ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை மேலும் 3 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ தரப்பில் இதுவரை 400க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. சிதம்பரத்திடம் மேலும் பல கேள்விகளைக் கேட்கவேண்டி உள்ளது என்று சிபிஐ தரப்பில் முறையிடப்பட்டது.
இந்த நிலையில், திங்கட்கிழமை வரை சிபிஐ காவலில் இருக்கத் தயார் என்று சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிதம்பரத்துக்கு மேலும் 3 நாட்கள் சிபிஐ காவல் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி, தில்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன்ஜாமீன் அளிப்பதற்கு சிபிஐயும், அமலாக்கத் துறையும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதைத் தொடர்ந்து, அவரது முன்ஜாமீன் மனுவை தில்லி உயர்நீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி தள்ளுபடி செய்துவிட்டது.
இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கைக்கு உச்சநீதிமன்றம் கடந்த 21-ஆம் தேதி மறுப்பு தெரிவித்ததுடன், மனு மீதான விசாரணையை 23-ஆம் தேதிக்குப் பட்டியலிட்டிருந்தது.
இதையடுத்து, கடந்த 21-ஆம் தேதி இரவே, தில்லியில் உள்ள இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பின்னர் தில்லியிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் வியாழக்கிழமை (ஆக.22) ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை, ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிப்பதற்கு சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
மேலும் 4 நாள்களுக்கு சிபிஐ காவல்: நான்கு நாள் சிபிஐ காவல் முடிவடைந்ததை அடுத்து, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் ப.சிதம்பரம் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.என்.நடராஜன் முன்வைத்த வாதம்:
கடந்த 4 நாள்களாக, வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபருடன் சேர்த்து சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களுக்கு இடையேயான மின்னஞ்சல் பரிமாற்றம் குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, ப.சிதம்பரத்தை மேலும் 5 நாள்களுக்கு விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ப.சிதம்பரத்தை மேலும் 4 நாள்களுக்கு (ஆக. 30 வரை) சிபிஐ காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இன்று சிபிஐ காவல் முடிவடைந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப. சிதம்பரத்துக்கு மேலும் 3 நாட்களுக்கு சிபிஐ காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பின்னணி: கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதைத் தொடர்ந்து, கருப்புப் பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், தில்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது.
ப.சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் முன்வைத்த வாதம்: இந்த வழக்கில் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. அவரைக் கைது செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஏற்கெனவே மனுதாரரை சிபிஐ கைது செய்துவிட்டதால், அவரைக் கைது செய்யக் கூடாது என்று வலியுறுத்துவது பயனற்றது என்று கூறி, அந்த மனுவை நீதிபதிகள் விசாரிக்க மறுத்துவிட்டனர்.
அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் கைது செய்யத் தடை நீட்டிப்பு: ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், ப.சிதம்பரத்தைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை வரை தடை விதித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, ப.சிதம்பரம் சார்பில் ஆஜரான கபில் சிபல் முன்வைத்த வாதம்: இந்த வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத் துறையினர் ஏற்கெனவே 3 முறை விசாரணை நடத்தினர். ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒருமுறை கூட அதிகாரிகள் கேட்கவில்லை என்றார் அவர். வழக்கு தொடர்பாக செவ்வாய்க்கிழமையும் வாதங்களை முன்வைக்க வேண்டியுள்ளது என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ப.சிதம்பரத்தைக் கைது செய்வதற்கான தடையை செவ்வாய்க்கிழமை வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.