இந்தியா

மழை பற்றாக்குறை: பெங்களூரில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்?

தினமணி

நிகழாண்டில் பற்றாக்குறை மழை பெய்துள்ளதால், பெங்களூரில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.
 இதமான குளுமைக்குப் புகழ் பெற்ற பெங்களூரு, பன்னாட்டு மாநகரமாக உருவாகியுள்ளது. இந்த நிலையில், அதன் அசுர வளர்ச்சி மக்கள் தொகையை அதிகரிக்க வைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பெங்களூரின் மக்கள் தொகை அதிகரித்து, 1.25 கோடியை எட்டியுள்ளது.
 வீட்டு வசதி, சாலை வசதி, மின் வசதி, அடிப்படை உள்கட்டமைப்புவசதிகளை செய்துதருவதோடு, குடிநீர் வசதியையும் பெங்களூரு செய்துதர வேண்டியுள்ளது.
 குடிநீருக்கு 50 சதவீதம் காவிரி ஆற்றுநீரை நம்பியிருக்கும் பெங்களூரு மாநகரமானது எஞ்சியுள்ள குடிநீர் தேவைக்கு மழையையே நம்பியுள்ளது. ஆனால், நிகழாண்டில் வழக்கத்தைவிட பெங்களூரில் பற்றாக்குறை மழை பெய்துள்ளது. இது குடிநீர் பஞ்சத்துக்கு அழைத்துச் செல்லும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
 தென் மேற்கு பருவ மழை பொய்த்தது: பெங்களூரில் நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். கர்நாடகத்தில் ஜூன் 12-ஆம் தேதி பெய்யத் தொடங்கிய பருவ மழை, ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் 21 சதவீதம் பற்றாக்குறையாக பெய்துள்ளதாக கர்நாடக மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
 கர்நாடகத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் 303 மி.மீ. மழை பெய்திருக்கவேண்டும். ஆனால் ஜூலை 14-ஆம் தேதிவரை 239 மி.மீ. மழைதான் பெய்துள்ளது. மாநில அளவில் காணப்படும் பற்றாக்குறை மழையைக் காட்டிலும் பெங்களூரில் மழை பற்றாக்குறை அதிகமாக உள்ளது. ஜூன் 1-ஆம் தேதி முதல் பெங்களூரில் 102 மி.மீ. மழை பதிவாகியிருக்கவேண்டும். ஆனால் இதுநாள்வரை 66 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது.
 ஜூலை மாதத்தில் மட்டும் 31 மி.மீ. அளவு மழைக்கு பதிலாக 7.4 மி.மீ. மழை மட்டுமே பொழிந்துள்ளது. இது 76 சதவீதம் பற்றாக்குறையாகும். ஜூலை 20-ஆம் தேதி பெரிய அளவிலான மழையை எதிர்பார்க்கக் கூடாது என்று கூறும் மேலாண்மை மைய அதிகாரிகள், அதன்பிறகும் வழக்கமான மழை பெய்யாவிட்டால் குடிநீர் பஞ்சத்தை நோக்கி பெங்களூரு பயணிக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றனர்.
 காற்று மாசு அதிகரித்துள்ளதே காரணம்
 இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஏ.என்.எல்லப்பாரெட்டி கூறியது:-
 அழிவை நோக்கி பெங்களூரு பயணித்து கொண்டிருக்கிறது. இதேநிலைநீடித்தால், எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சம் அல்லது பெரு வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. பெங்களூரில் மேகங்கள் காணப்படுவதில்லை என்பதல்ல. மழை தரு மேகங்கள் உருவானாலும் அவை கடந்து விடுகின்றன.
 மழையாகப் பொழிவதில்லை என்பது தான்பிரச்னை. மேகங்களைப் பிடித்துவைக்கும் தடுப்பரண்கள் தேவைப்படுகின்றன. மேலும் மேகங்கள் மழையாகப் பொழிய குளுமையான காற்று வேண்டும். இதற்குத் தேவையான மரங்கள் இல்லை. அதிக அளவில் காற்று மாசு காணப்படுகிறது. மேகங்களைத் தடுத்துமுடியாத அளவுக்கு மாசுதுகள்கள் காற்றில் உள்ளன. பெங்களூரில் அதிக எண்ணிக்கையில் மரங்கள் காணப்பட்டால், இது பூ பூக்கும் காலம் என்பதால், மகரந்தங்கள் வெளிப்பட்டு, அதிகளவிலான மகரந்ததூள் வளிமண்டலத்தில் கலந்து, ஈரபதத்துடன் இணைந்து, மேகக்கூட்டத்தோடு சேர்ந்து மழையாக பொழியும். இது மழையை பிடித்துவைக்கும் வழக்கம் கொண்டதாகும். போதுமான மழை இல்லாததால், வெவ்வேறுவகையான தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. வைரஸ் காய்ச்சல் முதல் டெங்கு நோய்கள் தாக்கும். இதுபோன்ற தட்ப வெப்பத்தில் வைரஸ் வேகமாக இனப்பெருக்கம் செய்யும். இவை அனைத்தும் மனிதன், மனிதனுக்கே செய்துகொண்ட தீங்காகும். மரங்களை வெட்டி, கட்டடங்களை கட்டினால், மழை பெய்யும் என்று எதிர்பார்க்கக்கூடாது" என்றார் அவர்.
 மழைநீரைச் சேமிக்க வேண்டும்
 இதுகுறித்து பெங்களூரில் ஒருலட்சம் கிணறுகளை புதுப்பிக்ககாரணமாக இருந்தவரும், நீரியல் அறிஞருமான விஸ்வநாத் ஸ்ரீகண்டையா கூறியது:-
 மழை பெய்யாதது பெரும் குறை என்றால், மழைநீரைச் சேமித்துவைக்கும் பழக்கமும் மக்களிடம் இல்லாதது நிலைமையை மோசமாக்குகிறது.
 நிகழாண்டு கோடைகாலத்தில் பெங்களூரில் 200 மி.மீ. கோடைமழை பெய்தது. இது ஆண்டு மழை அளவில் 20 சதவீதமாகும். ஆனால் அந்தமழைநீரை சேமித்துவைக்க தவறுவிட்டோம். தற்போது மழை பற்றாக்குறையாகியுள்ளது. ஆகஸ்ட், செப்டம்பரில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம். அப்போதாவது மழைநீரை சேமிக்க முற்படுவோம். பெங்களூரு 5 சதவீதம் மழைநீரை மட்டும்தான் சேமிக்கிறது. ஆழ்துளைக் கிணறுகள், கிணறுகளை சீரமைத்துவருவதால், கூடுதலாக 5 சதவீதம் மழைநீரை சேமிக்கலாம்.
 மழைநீரை சேகரிக்கும் கொள்திறன் நம்மிடம் உள்ளது. 50 மழை நீரை சேமித்தால், பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடே ஏற்படாது. மழை நீரை சேமித்தால் பெங்களூருக்கு காவிரி, ஷராவதி ஆற்றுநீர் தேவையே இல்லை" என்றார் அவர்.
 "கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பினால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது'
 காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பினால் பெங்களூரு மாநகருக்கு குடிநீர்தட்டுப்பாடு ஏற்படாது என்று கர்நாடகமாநில பேரிடர் மேலாண்மை மைய விஞ்ஞானி எஸ்.எஸ்.எம்.கவாஸ்கர் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் மேலும் கூறியது:-
 பெங்களூரு உள்ளிட்ட தென்கர்நாடகத்தின் உள்பகுதியில் தீவிரமான மழை பற்றாக்குறைகாணப்படுகிறது. ஜூலை 20-ஆம் தேதிவரை வழக்கமான மழை கூட இருக்காது என்று கணித்திருக்கிறோம். இதை தென்மேற்கு பருவமழையின் விடுப்பு என்றழைக்கிறோம்.
 வானத்தில் போதுமான மேகக்கூட்டங்கள் இல்லாததே இதற்கு காரணமாகும். மழை பற்றாக்குறை அடுத்தடுத்த வாரங்களில் அதிகரிக்கவாய்ப்புள்ளது. காவிரி ஆற்றுப்படுகையில் போதுமான மழை பெய்து, காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பினால் பெங்களூருக்கு குடிநீர்தட்டுப்பாடு ஏற்படாது" என்றார் அவர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி வட்டார வாக்குப்பதிவு மைய பொருள்கள் தொகுப்பு ஆய்வு

மணப்பாறையில் ‘இந்தியா’ கூட்டணியினா் வாக்குசேகரிப்பு பேரணி

ஐஜேகே கட்சி நிா்வாகி வீட்டிலிருந்து ரூ. 1 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் சுகாதாரமான குடிநீா் கிடைக்க ஏற்பாடு

அடையாளம் தெரியாத பெண் கொலை வழக்கில் இளைஞா் ைது

SCROLL FOR NEXT