இந்தியா

மத்திய பட்ஜெட் 2020 - 21: வேளாண்மை, சுகாதாரத் துறைக்கு முன்னுரிமை!

DIN

வருமான வரி விதிப்பில் புதிய வழிமுறை, வரி விகிதம் குறைப்பு, வேளாண்துறைக்கு கூடுதல் நிதி, உள்கட்டமைப்பு, வளர்ச்சி ஊக்குவிப்பு, சுகாதாரத்துறை திட்டங்கள் ஆகிய அம்சங்கள் மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துள்ள இந்தச் சூழலில், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் சனிக்கிழமை தாக்கல் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்.
மக்களவை சனிக்கிழமை காலை 11 மணிக்கு கூடியதும் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவைத் தலைவர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார். அப்போது, வருமான வரி விதிப்பில் புதிய வழிமுறையை அவர் அறிவித்தார். புதிய திட்டத்தின்படி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது. மேலும், வருமான வரி விலக்கு பெறுவதற்கான 100-க்கும் மேற்பட்ட இனங்களில், 70 இனங்கள் நீக்கப்பட்டுள்ளன. வரிக் கணக்கு தாக்கல் செய்யும் முறையை எளிமைப்படுத்தவே வரி விலக்கு சலுகைப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
இதுதவிர, வேளாண் துறைக்கு கூடுதல் நிதி, நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் டிவிடெண்ட் விநியோக வரி ரத்து, உள்ளூர் உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கு பொருள்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு ஆகிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள் பின்வருமாறு:
வேளாண் துறைக்கு முக்கியத்துவம்: வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேளாண்துறைக்கு மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, வேளாண் துறைக்கு ரூ.1.60 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாயத்தையும், விவசாயிகள் நலனையும் கருத்தில்கொண்டு 16 அம்ச திட்டத்தை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்குவதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வேளாண் பொருள்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு விவசாயிகள் கொண்டு செல்வதற்காக கிசான் ரயில் சேவையும், உள்நாட்டுக்கும், வெளிநாட்டுக்கும் எடுத்துச் செல்வதற்கு விமான சேவையும் தொடங்கப்படவுள்ளன. வேளாண் திட்டங்களின் ஒரு பகுதியாக சூரியமின் உற்பத்தியைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கி வைப்பு நிதிக்கு ரூ.5 லட்சம் காப்பீடு: வங்கி வைப்பு நிதிக்கான காப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கியில் நிரந்தர வைப்பு நிதி வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் பணத்துக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைத்துள்ளது.
எல்ஐசி பங்கு விற்பனை: நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை மற்றும் காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை (எல்ஐசி) பங்குச் சந்தையில் பட்டியலிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், எல்ஐசி-யில் அரசின் பங்கு விலக்கல் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது. இதேபோல் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை முழுமையாக விற்பனை செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் டிவிடெண்ட் விநியோக வரி ரத்து செய்யப்படும்.
வீட்டுக் கடனுக்கு வட்டிச் சலுகை நீட்டிப்பு: குறைந்த விலை வீட்டு கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டிக்கு ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை பெறுவதற்கான கால வரம்பு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தனியார் ஒத்துழைப்பில் 150 ரயில்கள்: அரசு-தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் 150 ரயில்கள் இயக்கப்படும். இதுதவிர, சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் தேஜஸ் போன்ற விரைவு ரயில்கள் இயக்கப்படும். ரயில் தண்டவாளங்கள் அருகில் சூரிய மின்உற்பத்தி சாதனங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மக்கள் மருந்தகங்கள்: வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் "ஜன் ஒளஷதி' (மக்கள் மருந்தகம்) திறக்கப்படும். தற்போது 6,000 மருந்துக் கடைகள் உள்ளன. குறைந்த விலையில் மருந்துப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதால் இந்த மருந்தகங்கள் ஏழை, எளிய மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளன.
போக்குவரத்துத் துறை: சென்னை-பெங்களூரு இடையே விரைவுச் சாலைக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
கர்நாடகம், தமிழகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக இந்த விரைவுச் சாலை அமைக்கப்படும். "உடான்' திட்டத்தின் கீழ் 100 விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
எளிமையாகிறது ஜிஎஸ்டி தாக்கல்: ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்யும் முறை, வரும் ஏப்ரல் முதல் மேலும் எளிமைப்படுத்தப்படும். ரூ.350 லட்சம் கோடி பொருளாதார இலக்கை எட்டுவதற்காக, வங்கி நிர்வாகத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும்.
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்: தொல்லியல் துறையின் ஆய்வுப் பகுதியான தூத்துக்குடி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
பற்றாக்குறை 3.5%: நடப்பு நிதியாண்டில் வருவாய்க்கும்-செலவுக்கும் இடையேயான பற்றாக்குறையை 3.3. சதவீதத்துக்குள் வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது, 3.8 சதவீதமாக அதிகரித்து விட்டது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் நிதியாண்டில் பற்றாக்குறை விகிதத்தை 3.5 சதவீதத்துக்குள் வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விலை உயரும் பொருள்கள்: உள்ளூர் உற்பத்தியாளர்களின் நலன் கருதி காலணி, ஃபர்னிச்சர் பொருள்கள், எழுதுபொருள்கள், பொம்மைகள், சமையல் உபகரணங்கள் ஆகியவற்றின் இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது. இதனால், இந்தப் பொருள்களின் விலை அதிகரிக்கும். இதுதவிர, சிகரெட், புகையிலை பொருள்கள், பீங்கான் பொருள்கள், எஃகு, செம்பு, வாகன உதிரி பாகங்கள், சில விளையாட்டு உபகரணங்கள், சில செல்லிடப்பேசி உதிரி பாகங்கள் ஆகியவற்றின் விலை உயர்கின்றன.
விலை குறையும் பொருள்கள்: சுத்திகரிக்கப்பட்ட டெரிப்தாலிக் அமிலம், பத்திரிகை அச்சுக் காகிதம், மெல்லிய அச்சு காகிதம், சூரிய மின்உற்பத்தி சாதனங்கள் ஆகியவற்றின் விலை குறைகிறது.

சென்னை-பெங்களூரு விரைவு சாலை திட்டம் விரைவில் தொடங்கப்படும்
"சென்னை-பெங்களூரு இடையே விரைவு சாலை திட்டம் விரைவில் தொடங்கப்படும்' என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
கர்நாடகம், தமிழகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் வழியாக இந்த விரைவு சாலை அமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுவந்த போதிலும், கர்நாடக அரசு விரைவு சாலை அமைக்கும் பணியைத் தொடங்கத் தேவையான அனைத்து நடைமுறைகளையும் நிறைவு செய்யும் நிலையில் உள்ளது. கர்நாடக மாநிலம், ஹொசக்கோட்டே நகரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 262 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

SCROLL FOR NEXT