. பொது அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

முகமது ஜமீல் உள்ளிட்டோரும் காஷ்மீர் செல்ல அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், அங்கு உறவினர்கள், நண்பர்களை மட்டும்தான் சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

நாட்டு மக்கள் ஜம்மு காஷ்மீருடன் தொடர்பு கொள்வது அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துக் கூறியது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, ஜம்மு-காஷ்மீரை பிரித்து லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களை உருவாக்குவது என அண்மையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், காஷ்மீரின் கள நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் தில்லியில் இருந்து காஷ்மீருக்கு சென்றனர்.

ஸ்ரீநகர் விமான நிலையம் வந்தடைந்த அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதுடன் மீண்டும் தில்லிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக சீதாராம் யெச்சூரி கூறியதாவது: ஸ்ரீநகருக்குள் நுழைவதற்கு அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தொடர்பான அறிக்கையை காவல் துறையினர் எங்களிடம் காட்டினர். அந்த அறிக்கையில், பாதுகாப்பு காரணங்களுக்காக, அரசியல் தலைவர்களுடன் துணையாக செல்லும் வீரர்களுக்கு கூட அனுமதி இல்லை என்று கூறப்பட்டிருந்தது. எங்கள் கட்சியின் மாநில தலைவர்களை சந்திக்கவே நாங்கள் சென்றோம். காஷ்மீரின் நிலை குறித்து அவர்களிடம் விவாதிப்பதற்காக சென்றோம். 

நாங்கள் காஷ்மீர் வருவதாக ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யயபால் மாலிக்குக்கு கடிதம் எழுதியிருந்தோம். எங்களது பயணத்தின்போது எவ்வித தடைகளும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுமாறு அந்தக் கடிதத்தில் கோரியிருந்தோம். 

எனினும், எங்களை தடுத்து நிறுத்தி மீண்டும் தில்லிக்கு திருப்பி அனுப்பியது ஜனநாயகத்துக்கு எதிரானது. இது பாஜகவின் உண்மையான முகத்தை காட்டுகிறது என்று கூறினார்.

இதனை எதிர்த்து  அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், யெச்சூரிக்கு காஷ்மீர் செல்ல அனுமதி அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கை நடுக்கமா? அசாம் முதல்வருக்கு நவீன் பட்நாயக் பதிலடி

'எனக்கு முன் மாதிரி மேஜர் ராதிகா சென்': ஐ.நா. பொதுச் செயலாளர் புகழாரம்!

அதிக நீரைப் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க நேரிடும்: அதிஷி

இரவு 7.30 மணிக்கு என்னசெய்வது? கை உதறலோடு அல்லாடிய இளைஞர்கள்!

பூ சூடிய பூ! மீனாக்‌ஷி செளத்ரி..

SCROLL FOR NEXT