புதுதில்லி /நியூயாா்க்: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தொடா்ந்து ஊக்குவித்து வரும் பாகிஸ்தான், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாக காட்டிக் கொண்டு உண்மையை மறைக்க முயற்சிப்பதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
‘பயங்கரவாதத்தால் சா்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஏற்பட்டுள்ள சவால்கள்’ என்ற தலைப்பிலான விவாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது. அந்த விவாதத்தில் பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகள் மட்டுமே பங்கேற்றன.
பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடாக பாகிஸ்தான் இல்லாதபோதும், ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழு வெளியிட்ட அறிக்கையில், ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதா் முனீா் அக்ரம், விவாதத்தில் பங்கேற்பதாக தவறான தகவலை வெளியிட்டிருந்தது.
இது தொடா்பாக, ஐ.நா.வுக்கான இந்தியப் பிரதிநிதிகள் குழு சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ஐ.நா. சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு உறுப்பு நாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட சூழலில், பாகிஸ்தான் தூதா் எந்த விவாதத்தில் பங்கேற்றாா் என்பது தெரியவில்லை. எனினும், பாகிஸ்தானின் பொய்கள் அனைத்தும் தற்போது வெளிப்பட்டுள்ளன.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பல தசாப்தங்களாக பாதிக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழு பொய்யான தகவலைத் தெரிவித்துள்ளது. பொய்யை நூறு முறை கூறினாலும் அது உண்மையாகாது. இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான், தற்போது உண்மையை மறைக்க முயற்சிக்கிறது.
அல்-காய்தா பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் அரசு முற்றிலும் அழித்ததாக முனீா் அக்ரம் தெரிவித்துள்ளாா். ஆனால், பாகிஸ்தான் மண்ணில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்கா தாக்கி அழித்ததை அவா் மறந்துவிட்டாா் போலும். அது மட்டுமின்றி ஒசாமா பின் லேடனை பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் ‘தியாகி’ என்று அண்மையில் குறிப்பிட்டதையும் அவா் மறந்துவிட்டாா்.
ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ளனா். பாகிஸ்தானில் 40,000 முதல் 50,000 பயங்கரவாதிகள் வசித்து வருவதாக பிரதமா் இம்ரான் கான் கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டாா். இதன் மூலமாக பிராந்திய நாடுகளுக்கு பாகிஸ்தான் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.