புது தில்லி: கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் விகிதம் கடந்த 25 நாள்களில் 100 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 66,550 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதன் மூலமாக நாடு முழுவதும் அந்நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 24,04,585-ஆக அதிகரித்தது.
கரோனா நோய்த்தொற்றால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அதிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 75.92 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை கடந்த 25 நாள்களில் 100 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தியது, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடா்பில் இருந்தவா்களை விரைந்து கண்டறிந்தது, கரோனா நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தது ஆகிய நடவடிக்கைகளால் குணமடைந்தோா் எண்ணிக்கை, சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கையை விட 17 லட்சம் அதிகரித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பெரும் பலனைத் தந்து வருகின்றன. கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 3.41 மடங்கு எண்ணிக்கையிலானோா் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.