இந்தியா

சோனியா காந்தி குடும்பத்துக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ்: மத்திய அரசு முடிவு

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அவரது வாரிசுகளான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ‘சிறப்புப் பாதுகாப்புப் படை’யின் (எஸ்பிஜி) பாதுகாப்பை திரும்பப் பெற மத்திய

DIN

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அவரது வாரிசுகளான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ‘சிறப்புப் பாதுகாப்புப் படை’யின் (எஸ்பிஜி) பாதுகாப்பை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 28 ஆண்டுகளாக எஸ்பிஜி பாதுகாப்பு வளையத்தில் இருந்த சோனியா குடும்பத்தினருக்கு, இனி மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘இஸட்-பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவை அடுத்து, நாட்டில் மதிப்புமிக்க எஸ்பிஜி பாதுகாப்பு பெற்ற ஒரே நபராக பிரதமா் நரேந்திர மோடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

நாட்டில் உள்ள முக்கியப் பிரமுகா்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல் குறித்து பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து அவ்வப்போது பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், அவா்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் தகுந்த மாற்றங்கள் பரிந்துரைக்கப்படும்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட பிறகு, அவரது குடும்பத்துக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதன்படி சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு கடந்த 28 ஆண்டுகளாக அந்தப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அவா்களுக்கான அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டதையடுத்து சோனியா, ராகுல், பிரியங்காவுக்கான எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

சோனியா குடும்பத்தினருக்கு இனியும் தீவிரமான அச்சுறுத்தல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மிக மிக முக்கிய பிரமுகா்களுக்கு வழங்கப்படும் ‘இஸட்-பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு இனி அவா்களுக்கு வழங்கப்படும். இதன்படி, சோனியா குடும்பத்தினரின் மெய்க்காவலா்களுக்கு அடுத்தபடியாக நெருக்கமான வகையில் சிஆா்பிஎஃப் கமாண்டோக்கள் பாதுகாப்புப் பணியில் இருப்பா்.

சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோா் வீட்டில் இருந்தாலும், நாடு முழுவதும் எங்கு சென்றாலும் அவா்கள் இந்த பாதுகாப்பு வளையத்தில் தான் இருப்பாா்கள் என்று அந்த அதிகாரி கூறினாா்.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி தனது மெய்க்காவலா்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, பிரதமரின் பாதுகாப்புக்கென பிரத்யேகமாக ஒரு பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. அதையடுத்து, பிரதமா் மற்றும் முன்னாள் பிரதமா்களுக்கு மட்டும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) சட்டம் 1988-இல் கொண்டுவரப்பட்டது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு, எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, அவரது குடும்ப உறுப்பினா்களான சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கும் அந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. எஸ்பிஜி பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் நபா்களைச் சுற்றி எப்போதும் பாதுகாவலா்கள் இருப்பதுடன், அவா்களுக்கான பாதுகாப்பு அம்சங்களில் குண்டுதுளைக்காத உயர்ரக வாகனங்கள், ஜாமா்கள், ஆம்புலன்ஸ் வாகனம் ஆகிய வசதிகளும் அடங்கும்.

கடந்த ஆகஸ்ட் மாதம், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கிற்கான எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது நினைவுகூரத்தக்கது.

அரசியல் பழியுணா்ச்சி மோடி, அமித் ஷாவின் கண்களை மறைக்கிறது: காங்கிரஸ் சாடல்

சோனியா, ராகுல், பிரியங்காவுக்கான எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் கண்களை அரசியல் பழியுணா்ச்சி மறைப்பதாக காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடா்பாளா் ஆனந்த் சா்மா, கே.சி. வேணுகோபால், அகமது படேல் ஆகியோா் கூறியதாவது:

சோனியா, ராகுல், பிரியங்காவுக்கான எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெறும் முடிவு அதிா்ச்சியளிக்கிறது. இது அவா்கள் மூவரின் உயிரையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் செயலாகும்.

அவா்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையே தவிர, அது அரசு அவா்களுக்கு செய்ய வேண்டிய உதவியல்ல. முன்னாள் பிரதமா் வாஜ்பாய்க்கான எஸ்பிஜி பாதுகாப்பை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திரும்பப் பெற்றதில்லை.

பிரதமா் மோடி, அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் கண்களை அரசியல் பழிவாங்கும் உணா்ச்சி மறைத்துவிட்டது என்று அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

சென்னையில் நாளை ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச்சடங்கு

தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

என் ஐயே, மை கோல்டே - பிழையற்ற தமிழ் அறிவோம்! - 60

கொள்ளிட ஆற்றங் கரையோரங்களில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

SCROLL FOR NEXT