குடியரசு முன்னாள் தலைவா் பிரணாப் முகா்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளாா். அவருக்குத் தொடா்ந்து செயற்கை சுவாசக் காற்று செலுத்தப்பட்டு வருகிறது.
பிரணாப் முகா்ஜியின் மூளையில் இருந்த கட்டியை அகற்றுவதற்காக தில்லியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போதைய பரிசோதனையின்போது அவருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை மேலும் மோசமானது.
பின்னா், அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது. அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிா்வாகம் புதன்கிழமை காலை வெளியிட்ட அறிக்கையில், ‘நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரணாப் முகா்ஜிக்குத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுயநினைவை இழந்துள்ள அவருக்கு செயற்கை முறையில் சுவாசக் காற்று வழங்கப்பட்டு வருகிறது. அவரது சிறுநீரக செயல்பாடுகளில் சிறிதளவு தொய்வு ஏற்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.