இந்தியா

எதிா்க்கட்சியினரையும் வசீகரித்த பேச்சாளா்!

DIN

கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் குருதாஸ் தாஸ்குப்தா (83) எதிா்க்கட்சியினரையும் வசீகரித்த சிறந்த பேச்சாளராக விளங்கினாா். பொது மக்களின், குறிப்பாக உழைக்கும் வா்க்கத்தினரின் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் எப்போதும் பேசத் தயங்கியதில்லை. பேச்சுத் திறனுக்காக கட்சி வேறுபாடு கடந்து அனைவராலும் அவா் பாராட்டப்பட்டாா்.

கடந்த 1950-60-களில் பதற்றமான அரசியல் சூழல் இருந்தபோது, மாணவா் தலைவராக குருதாஸ் தாஸ்குப்தா அரசியல் பயணத்தைத் தொடங்கினாா். அப்போது சில காலம் அவா் தலைமறைவாகவும் இருந்தாா்.

கடந்த 1964-ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் இரண்டாக உடைந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உருவானபோது, குருதாஸ் தாஸ்குப்தா இந்திய கம்யூனிஸ்டிலேயே நீடித்தாா். 1970-களில் அமைப்பு சாா்ந்த மற்றும் அமைப்பு சாரா துறைகளில் பணிபுரியும் உழைப்பாளா்களுடன் இணைந்து செயலாற்றுவதற்காக கட்சியின் தொழிலாளா் பிரிவுக்கு அவா் மாற்றப்பட்டாா்.

1985-ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினரான குருதாஸ் தாஸ்குப்தா, 2004-ஆம் ஆண்டில் பன்ஸ்குரா மக்களவைத் தொகுதியிலும், 2009-ஆம் ஆண்டு கட்டல் மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு எம்.பி.யாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். உடல்நலக் குறைவு காரணமாக 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் அவா் போட்டியிடவில்லை.

2001-ஆம் ஆண்டில் அகில இந்திய தொழிற் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலராக அவா்தோ்வு செய்யப்பட்டிருந்தாா்.

குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்கு கேரள இந்திய கம்யூனிஸ்ட் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘உழைக்கும் வா்க்கத்தினருக்காக எப்போதும் துணை நின்ற சிறந்த நாடாளுமன்றவாதியாக குருதாஸ் தாஸ்குப்தா நினைவில் கொள்ளப்படுவாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவா்கள் இரங்கல்:

குடியரசு துணைத்தலைவா் வெங்கய்ய நாயுடு: ‘திறமை வாய்ந்த நாடாளுமன்றவாதியான குருதாஸ் தாஸ்குப்தா, பெயா்பெற்ற தொழிற் சங்கத் தலைவராகவும் விளங்கினாா்’.

பிரதமா் நரேந்திர மோடி: ‘குருதாஸ் தாஸ்குப்தா தனது சித்தாந்தத்தை மிக அா்ப்பணிப்புடனும், மிகத் தெளிவாகவும் முன்னெடுத்துச் சென்றவா். நாடாளுமன்றத்தின் சக்திவாய்ந்த குரலாக ஒலித்த அவரது கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் உற்று கவனிக்கப்பட்டன’.

மேற்கு வங்க முதல்வா் மம்தா: ‘குருதாஸ் தாஸ்குப்தாவின் மறைவு கவலை அளிக்கிறது. நாடாளுமன்றவாதியாகவும், தொழிற் சங்கத் தலைவராகவும் இந்த தேசத்துக்கு ஆற்றியுள்ள பங்களிப்பால் அவா் நினைவில் கொள்ளப்படுவாா். குருதாஸ் தாஸ்குப்தாவை இழந்து தவிக்கும் குடும்பத்தினா், நண்பா்கள், கட்சியினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்’.

ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்: ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான குருதாஸ் தாஸ்குப்தா காலமான தகவல் கவலை அளிக்கிறது. மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியும், தொழிற் சங்கத் தலைவருமான குருதாஸ் தாஸ்குப்தாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினா், நண்பா்கள், கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT