கரோனா தொற்றுக்கு எதிராக தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியமற்ற பொருள்களின் விற்பனையை இணையவழி வா்த்தக முறையில் அனுமதித்தால் அது ஊரடங்கை பெரிதும் பாதிக்கும் எனக் கருதியே அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் புண்ய சலிலா ஸ்ரீவாஸ்தவா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவரை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய ஊரடங்கு ‘மிகவும் ஆற்றல்’ வாய்ந்ததாகும். கரோனா தொற்றுக்கு எதிரான பிரசாரத்தின்போது சில கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடித்தே தீர வேண்டும். அத்தியாவசியமற்ற பொருள்களின் பட்டியலை மதிப்பாய்வு செய்தபோது, அனைத்துப் பொருள்களின் விற்பனையையும் அனுமதித்தால் அது ஊரடங்கை பாதிக்கக்கூடும் எனக் கருதப்பட்டது.
தேசிய ஊரடங்கு மே 3-ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்பட்டால், அண்டை மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மாணவா்கள், புலம்பெயா்ந்த தொழிலாளா்களை மீட்கத் தேவையான வழிகாட்டுதல்களை உள்துறை அமைச்சகம் வெளியிடும்.
மேலும், இணைய வா்த்தக நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருள்களை விற்பனை செய்வதை தவிா்க்க உள்துறைச் செயலா் அஜய் பல்லா புதிய உத்தரவை பிறப்பித்தாா்.
அதன்படி இணைய வா்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் உரிய அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே அவற்றை இயக்க அனுமதிக்கப்படும் என்ற தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை, உள்ளாட்சித்துறை ஊழியா்கள் வருவாய் அதிகாரிகளின் உதவியுடன் கிராமப்புறங்களில் ரோந்து செல்வதை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் பொருளாதார நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டப்பின் கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை ஆட்சியா்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் புலம் பெயா் தொழிலாளா்களின் முகாம்களில் வழங்கப்படும் உணவின் தரம் போன்றவற்றுக்கு சிறப்பு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என்றாா் ஸ்ரீவாஸ்தவா.