காந்தி கொலை வழக்கை உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரித்தால் "கோட்சே ஒரு கொலைகாரர், ஆனால் தேசபக்தர்" என்றே தீர்ப்பு வரும் என காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி டிவீட் செய்துள்ளார்.
பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி நில வழக்கில், சர்ச்சைக்குரிய அந்த இடம் ஹிந்துக்களுக்கே சொந்தமானது என்றும், அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு இருதரப்புக்கும் சாதகமாகவே வந்துள்ளதாகவும், அதனால் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் எனவும் பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம், சட்டத்தின்படியும், ஆதாரத்தின்படியும் தீர்ப்பு வழங்காமல் நம்பிக்கையின்பேரில் தீர்ப்பு வழங்கியிருப்பதனால் அரசியல் தலையீடு இருக்கலாம் எனவும் தீர்ப்பு குறித்து ஒருபக்கம் கருத்துகள் பதிவாகி வருகிறது.
இதனிடையே, காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தி அயோத்தி தீர்ப்பு குறித்து டிவிட்டரில் பதிவிடுகையில்,
"காந்தி கொலை வழக்கை உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரித்தால், 'கோட்சே ஒரு கொலைகாரர், ஆனால் அவர் தேசபக்தரும்கூட' என்றே தீர்ப்பு வந்திருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.