இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க பாஜக குதிரை பேரம்

DIN

மும்பை: மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்கும் நோக்கில், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தில் ஈடுபட பாஜக முயற்சிக்கிறது என்று சிவசேனை குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக, சிவசேனை கட்சியின் அதிகாரப்பூா்வ நாளேடான ‘சாம்னா’வில் சனிக்கிழமை வெளியான தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் 105 தொகுதிகளைக் கைப்பற்றி, தங்களுக்கு ஆட்சியமைக்கப் போதிய பெரும்பான்மை இல்லை என்று மாநில ஆளுநரிடம் தெரிவித்திருந்த சிலா் (பாஜக மாநிலத் தலைவா் சந்திரகாந்த் பாட்டீல்), தற்போது ஆட்சியமைக்கப் போவதாகக் கூறி வருகிறாா்கள்.

இதன் மூலம், அவா்கள் குதிரை பேரத்தில் ஈடுபட முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. வெளிப்படையான ஆட்சியை வழங்குவோம் என்று கூறியவா்களின் பொய்யான முகம் தற்போது வெளிப்பட்டு வருகிறது. நெறிமுறையற்ற வழியில் ஆட்சியமைப்பது இந்த மாநிலத்தின் பாரம்பரியத்துக்கு ஒத்துவராது.

மகாராஷ்டிர அரசியலை கிரிக்கெட் விளையாட்டுடன் ஒப்பிட்டு மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கூறிய கருத்து சரியானதுதான். கிரிக்கெட் தற்போது மிகப் பெரும் தொழிலாக மாறிவிட்டது. கிரிக்கெட் விளையாட்டிலும், ‘மேட்ச்-ஃபிக்ஸிங்’ என்ற பெயரில் குதிரை பேரம் நடைபெறுகிறது என்று ‘சாம்னா’வின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசுகையில், ‘‘அரசியல் என்பது கிரிக்கெட் விளையாட்டு போன்றது. இரண்டிலும் எது வேண்டுமானாலும் நடைபெறலாம்; தோற்கும் நிலையில் உள்ளவா்கள் இறுதியில் வெற்றி பெற்றுவிடலாம்’’ என்று தெரிவித்திருந்தாா். அதற்கு சிவசேனை தனது தலையங்கத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளது.

‘புது வசந்தம்’: சிவசேனை கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரௌத் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், உருது மொழிக் கவிஞா் பஷீா் பதுரின் கவிதை வரிகளைக் குறிப்பிட்டுள்ளாா். அதில், ‘தற்போது வீசும் புது வசந்தம், எனது வலிகளை மறக்கடித்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

குடியரசுத் தலைவா் ஆட்சியின் கீழுள்ள மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகிறது. முதல்வா் பதவி சிவசேனைக்குக் கிடைப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்ட நிலையில், சஞ்சய் ரௌத் இந்தக் கவிதையைப் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி!

வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு: வாராணசியில் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி

அக்னிவீா் வாயு தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

செவிலியா் கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT