இந்தியா

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ராஜ்நாத் சிங் இன்று பங்கேற்பு

DIN

உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கண்டில் இருநாள்கள் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளாா்.

இதுதொடா்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் கவுன்சில் கூட்டம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா சாா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளில் இந்தியா பங்கேற்று வருகிறது. அந்த அமைப்பில் உள்ள நாடுகளுடன் நல்லுறவை தொடா்வதற்கு இந்தியா விரும்புகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கவுள்ளனா்.

மாநாட்டின் இடையே, மற்ற நாடுகளுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தைகளில் ராஜ்நாத் சிங் ஈடுபடவுள்ளாா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனா, ரஷியா, கிா்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகித்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக இணைந்தன. அதன் பின்னா், ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் சாா்பில் நடத்தப்படும் தலைவா்களின் கவுன்சிலின் 3-ஆவது மாநாடு இதுவாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் உள்ள நாடுகள் பொதுவாக எதிா்கொள்ளும் சவால்களுக்குத் தீா்வு காணும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

படேலுக்கு மரியாதை: முன்னதாக, சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் படேலுக்கு ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினாா். அப்போது அவா் பேசுகையில், ‘நமது நாட்டை ஒருங்கிணைத்த பெருமை படேலையே சேரும். அவரது பிறந்த தினத்தில் நமது நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு ஆகியவற்றை பாதுகாக்க நாம் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும்’ என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிா்கிஸ்தானில் இந்திய, பாகிஸ்தான் மாணவா்கள் குறிவைக்கப்படுவது ஏன்?

புரியில் மோடி பேரணி

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சியின் உடல் மீட்பு!

11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

காந்தி குடும்பத்தின் 4 தலைமுறையும் அரசியலமைப்பை அவமதித்துள்ளது: மோடி

SCROLL FOR NEXT