பாஜக பெண் எம்.பி.க்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில், சமாஜவாதி கட்சி எம்.பி. ஆஸம் கான் மக்களவைத் தலைவர் முன்னிலையில் ஆஜராகி அவையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக, மக்களவைத் தலைவர் அலுவலக வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
ஆஸம் கான் மன்னிப்பு கேட்கத் தவறும் பட்சத்தில், அவர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க மக்களவைத் தலைவருக்கு முழு அதிகாரமளிக்கும் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.
முன்னதாக, ஆஸம் கானுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். கட்சி வேறுபாடின்றி அனைத்து எம்.பி.க்களும் இந்த விவகாரத்தில் ஓரணியில் திரண்டனர்.
மக்களவையில் முத்தலாக் தடை மசோதா மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றபோது, அவை அலுவல்களை பாஜக பெண் எம்.பி. ரமாதேவி தலைமை வகித்து நடத்தினார். இந்த விவாதத்தின்போது ஆஸம் கான் பேசினார். அப்போது அவரிடம், பிற இடங்களைப் பார்த்துப் பேசாமல், மக்களவைத் தலைவரைப் பார்த்துப் பேசும்படி ரமாதேவி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, அவருக்கு எதிராக ஆஸம் கான் சில ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை வெளியிட்டார். இதனால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மக்களவையில் வெள்ளிக்கிழமை உடனடிக் கேள்வி நேரத்தின்போது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், சமாஜவாதி எம்.பி. ஆஸம் கான் மக்களவையில் தெரிவித்த கருத்து, அனைத்து எம்.பி.க்களின் மீதும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் அமைதி காத்துக் கொண்டிருக்க முடியாது. ஆஸம் கானின் கருத்துக்கு எதிராக அனைத்து எம்.பி.க்களும் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக எம்.பி. ரமாதேவி கூறுகையில், மக்களவையின் எஞ்சிய காலம் வரை அவர் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றார்.
தகுந்த நடவடிக்கை: மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், இந்த விவகாரத்தில் ஆஸம் கான் மன்னிப்பு கோர வேண்டும் அல்லது அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, பிஜு ஜனதா தளம் எம்.பி. பி.மஹ்தாப் உள்ளிட்டோர் ரவிசங்கர் பிரசாதின் கருத்தை வழிமொழிந்தனர்.
மக்களவை காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் செளதரி கூறுகையில், பெண்களை சிறுமைப்படுத்தும் வகையிலான கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு எம்.பி.க்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, ஆஸம் கானுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் பெண் எம்.பி.க்கள் பலர் முறையிட்டனர்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் அவைத் தலைவர் ஓம் பிர்லா ஆலோசனை நடத்தினார். இதில், இந்த விவகாரம் தொடர்பாக ஆஸம் கான் மன்னிப்பு கோர வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் மக்களவைத் தலைவர் முன்பாக ஆஸம் கான் திங்கள்கிழமை ஆஜராகி தனது கருத்துக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.