இந்தியா

என்ஐஏ சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

DIN


தேசிய புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) வலுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து பயங்கரவாத குற்றச் செயல்களை விசாரிக்க கடந்த 2009-ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட்டது. நாட்டில் உருவாகும் புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில், என்ஐஏ அமைப்புக்கு அதிக அதிகாரம் அளிக்க வேண்டும் என்று கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு முயற்சித்து வந்தது.
இந்நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகார வரம்பை அதிகரிக்கும் வகையில் என்ஐஏ சட்டத்திருத்த மசோதா, 2019' மக்களவையில் திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது. அதையடுத்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.
தேச நலனைக் கருத்தில் கொண்டு இந்த சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், என்ஐஏ அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 90 சதவீத வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அந்த அமைப்பின் அதிகாரத்தை அதிகரிப்பதால், வழக்குகளில் விரைந்து தீர்வு காண இயலும். பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் போராடுவதற்கு இந்த சட்டத்திருத்தம் உதவியாக இருக்கும். தேச நலனைக் கருத்தில் கொண்டே இந்த சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால் அனைவரும் இந்த மசோதா நிறைவேறுவதற்கு ஒத்துழைக்க வேண்டும்' என்று கூறினார்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு..: இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியாவை கண்காணிப்பு' நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், அரசியல் பழிதீர்க்கும் விஷயங்களுக்காக விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் விசாரணை அமைப்புகளின் அதிகாரத்தை மத்திய அரசு அதிகரிக்கிறது. நாட்டு மக்களை ரகசியமாக கண்காணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது' என்று குற்றம்சாட்டினார்.
மசோதா நிறைவேற்றம்..: இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், மசோதாவை நிறைவேற்றுவதற்கு குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 278 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 6 எம்.பி.க்கள் எதிராக வாக்களித்தனர். அதையடுத்து பெரும்பான்மை அடிப்படையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
என்ஐஏ அமைப்பின் புதிய அதிகாரங்கள்..: இந்த சட்டத்திருத்த மசோதாவின் படி, வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் இந்திய பயங்கரவாதிகள், வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு உள்ள சொத்துகள்,  இணையவழி குற்றங்கள், ஆயுதங்கள் மற்றும் ஆள்கடத்தல் ஆகியவை தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரத்தை என்ஐஏ அமைப்புக்கு வழங்குகிறது. 
அமித் ஷா-ஒவைஸி இடையே வாக்குவாதம்..: இந்த மசோதா மீதான விவாதத்தின்போது, அனைத்திந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அஸாதுதீன் ஒவைஸி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இடையை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 
இந்த மசோதா குறித்து பாஜக எம்.பி. சத்யபால் சிங் பேசுகையில் ஒவைஸி உள்ளிட்ட சிலர் குறுக்கிட்டுப் பேசினர். அதையடுத்து அவையில் ஒருவர் பேசும்போது, மற்ற அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தினார். 
அதைக் கேட்டு கோபமடைந்த ஒவைஸி, தன்னை நோக்கி யாரும் கை நீட்டிப் பேச வேண்டாம். எனக்கு யாரைக் கண்டும் அச்சமில்லை' என்றார். அதற்கு பதிலளித்த அமித் ஷா, நான் யாரையும் அச்சுறுத்தவில்லை. அமைதியாக இருக்குமாறு கூறினேன். உங்கள் மனதில் அச்சம் இருந்தால், என்னால் ஏதும் செய்ய இயலாது' என்றார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதே நோக்கம்
என்ஐஏ சட்டத்திருத்த மசோதா அரசியல் பழிவாங்கும் செயல்களுக்காக பயன்படுத்தப்படும் என்று எதிர்க்கட்சிகள் முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுப்பு தெரிவித்தார். 


பயங்கரவாதத்தை ஒழிப்பதே இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும், இந்த சட்டப் பிரிவுகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒருபோதும்  தவறாகப் பயன்படுத்தாது என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.  என்ஐஏ சட்டத்திருத்த மசோதா குறித்த விவாதத்தின்போது அமித் ஷா பேசுகையில், வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு பொடா' சட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நீக்கியது. ஆனால், அதே அரசுதான் என்ஐஏ அமைப்பை உருவாக்கியது. 
அந்த அமைப்பை வலிமைப்படுத்துவது, பயங்கரவாதத்துக்கு எதிராகப் பயன்படுத்த மட்டுமே. அரசியல் பழிவாங்கும் செயலுக்காக இந்த மசோதா பயன்படுத்தப்படும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அத்தகைய எண்ணம் எங்கள் அரசுக்கு சிறிதளவும் இல்லை. பயங்கரவாதத்தை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது, மதங்கள் குறித்து யோசிக்க மாட்டோம். யாராக இருந்தாலும் தக்க தண்டனை அளிக்கப்படும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் முதல் பாடலுக்கு நடிகர் விஜய் கூறியது என்ன தெரியுமா?

மனப்பால் குடிக்கும் மோடி: வைகோ விமர்சனம்

திரிசங்கு நாடாளுமன்றம் என்றால் யாருக்கு ஆதரவு? இபிஎஸ் பதில்

ஐஸ்லாந்தில்....அஹானா கிருஷ்ணா

10, 12 முடித்தவர்களுக்கு ஓட்டுநர், லேப் டெக்னீசியன் வேலை

SCROLL FOR NEXT