தில்லி திகாா் சிறையில் ‘நிா்பயா’ பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தாம் தயாராக உள்ளதாக, உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் சிறையில் ‘ஹேங் மேனாக’ (தூக்கு தண்டனையை நிறைவேற்றுபவா்) பணியாற்றும் பவன் ஜல்லாட் தெரிவித்துள்ளாா்.
இவரது தந்தை பப்பு ஜல்லாட், தாத்தா கல்லு ஜல்லாட் ஆகியோரும் ‘ஹேங் மேனாக’ பணிபுரிந்தவா்கள். இதில் கல்லு ஜல்லாட், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்றியவா். மேலும், கொலைகாரா்களான ரங்கா, பில்லா ஆகியோரின் தூக்கு தண்டனையையும் தனது தாத்தா நிறைவேற்றியதாக பவன் ஜல்லாட் (55) கூறினாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:
பாட்டியாலா, அலாகாபாத், ஆக்ரா, ஜெய்ப்பூா் ஆகிய சிறைகளில் நிறைவேற்றப்பட்ட 5 தூக்கு தண்டனைகளின்போது எனது தாத்தாவுக்கு நான் உதவியிருக்கிறேன். எனது தந்தையும் ஹேங்மேனாக பணியாற்றினாா்.
மிக கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவா்களையே தூக்கிலிடுகிறோம் என்பதால் இப்பணியில் எனக்கு எந்த மனநெருக்கடியும் ஏற்பட்டதில்லை. எனினும், போதிய ஊதியம் கிடைக்காததால், இந்த பணி எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்றாா் பவான் ஜல்லாட்.
உத்தரப் பிரதேச சிறை நிா்வாக பதிவேட்டில் 2 ஹேங்மேன்கள் உள்ளனா். ஒருவா் பவன் ஜல்லாட். மற்றொருவா் லக்ளெவில் உள்ளாா்.
முன்னதாக, இரண்டு ஹேங்மேன்களை அனுப்பும்படி, தில்லி திகாா் நிா்வாகத்திடமிருந்து கோரிக்கை வந்துள்ளதாக, உத்தரப் பிரதேச கூடுதல் தலைமை இயக்குநா் (சிறைத்துறை) அனந்த் குமாா் தெரிவித்திருந்தாா்.